124.
பிரமானந்த இலக்கணம்
ஈனந் தருசுக விடயம் திரிபுடி யிடரா மெனமன மசையாமல்
சேனந் தனதுகு லாயந் தனில்விழு செயல்போ னித்திரை செறிசீவன்
தானந்தமில்பர னுடனென் றுவனொரு தனையல் லதுபிற நினையாமல்
ஆனந் தமயனுமாவன் சுகமிகு மதுதா னுயர்பிர மாநந்தம்
ஈனம் (குறைவை) தரு சுக விடயம் திரிபுடி இடராம் (துன்பமாம்) என மனம் அசையாமல், சேனம் (பருந்து) தனது குலாயந்தனில் (கூண்டில்) விழு (அடங்கும்) செயல் போல் நித்திரை செறி(செய்யும்) சீவன், தான் அந்தமில் பரனுடன் ஒன்றுவன் ஒரு தனை அல்லது பிற நினையாமல் ஆனந்த மயனுமாவன். சுகமிகும் அதுதான் உயர் பிரமாநந்தம்.
கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி நித்திரையில அனுபவிக்கிற சுகம்.
ஆகாயத்தில் பறந்து அலைந்த கருடன் களைப்பாகி சுகம் அனுபவிக்க கூட்டில போய் விழுவது போல,
அநித்தியமான விஷயங்களில் மனம் நாடுது. எப்ப சுகம்ன்னு ஒண்ணு வருதோ பின்னாலேயே துக்கம்ன்னு ஒண்ணு வந்துகிட்டே இருக்கு. எப்பவுமே சுகமா இருக்கிறவங்களை பாக்கிறது அரிது. (அதே போல எப்பவுமே துக்கமா இருக்கிறவங்களை பாக்கிறதும் அரிது.) அனுபவிக்கிறவன், அனுபவித்தல், அனுபவிக்கப்படுவது என்கிற மூன்றும் (ஞாபகம் இருக்கா அதான் திரிபுடி) இருக்கிற நிலை துக்கம் தருவதால களைப்பு வருது. அதனால அந்த மூணும் நீங்க மனசை ஒடுக்கி தூங்கி ஒரு அவஸ்தையும் இல்லாம தானே தானாக இருந்து ஆனந்த மயனா இருக்கிறான். இதுவே பிரம்மானந்தம்.
2 comments:
//அதனால அந்த மூணும் நீங்க மனசை ஒடுக்கி தூங்கி ஒரு அவஸ்தையும் இல்லாம தானே தானாக இருந்து ஆனந்த மயனா இருக்கிறான். இதுவே பிரம்மானந்தம்.//
அர்த்தம் புரிஞ்சாலும், மனசை ஒடுக்கித் தூங்கிங்கற போது சரியா வருமானு தோணுதே. தூங்காமலும் ஆனந்தம் அனுபவிச்சுண்டு இருக்க முடியும் இல்லையா? பிரம்மானந்தம்! ஞானிகள் அப்படித் தானே இருக்கின்றனர்?
ஞானிகள் அனுபவிக்கிறது வேற. பின்னாலே வரும். இதை முதல்ல படிச்சப்ப எனக்கும் இப்படித்தான் தப்பா சொல்லறாங்களோன்னு தோணித்து.
Post a Comment