Pages

Thursday, January 21, 2010

மாகபுராணம் 24




25.பாபமும் பிராயச்சித்தமும்.

வீரவ்ருதர் பதித ப்ராம்மணணைப் பார்த்துகூறினார்: உனது சிஷ்யனான வேடன் பிரும்மஹத்தி, ஸுராபானம், ஸுவர்ணம் திருடுதல் எனும் மஹா பாபங்களைச் செய்பவன், அவனது நண்பன் ஸுவர்ணம் திருடுவதையே ஜீவனமாக கொண்டவன். இவர்களுக்கு தொண்டு செய்பவன் பெற்ற தாயையே புணர்ந்தவன். இவர்களுடன் சேர்ந்திருந்தால் நீயும் அந்த பாபம் செய்தவனாவாய். வேதியன் தீர்த்தப் பாத்திரத்துடனும் தர்ப்ப பவித்திரத்துடனும் இருந்தால் அன்னியர் பாபம் இவனிடம் வராது. தெரிந்தே இந்த மஹா பாபம் செய்தவர்களின் அருகே செல்லக்கூடாது. இவர்கள் பல கல்பம் பயங்கரமான நரகங்களை அனுபவித்து ப்ரும்மராக்ஷசர்களாவர் என்றார்.

இதைக்கேட்ட ப்ரஷ்ட புரோஹிதன் நடு நடுங்கி அவரை வணங்கி, “ஐயா! எனது பாபத்தைபோக்க ப்ராயச்சித்தம் கூறுங்கள்" என்றான். "மநு முதலிய தர்ம ஸா2ஸ்த்ரக்ஞர் கூறியதைக்கேள். பன்னிரண்டாண்டு ஊர் ஊராகச் சென்று, "நான் பாபி! எனக்கு பிக்ஷை தாருங்கள்!” எனக் கேட்க வேண்டும். பன்னிரண்டாண்டுகளும் பக்தி சிரத்தையுடன் மாக ஸ்நாநம் செய்ய வேண்டும். ப்ரயாக க்ஷேத்திரத்தில் மாக ஸ்நாநம் செய்து மாதவனை தர்ஸ2னம் செய். ப்ரயாக ஸ்மரணமும் ஸ்நாநமும் உடனே பாபங்களை போக்கி பாவநமாகச் செய்யும். ப்ராயச்சித்தம் ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவிலும் ப்ரயாகத்தில் மாக ஸ்நாநம் செய். அங்கு கோஸா2லையில் அன்னமருந்தி வஸிக்க வேண்டும்" என்றார்.

இதைக்கேட்டு "ஸ்வாமின்! பரோபகாரத்திற்காகவே ஜநித்த தாங்கள் என்னுடன் கூடிய மூவருக்கும் உசிதமான பிராயச்சித்தத்தையும் கூறுங்கள்" என பிராம்மணன் வேண்டினான். வீரவ்ருதர் மேலும் கூறினார். அவர்களும் இதே போல்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். பதி மூன்றாம் ஆண்டில் பாபங்கள் போன பின் என்னிடம் வாருங்கள். மேலே என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேன் என்றார். பிராம்மணன் அவர்களிடம் சென்று, "நாம் செய்த பாபம் பல கோடி ஆண்டுகள் நரக யாதனையை உண்டு பண்ணும். பிறகு பல்லாண்டுகள் பிரம்மராக்ஷசாக இருக்க வேண்டுமாம். ஆதலால் வீரவ்ரதர் கூறிய பிராயச்சித்த விரதத்தை செய்வோம்!” என நால்வரும் பல புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நாநம் செய்தனர். பசுவுக்கு அரிசியைத் தந்து மூன்று பிடி அரிசியை கோமயத்தால் பாகம் செய்து [சமைத்து] சாப்பிட்டனர். பிரயாகம் காஸி2 முதலிய புண்ய தீர்த்தங்களிலும் மாக ஸ்நாநமும் செய்தனர். இங்ஙனம் பன்னிரண்டாண்டுகள் செய்து முடித்து நைமிசாரண்யத்திலே உள்ள வீரவ்ரதரை நமஸ்காரம் செய்து நின்றனர்.

No comments: