22. ஏகாதசி வ்ரத வர்ணநம்.
க்ருத்ஸமதர்: ஸத்யஜித் அந்தப் பதினோராவது நாளில் விசேஷமாக பகவானைப் பாரிஜாத மரத்தடியில் ஆவாஹனம் செய்து தேவர்களது நன்மையை நாடி கோவிந்த கோவிந்த என்ற மந்திரங்களால் பூஜித்தான். இரவெல்லாம் கண் விழித்து பகவன் நாம சங்கீர்த்தனம் செய்தான். அவனது பூஜை தன் நலத்துக்கல்லாமல் தேவர்களுக்காக செய்ததால் அதிக சந்தோஷத்துடன் பகவான் சங்க சக்ர பீதாம்பரியாக கருடன் மீது அமர்ந்து வந்து ஸத்யஜித்துக்கு தர்ஸ2னம் தந்தார். உடனே எழுந்து பணிந்து துதித்தான். உனக்கு என்ன வரம் வேண்டுமென்று பகவான் கேட்க " ப்ரபோ! முதலில் ஆகாச கதியை இழந்து தவிக்கும் தேவர்களுக்கு அந்த சக்தியை அளியுங்கள்; பிறகு இங்கு தங்கி எல்லோருக்கும் முக்தியை கொடுங்கள் என்று வேண்டினான்.
அப்படியே ஆகட்டும்! நீ இந்தப் பாரிஜாத மரத்தை இந்திரனுக்கு தானம் செய். போகாசை உள்ள அவன் இதை எடுத்துச்செல்லட்டும். எனக்கு மிகப்பிரியமான துளசியைக் கொண்டு நீ பூஜை செய்" என்றார். மறுநாள் த்வாதசி. மனைவியுடன் கூட, காலையில் பகவானைத் துளசியால் அர்ச்சித்து அந்த பாரிஜாதத்தை வேருடன் எடுத்து இந்த்ரனுக்கு தானம் செய்தான் ஸத்யஜித். விழித்து எழுந்த ஸ2க்ராதிகர் அங்கு விஷ்ணுவை தர்சித்து நமஸ்காரம் செய்து போற்றினர். அவர்கள் முன்னிலையில் "ஓ பக்த, இன்று பதினொன்றாவது நாள் ஆஹாரமின்றி என்னை பூஜித்தாய் அல்லவா? இது எனக்கு மிகப்பிரியமான ஏகாதசி திதி; அதே போல் ஒரு பக்ஷத்தின் பதினோராம் நாள் உபவாஸம் ஜாக்ரணமிருந்து என்னைப் பூஜிப்போர், த்வாதசியில் அன்னம் முதலியன தானம் செய்வோர் வைகுண்டம் செல்வர். பூர்ண தக்ஷிணையுடன் அஸ்2வமேதம் செய்வதால் உண்டாகும் பலன் ஏகாதசி உபவாஸம் இருப்பவர்க்கு உண்டு. தேவர்களுக்கு உயிர் அளித்த நாளான த்வாதசியில் அன்னதானம் செய்பவனுக்கும் அது கிடைக்கும்.
தசமி அன்று ஓரு வேளை புஜித்து ஏகாதசியில் சுத்த உபவாஸம் இருந்து த்வாதசியில் ஒரே வேளை போஜனம் செய்தால்தான் ஏகாதசீ விரதம் பூரணமாகும். ஏகாதசி திதியில் சாப்பிடுமன்னம் புழுவுக்கு சமாநம். மஹா பாபங்களைப்போக்கி மஹா ப2லங்களை தருவதும் எனக்கு மிக ப்ரியமாயுமுள்ள இந்த விரதத்தை செய்வோர் எனது ரூபத்தை அடைவர். நான்கு வர்ணத்தவரும் நான்கு ஆஸ்2ரமத்தவரும் ஸன்யாசிகளும் பாலரும் வ்ருத்தரும் ஸ்த்ரீக்களும் இதை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதஸி2 அன்று உண்பவரை எனதாணையால் யமன் நரகத்தில் தள்ளி ஸி2க்ஷிப்பான். மறு பிறவியில் துக்கப்படும் அல்ப பிராணியாக பிறப்பர்.
"ஸ்த்ரீ ஆலிங்கனம், எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், வபநம், போஜநம், தாம்பூலம், நித்திரை முதலியவற்றை விட்டுப்பக்தியுடன் என்னை பூஜிக்க வேண்டும்.” என்று கூறி பகவான் கையை மேலே தூக்கிக்கொண்டு "மானிடராய் பிறந்த அனைவரும் ஏகாதசியில் அன்னத்தை உண்ணாதீர்கள். எல்லா மாதங்களிலும் எல்லா பக்ஷங்களிலும் பதினோராவது நாளான ஏகாதசியில் சாப்பிடாதீர்கள், சாப்பிடுபவன் மஹா பாபியாவான்" என்றார்.
No comments:
Post a Comment