Pages

Wednesday, January 13, 2010

மாக புராணம் 15


15. பிரும்ம சிவ கலக சா2ந்தி
க்ருத்ஸமதர்: ஒரு சமயம் ரஜோகுணம் மேலிட்டதால் சதுர்முகனும் பரமசிவனும் “நானே உலகத்தின் கர்த்தா! போஷகன் என்று வாதம் செய்தனர்.” இந்த உயர்ந்த மூர்த்திகளே வாதிட்டால் யார் முன் வந்து ஸமாதானம் செய்வது? பற்பல காரணங்களை காட்டி பல நாட்கள் வாதம் செய்தனர். இதைக்கண்ட மஹாவிஷ்ணு தனது விராட்ரூபத்தை இவர்கள் முன்னே தோற்றி வைத்து அங்கிங்கெனதபடி எங்கும் நிறைந்து நின்றார். இதைக்கண்ட பிரும்மனும் சிவனும் நம் வாதம் முடிவதற்கே இந்த ரூபம் தோன்றியது போலிருக்கிறது. இதனது ஆதியையும் முடிவையும் கண்டறிந்து வருபவரே உயர்ந்தவர் என்ற தீர்ப்புக்கு வந்தனர். அதைக்காண வெகு தூரம் வெகு காலம் சென்றனர். அது ஸகல உலக வடிவமாக இருப்பதால் பதிந்நான்கு லோகமும் சென்றனர். அதன் இரு செவிகளிலும் தங்களையும் தங்கள் உலகத்தவரையும் கண்டு ஆச்சரியமடைந்தனர். பல்லாண்டு தேடித் திரிந்து எங்கும் காணாமல் களைத்து தம்மிருப்பிடமே வந்தனர். தங்களுக்கு மேலாக உள்ளவர் இந்த விராட் புருஷர் என எண்ணி ரஜோகுணம் அகல சத்வ குணம் வளர விஷ்ணுவின் அருளால் அவரைத்துதித்தனர். பரம்பராணாம் பரமம் பவித்ரம் -புராண கர்தாரமந்தமாச்2ரயம்| த்வாம் வேதமாஹு: கவய: ஸுபுத்யாநமோஸ்துதே பன்னகவைசி2தேகோ|| அத்தகைய சுலோகங்களால் துதித்தனர். அதில் நதிகளில் நீ கங்கை! மலைகளில் ஹிமயமலை! மிருகங்களில் சிம்மம்! ஸர்ப்பங்களில் அநந்தன்! ரத்னங்களில் வஜ்ரம்! ஜலப்பிறவிகளில் சந்த்ரன்! இப்படி உயர்ந்ததெல்லாம் ஸ்ரீ விஷ்ணுவே என்று உமதருள் இல்லாததால் எங்களுக்கு கர்வமும் வாதமும் எழுந்தது! உங்களது விராட் ஸ்வரூபத்தை தரிசித்ததால் நல்லறிவு உண்டானது. தங்களது அழகான பழைய ரூபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். என்றனர். பகவான் கூறினார். உங்களுக்கு சா2ந்தி உண்டாகவே இந்த ரூபத்தை எடுத்தேன். மாயையிலிருந்து ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உண்டாயின. இந்த மூன்று குணங்களில் சிக்காதவர் இல்லை. ஸத்வ குணங்கள் பிரகாசமானது; நோயில்லாதது. ரஜஸ் ஆசை, த்ருஷ்ணை, ஸங்கம் முதலிய ரூபமுள்ளது. தமஸ் அக்ஞானத்தால் தோன்றி மோஹம், நித்திரை, சோம்பல், தவறுதல் முதலிய ஸ்வரூபத்தை அடைந்து ரஜஸ்ஸும் தமஸ்ஸும் நான் பெரியவன்; இதைச் செய்தேன்; அதை செய்யப்போகிறேன் என்ற அகங்காரத்தை உண்டு பண்ணும். ஈச்2வரராயினும் இந்த குணங்களுக்கு உட்பட்டு வாதம் செய்தீர்கள். ஓ பிரும்மனே! உலகெல்லாம் மஹா ப்ரளயத்தை அடைந்த போது என்னிடம் சகல வஸ்துக்களும் சூக்ஷுமமாகி தங்கப்பொடி மெழுகில் ஒட்டுவது போல் லயித்திருக்கின்றன. மறுபடி உலகை படைத்தேன். நான் ஒருவனே பரமார்த்த வஸ்துவானதால் நானே நீயாகவும் உலகமாகவும் ஆனேன். ஆதலால் நமக்குள் பேதமேது? உன்னை கர்மாக்களில் மஹர்ஷிகள் முதலில் பூஜிப்பார்கள் என்று கூறினார். மேலும் சி2வனைப் பார்த்து கூறினார்:
16. ஹரி ஹரனை போற்றுதல்
விஷ்ணு: ஓ ச2ம்போ! நீர் சந்த்ர சூர்ய அக்னி இவைகளைக் கண்ணாக கொண்டு உலகை ரக்ஷிக்கிறீர். நம் இருவரிலும் சிறிது கூட பேதமில்லை. எல்லோராலும் பூஜிக்கத்தக்கவர் நீர். உம்மை உபாஸிப்பவர் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைவர். நீரே உலகமாகவும் உள்ள பரப்ரும்மம். பன்னிரண்டு ஆதித்யர்களில் உபேந்திரன் நீர்; வஸுக்களில் பாலகன்; வேதங்களில் ஸாம வேதம்; சந்தஸ்களில் ஸாவித்ரீ; வித்யைகளில் வேதாந்த வித்யை; ச2க்திகளுக்குள் மாயா ச2க்தி; ரஹஸ்யமானவைகளில் ஓங்காரம்; வர்ணங்களில் பிராம்ஹணன்; ஆச்2ரமங்களில் கிருஹஸ்தாச்2ரமம்; எல்லா பிராணிகளின் ஹ்ருதயத்தில் உள்ள புருஷன்; யுகங்களில் க்ருத யுகம்; ஸர்வ மார்கங்களுள் ஸூர்ய மார்கம்; மாயாவிகளில் விஷ்ணு; ஸதிகளில் அருந்ததீ; பக்ஷிகளில் கருடன்; ஸூக்தங்களில் புருஷ் ஸூக்தம்; யஜுர் வேதத்தில் ச2த ருத்ரீயம்; யோகிகளில் அநந்தன். அதிகமாக கூறுவதேன்? நான் எப்படியோ அப்படித்தான் நீர், நம் இருவரில் பேதமில்லை. நான் முன்னம் உமது பெருமையை நாரதருக்குக்கூறினேன். ஆதலால் அவர் உம்மை தரிசிக்க வந்திருக்கிறார். பல்லாண்டு தவம் செய்ததால் ப்ரஸன்னரான உம்மை இதோ துதிக்கிறார் பாருங்கள். பிரும்மா, விஷ்ணு, சி2வன் இந்தப்பெயருள்ளவர் ஒருவரே; அவர்களில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று பேதம் பாராட்டுபவர் நரகம் செல்வர் என்று கூறி இருவர் கலகத்தையும் அகற்றினார். ஆதலால் மஹரிஷிகளே! உங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாதம் கர்வத்தால் உண்டானது. அதை அகற்றி பகவானை த்யானம் செய்து அர்ச்சித்து அவர் கதையை கேளுங்கள்.” என்று சனகாதியர் கூறியதை க்ருத்ஸமதர் ஜந்ஹுவுக்கு உபதேசித்தார்.

No comments: