Pages

Wednesday, January 16, 2019

ஶ்ரீ ப்ருஹஸ்பதி த்யான மந்திரம், ஸ்தோத்திரம்




இன்று ஶ்ரீ சாணு புத்திரன் அவர்களுடைய ஃபேஸ்புக் பதிவ. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கு நன்றி சொல்லி பகிர்கிறேன்.

பெரியவா சரணம்.
மிக நீண்ட பதிவாகத் தான் அமையும் என தோன்றுகிறது. காரணம் மனசு முழுக்க ஒரு திருப்தி… ஒரு திகைப்பு… ஒரு ஆஸ்வாசம்… சங்கரா!\
இன்று காலையில் வீட்டின் அருகிலே உள்ள ஸ்ரீவிஜயகணபதி ஆலயத்துக்குச் சென்று இருந்தேன். தரிசனம் முடித்து பிரதக்ஷிணம் செய்துவிட்டு நமஸ்கரித்து எல்லோரையும் நன்னா வாழவையுங்கோ ஈஸ்வரா என பிரார்த்தித்து எழுந்தவனை நோக்கி ஒரு பெரியவர் மெதுவாக நடந்து வந்தார்.
“என்னப்பா… சௌக்யமா இருக்கியா? ரொம்ப நாள் கழிச்சு கோவிலுக்கு வந்துருக்கே போலருக்கே” என்றபடியாக அருகில் வந்தவரைக் கண்டு திகைத்தே விட்டேன்.
காரணம் அவருக்கும் நம் உம்மாச்சீ போலவே ஒரு கண்ணிலே பூ விழுந்திருந்தது. ஆனால் அவரை இதற்கு முன்பாக அடியேன் கண்டதாகத் தோன்றவில்லை. ஆனால் என்னை நன்றாகத் தெரிந்தவர் போலப் பேசினார். உண்மையில் வெகு நாட்களுக்குப் பிறகு இன்று உள்ளகரம் ஸ்ரீவிஜய கணபதி திருக்கோவிலுக்குச் சென்றிருந்தேன்.
“சொல்லூடாப்பா… என்ன பண்ணிண்டுருக்கே… எப்படி இருக்கே?” என்றவரிடம், சமீபகாலமாக க்டந்த மே 29, 2018 முதலாக ஐயனின் கருணையாலே நடந்து வருகின்ற உலகலாவிய லோகக்ஷேம பிரார்த்தனையான ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் சஹஸ்ர காயத்திரீ ஜபம் பற்றிக் கூறினேன்.
மிகவும் சந்தோஷப்பட்ட அவரோ, “எல்லாரும் தேவ குருவான பிருஹஸ்பதியை ஸ்தோத்தரிக்க மறந்துண்டு வர்றா. குரு ப்ரும்மா குரூர் விஷ்ணூ.. மந்திரம் மட்டும் தான் எல்லாருக்கும் தெரியறது. அவருக்கான த்யான மந்திரத்தையும் ஸ்லோகத்தையும் தெரிஞ்சுண்டு அதைச் சொல்லி பிரார்த்திக்கணுமாச்சே” என்றவர்… “ஒங்கிட்டே பேனா பேப்பர் இருக்கா? நான் சொல்றேன் எழுதிக்கோ” என்றார்.
மிகுந்த ஆச்சர்யத்துடன், கோவிலில் என் அருகிலே நின்றிருந்த பக்தர் ஒருவரிடம் இருந்து பேப்பரும் பேனாவும் வாங்கிண்டு எழுதிக்கொள்ளத் தொடங்கினேன். ஸ்லோகத்தின் அர்த்தத்தை அவர் கூறக் கேட்டறிந்ததும் மனம் வெகுவாக ஆனந்திக்கத் தொடங்கியது. இன்றைய பொழுதிலே அனைவருக்கும் மிகவும் அத்யாவசியமான ஒன்று தான் நமக்கு இன்று இந்த பெரியவர் கூறியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டதாலே, அதனையே இன்றைய தினம் இந்தப் பதிவிலே பகிர்கின்றேன்.

