Pages

Monday, January 25, 2010

மாக புராணம் 27



27.(தொடர்ச்சி)

வனத்திலே முநிவர்கள் மாக ஸ்நாநம் செய்ய கோஷ்டியாக வந்தனர். இக் குழந்தையை கண்டவுடன் குழந்தையில்லா முநிவர் ஒருவர் நமக்காகத்தான் பகவான் இதைத் தந்திருக்கிறார் என அதை அன்புடன் எடுத்து மனைவியிடமளித்தார். அவருக்கு இரு மனைவிகள். முதலில் இருவரும் இரண்டாண்டுகள் அன்புடன் அதை வளர்த்தனர். பிறகு இது என் குழந்தைதான், உனக்கல்ல என்று இருவரும் சண்டையிட்டனர். ஒரு நாள் மூத்தவள் குழந்தையை வநத்திலே கொண்டுவிட்டு இருவருக்கும் வேண்டாம் என திரும்பி வந்தாள். முனிவர் ஸி2ஸு2வைக் காணாமல் பலவிடங்களிலும் தேடினார். எப்படி வந்ததோ அப்படியே சென்றதென ஸா2ந்தி அடைந்தார். குழந்தை தவழ்ந்து சென்று தெய்வச்செயலாக துளசீ வநத்திற்குச்சென்றது. அது தெய்வச்செடியல்லவா? அங்கு யாதொரு தீங்குமின்றி சுகமாக உறங்கிற்று.


மறுநாள் காலையில் குழந்தை பசியால் வாடி அழுதது. அவ்வநத்திலுள்ள பக்‌ஷிகளும் மிருகங்களும்கூட இதைக்கண்டு வருந்தின. சில பக்ஷிகள் இறக்கையால் நிழலளித்து மூக்கால் கனிகளை கொண்டளித்தன.பசி தாஹமகன்றது. துளசி தர்ஸ2னம் ஸ்பர்சம் இவைகளால் குழந்தைக்கு வாக்கில் கிருஷ்ணா! வாஸுதேவ! அநந்த! அச்யுத! என்ற பகவன் நாமாக்கள் தோன்றின.


28. ஸுதர்மனுக்கு விஷ்ணு வரம்:

ஸுலக்ஷணன், முநிவரருளால் நிச்சயமாகக்குழந்தை பிறந்திருக்கும் என நம்பித் தாயையும் சேயையும் சாரரைக்கொண்டுத் தேடித்தேடி அகப்படாமல் வருந்தினான். துளஸீ வனத்தில் வளர்ந்த குழந்தைக்குத் தாய் தகப்பனும் சகோதரரும் குருவும் மற்ற பந்துவும் துளஸீயேயாயிற்றே. நாம கீர்த்தனம் செய்த மஹிமையால் பூஜை புரியவும் எண்ணமுதித்தது. நீரை எடுத்து துளஸீ வேரில் அபிஷேகம் செய்தான். துளஸீ தளத்தால் அர்ச்சித்தான். அதையே நிவேதனம் செய்தான். துளஸீ தேவீ விஷ்ணு பத்னீ அல்லவா? விஷ்ணு த்யானம் பூஜை முதலியன அவன் மனதில் உதிக்கும்படிச் செய்தாள். ஆறு மாதம் பக்தியுடன் பூஜித்தான். "பகவான் பக்தருக்கு விரைவில் அருள் புரிவாரே! அவரேன் எனக்கு தர்ஸ2னம் தரவில்லை?” என களங்கமில்லா மனதில் எண்ணினான். பகவானே ஆகாஸ2வாணியாகக் கூறினார்.

“ஸுதர்ம! நீ தர்மம் செய்தாய். மாக ஸ்நாநமும் செய். ஹரியின் அருளை பெறுவாய்.” என்றார். இதைக்கேட்டவுடன் மாக ஸ்நாந விதியும் மனதில் தோன்ற, அதையும் அனுஷ்டித்தான். அடுத்த நாள் ஸ்நாநம் செய்து பூஜை ஆரம்பிக்கும்போது, கருணைக் கடலான கருடவாஹனனன் அவன் முன் தோன்றி, “ஸுதர்மா என்ன வரம் வேண்டும்?” என்றார். சிறியவனாயினும், துளஸி ஸங்கத்தாலும், பகவதாராதநத்தாலும், மாகஸ்நாநத்தாலும். மஹர்ஷிகளைப் போல் "வேறென்ன வேண்டும்? உமது திருவடியே வேண்டும்" என்றான்! "குழந்தாய்! உனது தந்தை ஸுலக்ஷணனிடம் சென்று யுவராஜனாகி, அவர் வனஞ்சென்றபின் ராஜ்ய பாலனம் செய்து, உன் புத்ரனிடம் ராஜ்யமளித்து, வைகுண்டம் வா!” எனக் கூறி அருகிலிருந்த ஸுநத ரிஷியை அழைத்து "இவனை ஸுலக்ஷணனிடம் அழைத்துச் சேர்" எனக் கூறி மறைந்தார்.

பகவான் கூறியபடி ஸுநந்தர் சிறுவனை அழைத்துச்சென்று, சக்களத்திகள் விஷமளித்தது; அவளைப் புலி கொன்றது; ஹம்ஸம் இவனைக்காத்தது; துளஸீ வநத்தில் வளர்ந்தது; ஹரி பூஜை, மாகஸ்நாநம் செய்தது, விஷ்ணுவிடம் வரம் பெற்றது முதலிய விருத்தாந்தங்களை வர்ணித்தார். தர்மமிவனை வளர்த்ததாலும், தர்மம் செய்ததாலும், ஸுதார்மிகன் எனப் பெயர் பெற்றான் என்றார். அரசன் முநிவரைப் பணிந்து நன்கு பூஜித்து அனுப்பினான். குழந்தையை கட்டித்தழுவி, துளஸி அருளால் ஸகல பாக்கியமும், ஸகல கலைகளிலும் சிறந்த அவனுக்கு யுவ ராஜ பட்டாபிஷேகம் செய்வித்தான். ஸுதர்மனும் பெற்றோரை [அம்மாதான் "ஊருக்கு" போயாச்சே? தந்தையுடன் அவரது (வேறு) மனைவிக்கும் என கொள்ள வேண்டும்.] வணங்கி குடிகளை ஆதரவுடன் ஆண்டு, புத்ர பௌத்ர பாக்கியமும் பெற்று மாகஸ்நம் செய்து ஸத்கதி பெற்றான்.


No comments: