Pages

Sunday, January 17, 2010

மாக புராணம் 20



21.இந்திரனும் திகைத்தான்.

க்ருத்ஸமதர்: தனது வேலைக்காரன் வராரததைக்கண்டு தன் பரிவாரத்துடன் சக்ரன் துளஸீ பாரிஜாத வநத்தை நாடி வந்தான். அவர்களும் நிர்மால்யத்தை காலால் மிதித்ததால் ஆகாஸ2 மார்கமாக செல்லும் சக்தியையும் பலத்தையும் இழந்து பூமியில் இறங்கி பதினொரு நாள் அன்ன ஆகாரமின்றி தவித்தனர். ஸத்யஜித் அவர்களைப்பார்த்து "ஐயா தாங்கள் மூன்று லோக அதிபதியாக இருந்தும் இந்த கஷ்டத்திற்கு ஆளானதேன்?” என்று வினவினான்.அவர்கள் வெட்கத்தில் தலை குனிந்து "ஐயா! இந்தப்பாரிஜாத மலரில் ஆசை கொண்டு, அதனால் மதியையும் மற்றவைகளையும் இழந்தோம்" என்று, அன்ன ஆகாரமின்றி வருந்தினர். தன் இருப்பிடம் வந்தவர் உணவில்லாமல் இருக்கும்போது தான் மாத்திரம் உண்பது நியாமல்ல என்று தோட்டக்காரனும் அவன் மனைவியுங்கூட புஜிக்காமல் இருந்தனர். தேவர் மனித அன்னத்தை புஜிக்கமாட்டார். ஆதலால் அனைவரும் பட்டினி.
ஸத்யஜித் பதினோராவது நாள் மரத்தின் மீது போடப்பட்டிருந்த நிர்மால்யங்களை எல்லாம் கூட்டி அப்புறப்படுத்தினான். அச்சமயம் ஸுவர்க்கத்திலிருந்து மற்ற தேவர்களும் இந்திரனைத் தேடி துளசி வனத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் நிர்மால்யத்தை மிதிக்காமல் இருந்ததால் பூர்ண சக்தியுடன் இருந்து, மூச்சை மட்டும் விட்டுக்கொண்டு சாகாப்பிணம் போலிருந்த அவர்களை கண்டு திகைத்து நின்றனர். இவர்களுடன் வந்த நாரத முனிவர் இந்த நிலையைக்கண்டு வருந்தினார். வைகுண்டம் சென்று துதித்துப் பகவானிடம் இதை விக்ஞாபனம் செய்து கொண்டார். பகவான் "சத்யஜித் அந்த வநத்தை பாதுகாத்து அதனால் ஜீவித்து இருக்கிறான். இந்த்ரன் அந்த புஷ்பங்களை பறித்து தேவ ஸ்த்ரீகளுக்கு அலங்காரம் செய்தான். புஷ்பம் குறைய, அதை எடுத்துச்செல்பவரை கண்டு பிடிக்க என்னை பூஜித்த பழைய புஷ்பங்களையும் பத்ரங்களையும் அந்த மரங்களின் மீது தூவியிருந்தான். எனது நிர்மால்ய புஷ்பம், பத்ரம், அபிஷேக தீர்த்தம், நைவேத்யம் செய்த பொருள் இவைகளை அறிந்தோ அறியாமலோ காலால் மிதித்தாலும் தண்டினாலும் உடனே பங்குவாக ஆவர். இப்படி இந்திராதிகள் பங்குவாகத் தவிப்பதை கண்ட எனது பக்தன் அந்த நிர்மால்யங்கள் யார் காலிலும் படாதபடி அப்புறப்படுத்தினான். ஆஷாட மாத பிரதமை முதல் தேவர்கள் அங்கு வந்து பதினொரு நாட்களாக பங்குவாகி ஆஹாரமின்றி அவர்கள் பங்குத்தன்மை அகன்று முன் போல் ஸுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பதினொரு நாளாக என்னை பூஜிக்கிறான். இன்று ஏகாதசி திதி. எல்லோரும் உபவாஸத்துடன் தூங்காமல் இருக்கின்றனர். நான் சத்யஜித் முன் தோன்றி ஏகாதசி மஹிமையை கூறி நற்கதி தரப்போகிறேன்" என்றார். இதைக்கேட்டு நாரதர் தன் இருப்பிடம் சென்றார்.


No comments: