Pages

Monday, July 28, 2008

புராணங்கள்


இது ஒரு அவசர கால பதிவு.
திருப்பி வாய்க்காலுக்கு தோண்டறாங்க.
அதனால எதுக்கும் இருக்கட்டும்ன்னு இப்ப இதை பதியறேன்.

சில நாட்கள் முன் ஒரு பதிவில் ஒரு கேள்வியை படிக்க நேரிட்டது. புராணங்கள் பற்றி சில கேள்விகள் எழுப்பபட்டு இருந்தது. கேட்கப்பட்டவர் அப்புறமாக பதில் சொல்லுவார், அதற்கு திறமை இருக்கு என்றாலும் -. இதே போல நான் பங்கு கொள்கிற குழுவிலும் கேள்விகள் விமர்சனங்கள் இருந்தன. அதனால் இதை எழுத ஒரு உந்துதல் இருந்தது.

மனிதன் தன் வாழ்கையை எப்படி அமைத்துக்கொண்டால் சுகமாக இருக்கலாம் என்பது வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது. இந்த விஷயங்கள் எல்லாருக்கும் போய் சேர வேண்டி புராணங்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இவை மொத்தம் 18 அனேகமாக எல்லாமே கதை ரூபத்தில் இருக்கும்.

நாத்திகர் பலருக்கும் கை கொடுப்பது இவைதான். "இங்கே அப்படி, அங்கே இப்படி இருக்கு. கீழ் தரமா இருக்கு இல்லையா?" என்று இவர்கள் கேட்கும் பல கேள்விகள் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள பலருக்கும் தர்ம சங்கடம் விளைவிக்கின்றன. ஈடுபாடு அதிகம் இல்லாதவரும் "அட! சரிதானே!" என்று நினைக்கறது இயல்புதானே. ஆத்திகர் புராணங்களை நம்பறாங்களோ இல்லையோ நாத்திகர் நம்பறாங்க. அப்பதானே அதுல ஓட்டை, உடசல், ஆபாசம்ன்னு கண்டுபிடிக்கலாம்? போகட்டும்.

சரி. எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு என்ன பதில்?

தேவ லோகம் என்கிற பரிமாணத்தில இருக்கிறது என்ன என்று நம்மால புரிந்து கொள்ள முடியாது. அதற்கான உபகரணங்கள் நம்மகிட்ட இல்லை. பிறந்ததிலிருந்து பார்வை இல்லாதவர் எப்படி ஒளி என்கிற ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவே முடியாதோ, அது போல அவர்களுக்கு இருக்கிற தன்மையையோ இயல்பையோ விதிகளையோ நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆக நம் மனித உலக விதிகளை அவங்களுக்கு பொருத்தி பார்க்க இயலாது. அது சரியில்லை.

இருந்தாலும் நாம் ஏதோ ஒரு விதத்திலே இவங்களை புரிந்து கொள்ள அவசியம் இருக்கிறது. ஏன் என்றால் இவர்களால நமக்கு நல்லது நடக்க முடியும். தீமையும் நடக்க முடியும். அதனால நம் குறை பட்ட அறிவால கொஞ்சமாவது புரிந்து கொள்ளணும்.

உதாரணமாக அக்னியின் ரூபத்தை வேதம் சொல்கிறது - இரண்டு தலை நான்கு கொம்பு மூன்று கால்கள் ஏழு கைகள் - நம்மால இதையல்லாம் எப்படி பகுத்தறிவுக்கு பொருத்தி பார்க்க முடியும்? "இந்த மாதிரி எல்லாம் உடம்பு இருக்குமா?" என்றால் அக்னிக்கு மனிதனுக்கு இருப்பது போன்ற உடம்பு இல்லையே? கை போல செயல்படுவது கை என்று சொல்கிறாங்க. இதெல்லாத்தையும் ஒரு உவமையாதான் சொல்ல முடியும். ஒரு பிறப்பு தரும் இடத்தை யோனி என்பார்கள். மனித பிறவிக்கு இருக்கிறது போல இல்லை இது.

இரண்டு இயற்கை சக்திகள் இணைந்து மூன்றாவது சக்தி தோன்றுகிறது. அப்போதும் அந்த இரண்டு சக்திகளும் இருக்கும். அவை தனித்தும் இயங்கும். இன்னொன்றுடன் சேர்ந்தும் இயங்கும். மூன்றாவது சக்தியை தோற்றுவித்து அதுவும் இயங்கும்.

