Pages

Monday, January 11, 2010

மாக புராணம் 14




14. ஒருவர் வயதால் பெரியவரா ஞானத்தாலா?
நைமிசாரண்யத்திலே புண்யமான கோமதீ தீரத்திலே பல பிரும்ம ரிஷிகளும் ராஜரிஷிகளும் ஒரு சமயம் ஒன்று கூடினர். இவர்களில் யார் சிறந்தவர் என்ற வாதம் தோன்றியது. பிருகு தவத்தினாலும் யோகத்தினாலும் தானே பெரியவர் என்றும், கௌதமரோ நீண்ட காலமாக ஜீவித்து இருக்கும் நான் வயதில் பெரியவன் என்றார். ரோமசர் சகல முனிவர்களுக்கும் குருவானதால் நானே பெரியவன் எனக்கு சமமெவருமில்லை என்றார்.
கார்க்ய முனிவர் எழுந்து எல்லையில்லா கல்விகளை கற்ற நானே பெரியவன் என்றார். மாண்டவ்யர் எழுந்து யான் நீண்ட காலமாக ஸத்கர்மாக்களை அனுஷ்டித்து வருகிறேன். ஆதலின் நானே பெரியவன் என்றார். ஸந்தனர் தான் யோகாப்யாசத்தால் உயர்ந்தவரென்றும் பௌலஸ்த்யர் வேத சா2ஸ்த்ர நிபுணரானதால் பெரியவரென்றும் சௌ2னகர் தான் வேதாந்தியானதால் உயர்ந்தவரென்றும் பரஸ்பரம் வாதம் செய்தார்கள். வாதம் பிடிவாதமாகி கோபத்தில் இறங்கி சண்டையிலும் ஈடுபட்டனர். கிருஷ்ணாஜினத்தை கிழித்தனர். கமண்டுலுவை உடைத்தனர். தண்டத்தை முறித்தனர். தாடியை ஜடையை பிய்த்தனர். விஷ்ணு மாயையால் மோஹமடைந்து தபோதனர்களான ரிஷிகளே இப்படிப் போர் புரிந்தனர். இப்படி அகங்காரத்தால் ஸ்வதர்மத்தை மறந்து போர் புரியும் முநிவர்களை கண்டு இரக்கம் கொண்ட நாரதர் வைகுண்டம் சென்று இச்சண்டை ஓய ஒரு உபாயம் செய்யுங்கள் என மஹாவிஷ்ணுவை வேண்டினார். பக்வான் ஸநக ஸந்தன ஸத்குமார ஸநத்ஸுஜாத என்ற நால்வரையும் அங்கனுப்பினார். விஷ்ணுவின் சபையிலுள்ள ஸநகாதிகள் என்றும் ஐந்து வயதுள்ள குமாரர்களாகவே இருப்பவர்கள். மார்க்கண்டேயரோ என்றும் 16 வயதுள்ளவர். மார்க்கண்டேயர் மஹரிஷிகளை ஸமாதானம் செய்து ஒரு வழியாக சண்டையை நிறுத்தினார். சிறிது நேரம் சென்றபின் ஸநகாதிகள் பகவான் நாமாவைக்கூறிக்கொண்டு அங்கே வந்தனர். அவர்களைக்கண்டவுடன் மார்க்கண்டேயர் எழுந்து நமஸ்காரம் செய்து மதுபர்க்கம் அளித்து அவர்களது பாத ஜலத்தை சி2ரஸ்ஸில் ப்ரோக்ஷித்துக்கொண்டார்.
இதைக்கண்டு ரிஷிகள் ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருக்கும்போது ஸநகாதிகள் ”ஓ! மார்க்கண்டேயரே நீர் ஏழு கல்பகாலம் ஜீவித்திருக்கும் வ்ருத்தர். நாங்களோ சிறுவர்கள். எங்களுக்கு அர்க்யாதிகளை அளிப்பதுடன் நம்ஸ்காரமும் செய்கிறீர்களே! சிறுவர்க்குப் பெரியவர் நமஸ்காரம் செய்யலாமா?” என்று கேட்க மார்க்கண்டேயர் கூறினார்:
”மஹரிஷிகளே! சிரஞ்சீவியானாலும் இருபத்தொரு கல்பம் ஜீவித்திருந்தாலும் ஒரு நாள் மரிக்கத்தான் வேண்டும். வேத சாஸ்த்ர ஞானம் அநுஷ்டானம் கர்ம பக்தி, பகவத் கதாஸ்2ரவணம் முதலியன இல்லாதவர் எத்தனை காலம் ஜீவித்திருந்தாலும் பெரியவரல்ல! ஒவ்வொரு நாளும் பொத்தல் குடத்தில் உள்ள நீர் போல் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது. அத்தகையவர்களது வாழ்வு வீணாகும். க்ஞானம் மனிதர்களுக்காக ஏற்பட்ட உயர்ந்த ரத்தினம். அதை பெறாதவர் மனிதரா? ஸத்கதாச்2ரவணம் பகவன்நாம கீர்த்தனம் க்ஞானம் ஆகிய பாக்யம் பெற்றவர் சிறுவராயினும் நமஸ்கரிக்கத்தக்க வ்ருத்தராவார். ஸத்கதாச்ச்2ரவணம் செய்வதே ஜன்ம லாபம். ஒரு நிமிஷமாவது அரை நிமிஷமாவது கதாச்2ரவணம் செய்தவர் ரிஷிகளில் மிக உயர்ந்தவர். அவரே எல்லாராலும் பூஜிக்கத்தக்கவர். நீங்கள் ஸதா பகவன் நாம ஜபம் செய்து ஹரியிடமே கதை கேட்கிறீர்கள்.
கதாச்2ரவணம் செய்யாத வ்ருத்தரும் சிறியவரேயாவார். கதாச்2ரவணம் செய்யும் சிறுவனும் பெரியவனே. ஐந்து வயதுள்ளவராயினும் ஸத்கதாச்2ரவணம் செய்த நீங்கள் எல்லாரையும் விட வ்ருத்தர்; பூஜிக்கத்தக்கவர்; குருவும் ஆவீர்கள். 1.) க்ஞானத்தால் வ்ருத்தர் 2) தபோவ்ருத்தர் 3) வயோவ்ருத்தர் 4) ஆத்ம விக்ஞான வ்ருத்தர் 5) ஸத்கதாச்ரவண வ்ருத்தர்; இந்த ஐவரும் வ்ருத்தர்களே. பூஜிக்கத்தக்கவர்களே. ஸதா பகவத் கதாமிருதபாநம் செய்பவர் நீங்களே!” என்று மார்க்கண்டேயர் கூற ஸநகாதிகள் ”நீர் சொல்வது உண்மைதான்” என்று கூறினார்கள். நான் பெரியவன் என வாதமிட்டுச் சண்டை போடும் ரிஷிக்கூட்டத்தின் நடுவில் மேலும் அவர்கள் கூறினர்:
விஷ்ணு ச்2ரவணம் செய்பவர், விஷ்ணு பாத ஜலமான கங்கையில் ஸ்நாநம் செய்வோர், கருணாகர! விஷ்ணோ! தாமோதரா! என்று ஸதா பகவன் நாமாவை கூறுபவர், ஹரி பக்தி செய்பவர், அவரது பூஜையில் ஈடுபட்டவர், அவர் திருவுருவை தர்சிப்பவர், ஸதா அவரை த்யானம் செய்பவர் முதலியவர் வாழ்வே ஸபலமான வாழ்வாகும். அவர்களே வ்ருத்தர் என்று கூறினர்.
இதைக்கேட்டு சண்டையிட்டுக்கொண்டிருந்த ரிஷிகள் வெட்கமடைந்தனர். மார்க்கண்டேயரையும் ஸநகாதிகளையும் நமஸ்கரித்து ”மஹர்ஷிகளே உங்களால் நன்கு சிக்ஷிக்கப்பட்டோம். இனி ஹரி கதாச்2ரவணமே சிறந்ததென அதில் ஈடு படுகிறோம்!” என்றனர். அவர்களது வாதத்தை அகற்றி சா2ந்தியை அளித்த மார்க்கண்டேயரும் ஸநகாதிகளும் நாரதருடன் வைகுண்டம் சென்று பகவானிடம் நடந்ததை தெரிவித்து நமஸ்கரித்தனர்.


2 comments:

KABEERANBAN :கபீரன்பன் said...

//கதாச்2ரவணமே சிறந்ததென அதில் ஈடு படுகிறோம்!” என்றனர். அவர்களது வாதத்தை அகற்றி சா2ந்தியை //

ஷ (sha)தட்டச்சு NHM ல வேலை செய்யுதே ! எதுக்கு ச2 ஸ2 ன்னு கஷ்டப்படணும். இல்ல அது மூலத்தில அப்படி இருக்கிறதால மாத்த இஷ்டப்படலயா ?

திவாண்ணா said...

இது ஸ வும் இல்லை. ஷ வும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட சப்தம். அதுக்கு தமிழில சம எழுத்து இல்லை. முதலில் ச2 போட்டா போதும்ன்னு நினைச்சேன். இப்ப அது சரியில்லைன்னு தோணுது. அது ச்ச வை குறிக்கும். அத்னால இனி ஸ2 ந்னு எழுத உத்தேசம். அப்புறமா எல்லாத்தையும் திருத்தணும்.