Pages

Tuesday, September 1, 2009

எது பிரியம்?


119.
கெடலான பொழுதிவன் காணிக்கு மகனான கெவுணவான் மாமுக்கியம்
விடலாத வுடம்ப ரிக்குநா ளுடலான மித்தையான் மாமுக்கியம்
திடமான நன்மைகதி வேண்டினாற் கர்த்தனாஞ் சீவவான் மாமுக்கியம்
சடமாயு முத்தியின் ஞானவான் மாவான தானேம காமுக்கியம்

கெடலான பொழுது (மரண காலத்தில்) இவன் காணிக்கு (ஆதீனத்துக்கு வேண்டிய) மகனான கெவுண [secondary] ஆன்மா (அந்த சமயம்) முக்கியம். விடலாத உடலம் பரிக்கும் (பேணும்) நாள் உடலான மித்தை ஆன்மா முக்கியம். திடமான நன்மை கதி வேண்டினால் கர்த்தனாம் சீவ ஆன்மா முக்கியம். சடம் மாயும் முத்தியின் ஞான ஆன்மாவான தானே மகா முக்கியம்.
--
மரண காலத்தில் தன் மகன் அருகில் இருக்க மனிதன் விரும்புகிறான். அப்போது அது முக்கியமாக தோன்றுகிறது. ஆனால் அவன் வாழும் காலத்தில் தன் உடலை மட்டுமே அதிகம் விரும்புகிறான், மகனை அல்ல. ஆக ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பொருள் விரும்பப்படுகிறது, பின் அதுவே மற்றொன்று வர கைவிடப்படுகிறது. திடமான நன்மையை கருதி யார் மோட்சத்தின் மீது பற்று கொள்கிறார்களோ அவர் தன் உடலையும் விட்டு தன் சுய சொரூபமான ஆன்மா மீது பற்று கொள்கிறார்.

120.
புலியுமநு கூலமெனி லிட்டமாம் பகைசெயிற் புதல்வனெனினும் வெறுப்பாம்
உலகிலிரு வகையுமல் லாதபுல் லாதியிலு தாசீன மாமாதலான்
மலினமறு சின்மயன் பலவகையு மிப்படி மகிழ்ச்சியில் விருப்பமிகழான்
அலகிலா னந்தவடி வாகுமுன் சொரூபத்தை யாராய்ந்துபார் மகனே

புலியும் அநுகூலம் எனில் இட்டமாம். (இஷ்டமாம்) பகை செயின் புதல்வன் எனினும் வெறுப்பாம். உலகில் இரு வகையும் (பிரியம் துவேஷம்) அல்லாத புல் ஆதியில் (முதலானவற்றில்) உதாசீனமாம். ஆதலான் மலினமறு (அஞ்ஞானம் முதலான குற்றமற்ற) சின்மயன் பலவகையும் இப்படி மகிழ்ச்சியில் விருப்பம் இகழான். அலகில் [வாக், மனதுக்கு எட்டாத] ஆனந்த வடி வாகும் உன் சொரூபத்தை ஆராய்ந்து பார் மகனே.
--
ஒருவர் புலியை பழக்கி பிழைப்பு நடத்துகிறார். அவருக்கு அஞ்சத்தக்க புலி கூட விருப்பமாகிறது.
தன் மகன் தனக்கு சாதாரணமா ரொம்ப ப்ரியமானவன். ஆனா பல சமயம் பாக்கிறோமே! குடும்பத்தில சண்டை வந்து அடி தடியாக்கூட போய், அப்புறம் பேச்சு வார்த்தை இல்லாம எல்லாம் இருந்து, "என்பாகத்தை பிரிச்சு கொடு! நான் போறேன்", "எல்லாம் சுய ஆர்ஜிதம்! உனக்கு ஏது பங்கு?” இப்படி எல்லாம் வளந்து கிடக்கிற சமயம் பிள்ளையானாலும் வெறுப்புதான். மகன் பகையான காரியம் செய்வானே ஆனால் அவன் வெறுக்கப்படுகிறான்.

சாதாரணமா தோட்டத்தில புதர் இருக்கும். அத கண்டுக்காம விடுவோம். அத வெட்டிப்போட்டு அடுப்பெரிச்சு வென்னீர் கிடைச்சா சந்தோஷம் வருது. அதுவே பாம்பு பதுங்கி இருந்து அப்பப்ப நம்ம பயமுறுத்தினா புதரெல்லாம் நமக்கு வெறுக்கற விஷயமாச்சு.
உதாசீனப்படுத்தும் புல், பூண்டு ஆகியவை கூட நெருப்பு உண்டாக்க என்று பயன்படும்போது அவை பிரியமாகும். அவையே பாதையில் நடந்து செல்லும் போது இடையூறு செய்தால் அவற்றின் மீது வெறுப்பு வரும்.
ஆனால் பரிசுத்த சின்மய சொரூபமான ஆன்மா தன் ஆனந்தத்தில் மாறுதல் இல்லாத விருப்பம் உடையவனாக இருக்கிறான்.
ஆகவே நீங்காத ஆனந்த சொரூபியான உன் ஆன்மாவை ஆராய்ந்து பார்த்து அறிவாயாக.Post a Comment