இதையெல்லாம் எப்படி புரிய வைக்கிறது. அப்படியே சொன்னால் குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியுமா? சுலபமா புரிய வைக்க வழி நம்ம வாழ்கையில நடக்கிறதா பாவிச்சு சொல்வதுதான். ஒரு அப்பாவும் அம்மாவும் குழந்தை பெற்றுக்கிறதை விட இயல்பா என்ன இருக்க முடியும்? இப்படி கதை சொல்கிறதுல சில சிக்கல்கள் வரும்போது சிலர் வாய்க்கு அவல் கிடைச்சிடும்.

ஒவ்வொரு புராண கதையும் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வருகிறது. புத்திசாலிகள் சாரத்தை எடுத்துகிட்டு சக்கையை விட்டுவிடனும். சொல்ல வந்த விஷயத்தை எடுத்துகிட்டு மேலோட்டமா தெரிகிற - நம் மனசால மலினமா ஆக்கப்பட்டதை உதாசீனம் செய்யணும். புராணங்கள் புத்திசாலிகள் இல்லாதவங்களுக்குன்னுதானே சொன்னீங்கன்னு கேட்டா, ஆமாம். ஆனா அவங்க பல விஷயங்களை இயல்பா எடுத்துகிட்டு போயிடுவாங்க. இடக்கு மடக்கா கேள்விகள் கேட்கிறது "அறிவு ஜீவிகள்" தான். எல்லாம் பார்வையிலே இருக்கிறது. விஷ்ணு என்கிற சக்தி சிவன் எங்கிற சக்தியோட சேர்ந்து ஐயப்பன்னு ஒரு சக்தி உருவாகிறது, அவங்களுக்கு ஒன்றும் ஆச்சரியமோ அருவருப்போ தராது. குழம்புகிறது தான்தான் புத்திசாலின்னு நினைக்கிறவங்கதான்.

இந்த நாத்திகவாதிகள்தான் இப்படின்னா சில ஆத்திகர்களும் சரியான புரிதல் இல்லாம கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்துவது உண்டு. இப்ப அது குறைஞ்சுகிட்டு வருகிறது.

இப்ப சிவ புராணத்தை எடுத்துகிட்டா சிவன்தான் முழுமுதற் கடவுள். அவர் நெருப்பு தூணாக நிற்க பிரம்மாவும் விஷ்ணுவும் முடியையும் அடியையும் தேடுகிறாங்க.
இதே விஷ்ணு புராணத்தை எடுத்துகிட்டா விஷ்ணுதான் முழுமுதற் கடவுள். சிவன் ஏதாவது வரத்தை கொடுத்திட்டு அவருக்கே அது பிரச்சினை ஆகி விஷ்ணுதான் காப்பாத்துவார்.
அது போலதான் விநாயக புராணத்திலேயும். பிள்ளையார்தான் எல்லாத்துலேயும் முதல்.

இப்படி எந்த புராணத்தை எடுத்துகிட்டாலும் ஏதோ ஒரு தெய்வத்தை கொண்டாடி மத்ததை கொஞ்சம் இறக்கும். அந்த அந்த கடவுள் மேல ஒரு மதிப்பு சிரத்தை வரணும்னு இப்படி கொஞ்சம் தூக்கி மற்றதை குறைத்து சொல்கிறாங்க. எல்லாத்தையும் எழுதினது வியாஸர்தானே.

அதனால "என் கடவுள்தான் உயர்ந்தவர், உன் கடவுள் மட்டம்" என்கிற பேச்சிலே பொருள் இல்லை. யார் யாருக்கு எப்படி இறைவனை பார்க்க ஈடுபாடு இருக்கிறதோ அப்படித்தான் இறைவனும் காட்சி தருவார்.

எல்லாம் சரி புராண கதைகள் உண்மையா பொய்யா என்றால் பதில் சொல்வது கடினமே. கதைகள் உண்மை நிகழ்ச்சிகளாகவும் வெறும் கதையாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதை நம்புவதில் லாபம் இருக்கிறது. நம்பிக்கை ஒரு ஈடுபாட்டை தருகிறது. அதனால் சொல்லப்பட்டது கடைபிடிக்கப்படும் சாத்தியக்கூறு அதிகமாகிறது. அது நல்லது. அதற்காகதானே கதையே. அதனால நாம் புராணங்களை படிக்கும் போது சக்கையை விட்டு சாரத்தை பார்க்க ஆரம்பிக்கலாம்.


Post a Comment