140.
மோகவிருள் கெடக்கோடி யருணனென வருகுருவே மொழியக் கேளீர்
ஏகபரி பூரணமா மென்சொரூப மென்னுளத்தி லிறுகும் வண்ண
மாகமங்கள் சொன்னபடி யென்னையகண் டார்த்தமா வறிந்தே னையா
ஊகமுமொத் திடவுரைத்தாற் பசுமரத்தி லாணிபோ லுறைக்கு நெஞ்சே
மோக (அஞ்ஞான) இருள் கெட (நீங்க) கோடி அருணன் என வரு குருவே, மொழியக் கேளீர். ஏக பரி பூரணமாம் என் சொரூபம் என் உளத்தில் இறுகும் (நிலைக்கும்) வண்ணம் ஆகமங்கள் (வேதங்கள்) சொன்னபடி என்னை அகண்ட (ஒரே) அர்த்தமாய் அறிந்தேன் ஐயா. ஊகமும் (உத்தியும்) ஒத்திட (சம்மதமாகும்படி) உரைத்தால் பசுமரத்தில் ஆணி போல் உறைக்கும் நெஞ்சே.
சீடன் இன்னும் கொஞ்சம் புத்திக்கு எட்டுறாப்பல லாஜிகலா இதை விளக்கச்சொல்லி கேட்கிறார்.
141.
சத்தேசித் தாகுமய லெனிலசத்தா மசத்தானாற் சாட்சி யெங்கே
சித்தேசத் தாகுமய லெனிற்சடமாஞ் சடங்களுக்கு திதியுமில்லை
ஒத்தேதோன் றியசததுஞ் சித்து நல்ல சுகமாகு மூகத் துக்கோர்
வித்தேயன் னியமாகிற் சடமசத்தாஞ் சுகாநுபவம் விளைந்திடாதே
சத்தே (இருப்பதே) சித்தாகும் (அறிகின்றதாகும்). அயல் (வேறு) எனில் அசத்தாம் (இல்லாததாகும்). அசத்தானால் (அப்படி இல்லாததானால், இல்லாத சித்துக்கு) சாட்சி [தன்மை] எங்கே? (எவ்விடத்தில் இருக்கும்?)
சித்தே சத்தாகும். அயல் எனில் சடமாம் (மூடமாம்). (மூடமான) சடங்களுக்கு [ஸ்]திதியுமில்லை. (இருப்பில்லை)
சத்தும் சித்தும் ஒத்தே (பொருந்தியது எதுவோ அதுவே) தோன்றிய நல்ல சுகமாகும். (நிரதிசிய ஆநந்தம்). அன்னியமாகில் (சித்துக்கு ஆநந்தம் வேறு எனில்) சடம் அசத்தாம். (மூடமும் இருப்பில்லாததுமாகும்) [அதற்கு] சுகாநுபவம் விளைந்திடாதே. ஊகத்துக்கு (இப்படி கூறிய யுத்தியே மற்ற நாமங்களை உணர) ஓர் வித்தே.
குழப்பறா மாதிரி இருக்கா?!
கொஞ்சம் கவனமா பாக்கலாம். சத் - முக்காலத்திலும் இருப்பது. சித் என்பது அறிவு.
எது இருக்கோ அதைத்தானே அறிய முடியும்? இல்லாத விஷயத்தை எப்படி அறிய முடியும்? ஆகவே சத்தே சித்து. ஒரு விஷயம் இருக்கிறதா தெரியறப்பவே அதைப்பத்திய அறிவு கொஞ்சமாவது வந்துடும் இல்லியா? இருப்பே அறிவு.
எதை அறிகிறோமோ அதுக்கு இருப்பு இருக்கும். இருப்பில் இல்லாததை அறிய முடியாது. கணினில இருக்கறதா நினைச்சு ஒரு கோப்பை தேடறோம். தமிழ் இடைமுகம் இருந்தா அது தேடிட்டு சொல்கிறப்ப "நீங்கள் தேடும் கோப்பு இருப்பில் இல்லை" ன்னு சொல்லும். இல்லாத இதை அறிய முடியாது. ஆகவே சித்தே சத்து. (அறிவே இருப்பு)
தேடின கோப்பு கிடைக்கும் போது "அப்பாடா! கிடைச்சுடுத்து"ன்னு சந்தோஷப்படறோம். இருந்து அறிவதே ஆநந்தமாகும். ஆகவே சத்தும் சித்தும் ஒன்றானதே ஆநந்தமாகும்.
3 comments:
இருப்பதனால் ஆனந்தமா, இல்லை அதை அறிவதனால் ஆனந்தமா?
இல்லேன்னாக்க, கலை கலைக்காகவேங்கிற மாதிரி ஆனந்தமா இருக்கறதுக்காகவே ஆனந்தமா:-))
//இல்லேன்னாக்க, கலை கலைக்காகவேங்கிற மாதிரி ஆனந்தமா இருக்கறதுக்காகவே ஆனந்தமா:-))//
சரிதான். அதுவே இயல்பு.
//தேடின கோப்பு கிடைக்கும் போது "அப்பாடா! கிடைச்சுடுத்து"ன்னு சந்தோஷப்படறோம்//
அப்பாடா, இது மட்டும் புரியுது!
Post a Comment