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

ஸ்ரீப்ருஹஸ்பதி த்யான மந்திரம்:

தப்த காஞ்சன வர்ணாபம் சதுர்புஜ ஸமன்விதம்
தண்டாக்ஷ ஸூத்ர மாலஞ்ச கமண்டலு வரான்விதம்
பீதாம்பரதரம் தேவம் பீதகந்தா நு லேபநம்
புஷ்பராக மயாபூஷம் வசித்ர மகுடோஜ்வலம்
ஸ்வர்ணாஸ்வ ரமாரூடம் பீதத்வஜ ஸுசோபிதம்
மேரோ: ப்ரதக்ஷிணம் ஸம்யக் ஆசரந்தம் ஸுசோபநம்
அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞ்சம் ஸுரபூஜிதம்
ஸர்வகாமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும்ஸதா.
இதனுடைய அர்த்தமானது, ”நன்றாக உருக்கப்பட்ட தங்கம் போன்ற காந்தி உடையவரும், நான்கு கரங்கள் உடையவரும், தண்டம், ஜபமாலை, கமண்டலு, ஆகியவைகளை வைத்திருப்பவரும், பீதாம்பரம், பீதவர்ணமான சந்தனம் உள்ளவரும், புஷ்பராக மயமான ஆபரணம் உள்ளவரும், விசித்ரமான கிரீடமணிந்தவரும், ஸ்வர்ண வர்ணமான குதிரை பூட்டிய ஸ்வர்ண ரதத்தில் பவனிவருபவரும், அழகானவரும் இஷ்டத்தை அளிப்பவரும் எல்லாம் அறிந்தவரும், தேவர்களாலே பூஜிக்கப்பட்டவருமான குருவை ஸகல இஷ்டமும் ஸித்திப்பதற்காக நமஸ்கரிக்கின்றேன்” என்பதாகும்.

ப்ருஹஸ்பதி ஸ்தோத்திரம்:

ப்ருஹஸ்பதி: ஸுராசார்ய: தயவான் சுபலக்ஷண:
லோக த்ரய குரு: ஸ்ரீமான் ஸர்வக்ஞ: ஸர்வ கோவித
ஸர்வேச: ஸர்வதாபீஷ்ட: ஸர்வஜித் ஸர்வபூஜித:
அக்ரோதனோ முநிச்ரேஷ்ட: நீதிகர்தா குரு: பிதா
விஸ்வாத்மா விஸ்வகர்தா ச விஸ்வயோநிரயோநிஜ:
பூர்புவ: ஸுவ” ப்ரபுச் சைவபர்த்தாசைவ மஹாபல:
பஞ்ச்ச விம்சதி நாமானி புண்யாநி நியதாத்மனா
நந்த கோப க்ருஹாஸீன விஷ்ணுநா கீர்த்திதா
ய: படேத் ப்ராதருத்தாய ப்ரயத: ஸுஸமாஹித:
விபரீதோபி பகவான் ப்ரீத: ஸ்யாத்து ப்ரஹஸ்பதி:
ய: ச்-ருணிதி குருஸ்தோத்ரம் சிரம் ஜீவேத் நஸம்சய:
கோஸஹஸ்ர பலம் தஸ்ய நிஷ்ணோர்வச நதோ பவேத்
ப்ருஹஸ்பதி க்ருதாபீடா நகதாசித் பவிஷ்யதி.

