Pages

Thursday, September 17, 2009

சச்சிதாநந்தின் ஒற்றுமையை சொல்ல விண்ணப்பம்.




133.
இந்தவா றைந்துசுகஞ் சொல்லினோம் வித்தைசுக மினிமேற் சொல்வோம்
முந்தமா யையுஞ்சச்சி தாநந்தப் பொருளுமே மொழியும் போதில்
அந்தமா மத்துவித சுகமான்ம சுகமிரண்டு மங்கே சொன்னோம்
தொந்தமாற் றியமகனே யின்னமுனக் கையமுண்டேற் சொல்லு வாயே.

இந்தவாறு ஐந்து சுகஞ் சொல்லினோம்.(செய்யுள் 123-விஷயாநந்தம்; 124-127 பிரமாநந்தம்; 128-வாசநாநந்தம்; 129- நிசானந்தம்; 130-முக்கியானந்தம்) வித்தை சுகம் இனிமேல் (நூலின் கடைசியில்) சொல்வோம். முந்த (முன்பு) மாயையும் சச்சிதாநந்தப் பொருளுமே மொழியும் போதில், அந்தமாம் அத்துவித சுகம் (95-108) ஆன்ம சுகம் (114-120) இரண்டும் அங்கே சொன்னோம். தொந்த மாற்றிய (துவந்தங்களை கெடுத்த) மகனே இன்னமும் உனக்கு ஐயமுண்டேல் சொல்லுவாயே.
லிஸ்டில இன்னும் ஒண்ணதான் பாக்கி. வித்தியானந்தம். இதைப்பத்தி அப்புறம் வரும்.

134.
ஆத்மா சச்சிதாநந்த சொரூபமெனத் தெரிந்திருந்தும் அதன் உண்மையான சுவானுபூதி வெளிப்பட சுருதி யுக்தி அநுபவங்களுக்கு ஒத்திருக்கும் அவற்றின் ஒருமையை தெரிய வினா:
குகன்றனையு மெனையுமுல கினையுமீன் றளித்தருளுங் குருவே கேளீர்
புகன்றசச் சிதாநந்தப் பதங்கடனித் தனியாகிப் பொருள்வே றானால்
உகண்டமன முறைப்பதெங்ஙன் பரியாய பதங்களைப்போ லுறவு காணேன்
அகண்டமா யொருசுவையாய்த் தெனீக்கூட்டியமதுவா வறிவிப்பீரே

குகன் தனையும் எனையும் உலகினையும் ஈன்று அளித்து அருளுங் குருவே கேளீர்!
புகன்ற சச்சிதாநந்தப் பதங்கள் தனித் தனியாகிப் பொருள் வேறானால் உகண்டமனம் (விஷயங்களில் பாயும் மனம்) உறைப்பது எங்ஙன்? (எப்படி) பரியாய பதங்களை (பல்சொல் ஒரு மொழி) போல் உறவு காணேன். அகண்டமாய் ஒரு சுவையாய் தேனீ கூட்டிய மதுவாய் அறிவிப்பீரே.
--
சந்தேகமிருந்தா கேட்கச்சொன்ன குருகிட்ட சீடன் ஒரு சந்தேகம் கேட்கிறான்.

அத்வைதம்ன்னா எல்லாமே ஒண்ணுதானே. ஆனா அந்த நிலையை எப்படி சொல்லறோம்? சத், சித், ஆனந்தம். கை, பாணி, ஹஸ்தம் ன்கிறா மாதிரி ஒரே விஷயத்தை குறிக்கிற ஒரு பொருட் பன் மொழியாவும் இது இல்லை. இப்படி இருக்க சச்சிதாநந்த பதங்களுக்கு ஒரே அர்த்தம் தோன்றலைன்னா எப்படி மனசு நிலை பெறும்? தேனீக்கள் பலதா இருந்தும் பல பூக்களிலிருந்து தேன் கொண்டு வந்தாலும் தேன் சுவை ஒரே மாதிரி இருக்காப்போல ஒரே மாதிரி அத்வைத நிலையை சொல்லக்கூடாதா?

No comments: