Pages

Wednesday, January 20, 2010

மாக புராணம் 23



24. பஞ்ச மஹா பாதகிகள்.

பிராம்மணனைக்கொல்வது, ஸுராபானம், ஸ்வர்ணத்தைத் திருடுவது, குரு ஸ்த்ரீ ஸங்கமம் செய்வது, இவர்களுடன் [இவற்றை செய்வோருடன்] சேர்ந்திருப்பது என்பன பஞ்ச மஹா பாதகமெனப்படும். மற்றெல்லா பாபங்களுக்கும் பிராயச்சித்தம் உண்டு. பஞ்ச மஹா பாதகங்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது. அவர்கள்பல கோடி கல்பம் நரக யாதனைகளை அனுபவித்து பூமியில் பிரும்ம ராக்ஷஸாக பிறப்பர். அத்தகைய பாபத்தைக் கூட போக்க சக்தியுள்ளது மாகஸ்நம் என்பதை விளக்க பஞ்ச மஹாபாதகிகள் சரித்திரத்தை இந்த அத்தியாயம் கூறுகிறது.

க்ருத்ஸமதர்: ஓ ஜன்ஹோ! தர்மத்தைக் கேட்க விரும்புகிறவர்களுக்கு அதைக்கூறாவிடில் பாபம் உண்டாகும். ஆதலால் நீ விரும்பும் மாக மஹிமையை மேலும் கூறுகிறேன் கேள். கலிங்க தேசத்திலே மிக க்ரூரமான குணமுள்ள ஒரு வேடன் இருந்தான்.வேட்டையாடுவது, கொல்வது, கொள்ளையடிப்பது அவன் ஸ்வபாவம். ஆயிரக்கணக்கான மிருகங்களையும் பக்ஷிகளையும் கொன்று மாம்ஸம் விற்று தனிகனானான். வியாபாரத்திற்காக மட்டுமல்ல. விளையாட்டாகவும் பிராணிகளை வதம் செய்வான். ஒரு குளத்தங்கரையின் மரத்தடியிலே ஒரு வேதியன் படுத்திருக்ககண்டான். அவர் வெகு தூரம் நடந்து வந்த களைப்பால் அயர்ந்திருந்தார். வேடன் அவரிடமிருந்து வஸ்த்ரம், பாத்ரம், தண்டம் முதலியவற்றைப் பிடுங்கிக் கொண்டான். இன்னும் ஏதேனும் பொருளை ரகசியமாக வைத்திருப்பார் என அவரைக் கத்தியால் வெட்டிக் கொன்றான். [லாஜிக் புரியலை. யாரையானா மூலத்தை பாக்கச்சொல்லணும். தேவ்ஜி?] அது பிரம்ம ஹத்தி பாபம் ஆகும்.

அவனுக்கோர் பொற்கொல்லர் நண்பன். அவன் பலரிடம் ஸுவர்ணத்தை வாங்கி ஆபரணம் செய்து கொடுப்பதாகக் கூறி அதை அபகரிப்பான். அவன் இந்த வேடன் திருடி வரும் ஆபரணங்களை விற்று அவனையும் ஏமாற்றி ஸுவர்ணம் திருடுவான். இது ஸ்வர்ணஸ்தேயமென்னும் இரண்டாவது மாபாதகம்.

இவர்களுக்கு தொண்டு செய்பவன் ஒரு குடிகாரன். தாஸீகமனம் செய்பவன். அவன் குடிப்பது, சூதாடுவது, திருடுவது முதலிய துர்க்குணங்களுள்ளவன். முன்னிருவர்களுடன் சேர்ந்து தநத்தை திருடி பல ஸ்த்ரீக்களை கெடுத்தவன். இவனது தாயும் கற்பில்லாதவள். கணவனிறந்தபின் தன்னிஷ்ட்டப்படி பல அன்ய புருஷர்களுடன் காமத்தை அனுபவித்தாள். ஒரு சோர புருஷன் வீட்டிற்கு சென்று அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவன் வேறெங்கோ சென்றுவிட்டான். அவனது நண்பனான இவளுடைய மகன் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி இரவில் தாயென அறியாமலே சங்கமம் செய்தான். முடிவில் ஒருவரை ஒருவர் அறிந்து வெளியில் கூற முடியாமல் அந்த வினை மனதை அறுக்க வருந்தினர். தாய் தனது தவறை நினைத்து துக்கித்து கங்கைக்கு சென்று உயிரை விட்டாள். இது குரு ஸ்த்ரீ கமன பாபம்.
[ஒருவனுக்கு தந்தையே முதல் குருவானதால் தாய் குரு பத்னீ ஆகிறாள்]

விஸ்2ருங்கலன் என்றோர் வேதியன் வேடனுக்கு புரோஹிதராயிருந்தார். இரண்டாண்டுகள் அம்மூவருடன் கூடவே இருந்து பழகினார். இது தத்ஸங்கம் என்ற ஐந்தாவது மஹா பாதகம். அவர்களது சேர்க்கையால் ப்ராம்மண்யம் அகன்றது. நான்கு நாட்கள் சேர்ந்திருந்தாலே தினம் கால் பாகமாக முழு ப்ராம்மண்யமும் போய்விடும். இரண்டாண்டுகள் அவர்களுடன் உண்பது, உடுப்பது, உறங்குவது முதலியவைகளால் மிகப்பதிதனானான். தெரிந்து செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தமே இல்லை. பல கோடி கல்பம் நரகத்தை அனுபவித்து பிரும்ம ராக்ஷஸராக பிறப்பர் பஞ்சமாபாதகிகள்.

விஸ்2ருங்கலன் வேடனுக்கு புரோஹிதனாக இருந்து தாஸனாகவுமாய் விட்டான். வழியிலே வீரவ்ரதன் என்ற உத்தம வேதியனைக் கண்டான். அவரது விபூதி, ருத்ராக்ஷமும், ஜப மாலையும், பகவன் நாமோச்சாரணமும் விஸ்2ருங்கலனையும் வணங்கி நிற்கும்படிச் செய்தது. எதிரில் அஞ்சலி செய்து பேசாமல் நிற்கும் அவனை "நீ யார்?” என வீரவ்ருதர் வினவினார். உள்ளதை ஒளிக்காமல் வேறு ஜீவந வழியின்றி வேடனது புரோஹிதனாகி அவனுடன் வாழ்கிறேனென்றான். உடனே வீரவ்ரதர் இவனைப்பார்த்த தோஷமகல ஆசமனம் செய்து இரண்டு நாழி த்யானம் செய்து அவன் கதியைப் பற்றி கூற ஆரம்பித்தார்.


No comments: