Pages

Wednesday, July 16, 2008

புத்திரனில்லாதவர்.. தொடர்ச்சி



கோதானம் செய்பவன் நல்ல பசு மாட்டை கன்றோடு, நல்ல நாளில், நல்ல க்ஷேத்திரத்தில், நல்ல பாத்திரத்துக்கு தானஞ்செய்ய வேண்டும். தானம் வாங்குபவர் நல்ல பாத்திரமாக இல்லாவிட்டால் கொடுத்தவன் வாங்கியவன் அனைவருமே நரகத்தை அடைவர். வாங்கியவன் அதை சரியாக பராமரிக்க வேண்டும். அதை விற்று பலர் அதை பங்கு போட்டுக்கொள்ள கூடாது. ...

புண்ணியமில்லாத காலம், இடம்; நல்ல பாத்திரம் அமையாதது போன்ற குறைகள் இருந்தாலும், விருஷோற்சர்கம் என்கிற கர்மா, அதன் மகிமையால், உத்தமமான க்ஷேத்திரத்தில், உத்தம காலத்தில், உத்தமமான பாத்திரத்துக்கு கொடுத்ததற்கு என்ன பலன் உண்டோ அதே பலன் நிச்சயமாக கைகூடும்....இன்று இருப்போர் நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகையால் நல்ல காரியங்களையும் நற்கருமங்களையும் நாளை செய்வோம் என்று நினைக்காமல், எண்ணிய அன்றே செய்வது நல்லது.

புத்திர பாக்கியம் உடையவன் தன் கையால் எந்த ஒரு நற்கருமத்தையும் செய்யாமல் இறப்பனேயாகில் அவன் நற்கதியை அடையமாட்டான்.
புத்திரனே இல்லாதவன் நல் வினைகளை செய்து மரிப்பனாகில் அவன் நற்கதியை அடைவான். யாகங்கள், கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வதைவிட விருஷோற்சர்கம் செய்வது நல்லது.சி

கார்த்திகை பௌர்ணமியிலாவது, வேறு ஒரு எந்த நல்ல தினத்திலாவது உத்தராயணத்திலாவது, த்வாதசியிலாவது தூய மனதோடு, உத்தமமான திருத்தலத்தில், நல்ல திதி, யோக, நக்ஷத்திரத்தில், நல்ல முறையில் வேத சாஸ்திரம் நன்கு கற்ற அந்தணர்களை கொண்டு சுபம் , ஹோமம் முதலியவற்றை செய்வித்து தன்னை தூய்மையக்கிக்கொண்டு நவ கிரகங்களை பூசித்து, மாதுர் தேவதைகளை பூசித்து பூர்ணாஹுதி கொடுத்து, மஹா விஷ்ணுவை குறித்து சிராத்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக்கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால் நன்கு அலங்கரித்து, மேலும் 4 கன்று களோடு அந்த காளைக்கன்றினை அக்னியை வலம் வரச்செய்து வட திசை நோக்கி நின்று அந்த ரிஷபக்கன்றை நோக்கி "தருமமே, நீயே ரிஷபமானாய். பிரமனாலே ஆதியிலே படைக்கப்பட்டய்!” என்று சொல்லி, இறந்தவனுக்காக தானஞ்செய்தால் அவனைக்குறித்தும், செய்பவன் தனக்குத்தானே செய்வனானால் தன்னை குறித்தும் அதன் வாலில் மந்திர நீர் விட்டு அந்த நீரை தன் கரத்தால் ஏந்தி தன் சிரசின் மீது ப்ரோஷித்துக்கொண்டு கன்றுகளை விட்டு விட வேண்டும்.

இப்படியாக ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறாங்க. மேலும் கூடுதலாக பொது பயன்பாட்டுக்காக நீர் நிலைகள் அமைக்கிறது; பசுக்கள் மேய புல்வெளிகள் அமைக்கிறது; சத்திரம் கோவில் கட்டுவது; வைத்திய சாலை, பள்ளிக்கூடம் அமைக்கிறது இது போன்றவை எல்லாமுமே நல்ல கதியை தரும்.

2 comments:

ambi said...

//விருஷோற்சர்கம்//

கோதானம் வேற இது வேறயா? (ரிஷபம்னு சொல்லி இருக்கறதால இந்த சந்தேகம்).

பொதுவா கோதானத்துல பால் தரக்கூடிய நிலையில் இருக்கற நல்ல பசுவை தான் தானமா குடுப்பாங்க. ரிஷபம்...?

திவாண்ணா said...

ஆமாம் அம்பி, காளையேதான். காளை கன்னு குட்டி. கோதானம் வேறே. அதுக்குதான் நல்ல நேரம் நல்ல இடம் நல்ல பாத்திரம்ன்னு சில சட்ட திட்டங்கள் இருக்கு, இதுக்கு இல்லைன்னு எழுதி இருக்கேனே?

இப்ப பழக்கம் போயிட்டுது. அதனால பாத்து இருக்க வாய்ப்பு இல்லை. இன்னைய பதிவை பாருங்க. புரிஞ்சுடும்.