இந்த ஸ்லோகமானது ஸ்ரீகுரு ப்ருஹஸ்பதியின் கவச மந்திரமாம். இதனில் குருவின் நாமாக்களைக் கூறி அந்தந்த அங்கங்களை காக்கும்படியாக வேண்டப்படுகிறதாம். ஸ்தோத்திரத்திலும் குருவின் 25 நாமாக்கள் கூறப்பட்டன. இதை நந்தகோபன் வீட்டில் கிருஷ்ணனாகத் தோன்றிய பகவான் கூறினாராம். இந்த ஸ்துதியை பக்தியுடனாக காலையும் மாலையும் படித்தாலோ, படிக்கக் கேட்டாலோ குரு நம் ஜாதக ரீதியாக விபரீதமான கெட்ட பயனைத் தருவதாக இருந்தாலும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷமடைந்து தீர்க்காயுளையும், சகல சம்பத்துக்களையும் தருவாராம். ஆயிரம் கோதானம் செய்த புண்ணியம் உண்டாகும்படியாக இந்த ஸ்தோத்திரத்தை ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கூறியிருக்கிறாராம்.
மேலும் நித்யமும் இதனைச் சொல்லிவந்தாலும், வியாழக் கிழமை தோறும் குரு பகவானுக்கு கொண்டைகடலை ஊறவைத்து அதனை வாழை நாரிலே கோர்த்து மாலை செய்து போட்டு, ஒரு புஷ்பம் சமர்ப்பித்து, மனதார பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். நைவேத்யம் என்ன செய்யனும்னு கேட்டதற்கு, அவா அவாளாலே என்ன முடியுமோ அதனைச் செய்யலாம். “ஒண்ணு முக்யம்டா கொழந்தே! இந்த ஸ்லோகம் வாஸிச்சு ப்ரார்த்திக்கும் போது மனசுல ஸ்ரத்தையும் பக்தியும் அவஸ்யம். ஒரு துளி தீர்த்தம் தந்தாக்கூட பகவான் சந்தோஷப்பட்டுடுவான். முக்யமே இங்கே மனசு லயிச்சு பண்றதும், ஸ்ரத்தையோட சமர்ப்பிக்கறதும் தான்” என்றாரே பார்க்கணும். திகைச்சு போய்ட்டேன். காரணம், அவர் கூறிய முறையானது, நம் உம்மாச்சீ பேசறது போலயே இருந்தது. அந்த அன்பு, அந்த பாசம், அந்த குரலின் முதிர்ச்சி, அந்த ஸ்திரமான பார்வை… அடேங்கப்பா… உடம்பை என்னவோ பண்ணிடுத்து. அவருக்கு கோயிலுக்குள்ளே நமஸ்கரிக்கப் படாது என்பதாலே மானசீகமாக அவருடைய பாதங்களை ஒரு முறை பார்த்து பெருமூச்சு விட மட்டுமே முடிஞ்சது. ஆனா அவரோ அதை கண்டுண்டுட்டாப்ல தெரிஞ்சது. காரணம், என்னை ஒரு முறை தீர்க்கமாக பார்த்துவிட்டு, புன்முறுவலோடு கோவிலின் பிரதான வாயிலை நோக்கி நகர்ந்தார். என் கால்களை யாரோ அங்கேயே கட்டிப் போட்டுட்டாப்ல இருந்தது. என்னால நகர முடியலை.. நகரணும்னு கூடத் தோணலை. அவர் கோவிலை விட்டு நகர்ந்து சில நிமிடங்கள் கழித்தே என்னால் நகர முடிந்தது என்பதை நன்றாக உணர்ந்தேன். பின்னர் மறுபடியும் ஸ்ரீராமர் சன்னதிக்கும் அவர் எதிரே கைகூப்பிய வண்ணமாக நின்று கொண்டிருந்த அனுமன் சன்னதிக்கும் நடுவே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் பிள்ளையாரை நோக்கிச் செய்துவிட்டு, பேனா கொடுத்த அன்பருக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பினேன். அவரோ, “சார்… எப்படியும் நிச்சயமாக இதையும் உங்க பேஸ்புக்லே ஷேர் செய்யுவேள்னு தோன்றது. நானும் அதனை காப்பி பண்ணிக்கறேன். என் பையனுக்கு ஜாதகரீதியாக இப்போ குருபகவானை