Pages

Thursday, September 3, 2009

விஷயானந்தம்


123
விடயாநந்த இலக்கணம்
இவ்வா றுரைசெயுஞ் சுகபே தங்களி னியல்பா மவை சொல மகனேகேள்
ஒவ்வா நனவினி லுழல்வா னிடர் கெட வுறங்குஞ் சயனம துறுநேரம்
செவ்வா மனமக முகமா மதிலொளிர் சித்தின் சுகநிழல் சேருங்காண்
அவ்வா றிவனுள மகிழ்வா மநுபவ மதுதான் விடயசு காநந்தம்

இவ்வாறு உரை செயும் சுகபேதங்களின் இயல்பாம். அவை சொல மகனே கேள். ஒவ்வா (இன்பம் பொருந்தாத) நனவினில் (ஜாக்ரத்தில்) உழல்வான் இடர் (துன்பம்) கெட (நீங்க) உறங்கும் சயனம், அது உறு நேரம் செவ்வா (செவ்விதான) மனம் அமுகமாம் (அந்தர் முகமாகும்). அதில் ஒளிர் சித்தின் சுகநிழல் சேருங்காண். அவ்வாறு இவன் உள மகிழ்வாம் அநுபவம் -அதுதான் விடய சுகாநந்தம்.
--
சாக்கிரத்தில் உழலுகிற சீவன் எதிர் பட்ட விஷயங்களில நாட்டம் போய் அவற்றை அனுபவிக்கிறான். பிறகு அவற்றில களைப்பு உண்டாகிறது. அந்த துன்பம் நீங்க தூங்கப்போகிறான்.
காலை எழுந்ததிலிருந்து எத்தனை வேலைகள்!! காலை கடன்களை முடிச்சு, ஆபீஸுக்கு பறக்க பறக்க கிளம்பி, பஸ்ஸை தப்பவிட்டு, தாமதமா போய் திட்டு வாங்கி, கீழே வேலை செய்கிறவங்க வேலையை முடிக்காம லொள்ளு பண்ண, அதுக்கு மேல் அதிகாரிகிட்ட திட்டு வாங்கி, வேலை மேல வேலை வர எல்லாத்தையும் கவனிச்சு, தாமதமா கொண்டு வந்த சாப்பாட்டை வேண்டா வெறுப்பா சாப்பிட்டு, தூக்கம் அழுத்த வேலையும் கவனிச்சு, அவஸ்தைப்பட்டு கிளம்புற நேரம். "இத கொஞ்சம் பாத்துடுப்பா!"ன்னு வர வேலையை "முடியாது"ன்னு மனசில சொல்லிக்கிட்டே "பரவாயில்லை சார்! முடிச்சுடறேன்"னு சொல்லி, செய்து முடிச்சு, வழக்கமான பஸ் எப்பவோ போயிட்டதால ரெண்டு கிலோ மீட்டர் நடந்து வேற பஸ்ஸை பிடிச்சு, ஒரு வழியா வீட்டுக்குப்போனா, மனைவி வாங்கி வர சொன்ன பொருளை மறந்து போனது நினைவுக்கு வந்து, மனைவிகிட்டே மானேஜரை திட்டி சமாதானம் சொல்லி, பிள்ளை குட்டிங்களுக்கு கதை சொல்லி, களைச்சு போய் படுக்கையில விழுந்து...."அப்பாடா! இனிமே நிம்மதியா தூங்கலாம்!"ன்னு நினைக்கும்போது மனசு உள்முகமாகும். அதில சித்தோட சுகமான நிழல் சேரும். அப்ப உள்ளம் மகிழுது. இதுவே விஷயானந்தம்.


5 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

அப்பா விஷயானந்தம்ன்றது கேசரி சாப்பிடறதுல இல்ல, அதுல இருந்து தப்பிச்சுக்கறது தான்! அப்படித்தானே:-))

yrskbalu said...

gi,

very good explanation.


you writen about regular mens day today work -what about house-wifes?

Geetha Sambasivam said...

பாலு கேட்டிருக்காரே? எழுதலை? :P
இது கொஞ்சம் இல்லை, நல்லாவே புரிஞ்சது! அப்ப்பாடா!

திவாண்ணா said...

எழுதிட்டாப்போச்சு. சாதாரணமா சனிக்கிழமை பதிவு இல்லைனாலும் ஸ்பெஷலா போட்டுடலாம்.

திவாண்ணா said...

//அப்பா விஷயானந்தம்ன்றது கேசரி சாப்பிடறதுல இல்ல, அதுல இருந்து தப்பிச்சுக்கறது தான்! அப்படித்தானே:-))
//
அது கேசரி செய்யறவங்களை பொறுத்தது!
:-))