ப்ரார்த்திக்கனும்னு ஜோஸ்யர் சொன்னார்; இப்படி அந்த பெரியவர் சொல்லி, அதனை எழுத எங்கிட்டேர்ந்து பேப்பரும் பேனாவும் நீங்க வாங்கிண்டத பார்த்தா நேக்காகவே அந்த ஈஸ்வரன் இதை இன்னிக்குச் சொன்னாப்ல தோன்றது. நான் அவனுக்காகத் தான் தினமும் இங்க வந்து எல்லா தெய்வங்களையும் தரிசித்து நவக்கிரஹ பிரதக்ஷிணம் செய்து வருகிறேன். மனசார பிரார்த்திச்சுண்டு பிரதக்ஷணம் செஞ்சுண்டுருக்கும்போது நீங்க என் கைலே பெரியவா சரணம் எனச் சொல்லிண்டே பெரியவா படத்தைக் கொடுத்தப்போ கூட மனசார நினைச்சேன். பெரியவா இருக்கா நமக்கு; அவர் காப்பாத்துவார்-நு. கண் கலங்க அவர் கூறியதே என்னை இன்று இதனை எல்லாருக்குமாக பகிர்ந்து விடுன்னு ஐயன் சொன்னதாகவே தோணிச்சு.
தேவகுருவான ப்ருஹஸ்பதி எனும் குருபகவானின் அருள் கிடைக்க வேண்டி நாம் செய்யக் கூடிய பிரார்த்தனைக்கான தியான ஸ்லோகம் மற்றும் ஸ்தோத்திரத்தை இன்றைய தினம் பெரியவர் ஒருவர் கூறக் கேட்டறிந்தது மனதுக்கு மிகமும் ரம்மியத்தைத் தந்தது. வந்தவர் உம்மாச்சீயா..? தேவகுருவேயா…? அல்லது ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவா… எப்படியிருந்தாலும், இந்த ஸ்லோகத்தை அவர்கூற எழுதுகையிலே எம் ஐயன் ஸ்ரீமஹாபெரியவா எனும் உம்மாச்சீயே மனசுல நிறைஞ்சார் என்பது மட்டும் சத்யம்.
எத்தனையோ பேர்கள் தங்களுக்கு விவாஹ ப்ராப்தம், சத்புத்ர பாக்கியம், நல்ல கல்வி, ரோக நிவாரணம், கஷ்ட நிவர்த்தி, ஜாதக ரீதியாக குருபகவானுக்குச் செய்யவேண்டிய பரிகாரம் முதலியன பற்றி எப்படித் தெரிந்து கொண்டு என்ன செய்வது என புரியாமல் தவிப்பவர்கள் உள்ளனரே! அவர்களுக்கு இந்த ஸ்லோகமும் ஸ்தோத்திரமும் ஒரு மஹா பொக்கிஷமாச்சே என்றே தோன்றியது. அதுமட்டுமல்ல, இன்று இதைச் சொல்லி வைத்து, எல்லார்க்கும் குடு என்பதற்கும் உணர்வில் தோன்றவும் செய்துட்டாரே!
சங்கரா! பலன் வேண்டுபவர்கள் இதனை காப்பி செய்து கொண்டு தினமும் சொல்லிப் பயன் பெறுங்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு நினைச்சு பகிர்வை அடியேன் செய்துவிட்டேன். இனி பலன் பெறவேண்டிய உங்களுடைய பங்கினைச் செய்து பயன் பெறவைக்க வைக்க வேண்டியது அவருடைய அருள். பெரியவா சரணம். பெரியவா சரணம். ஸ்ரீமஹாபெரியவா அபயம்.
தைத்திருநாள் பொழுது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். எல்லோருக்கும் நல்லதோர் வாசல் திறக்கப்படட்டும். எல்லோரும் ஆனந்தமாக வாழ வழிவகை செய்யவல்ல தர்ம நியாயம் எல்லோர் மனதிலும் நிறையட்டும். வாழ்க வளமோடு!
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
குறிப்பு: அந்தப் பெரியவர் சொல்லச் சொல்ல எழுதிக் கொண்டது இது. இதனில் பிழை ஏதும் அறிந்த ஆன்றோர் கண்டால் தயவு செய்து அடியேனுக்குச் சொல்வதன் மூலமாக பதிவைத் திருத்திக் கொள்ளவும், அந்த பயனை அனைவரும் அடையவும் வழிவகை செய்யுங்களேன்.
ஸ்ரீகுருப்யோ நம:

No comments: