Pages

Monday, January 4, 2016

நான் யார்? - 8


என்னவோ தியரடிகலா சொல்லறீங்க. எனக்கே அது புரியணும். அது எப்படி நடக்கும்?

சரி, இப்படி வெச்சுக்கலாம். நம்ம உடம்பில ’நான்’ ந்னு ஒண்ணு கிளம்பறது இல்ல? அதுவே மனம். இந்த நான் என்கிற நினைவு எங்கேந்து வருதுன்னு பார்க்கப்பார்க்க அது ஏதோ ஒரு இடம்ன்னு தெரிய வரும். அதுக்கு இதயம் ந்னு பெயர் சொல்லறாங்க. (இல்ல இல்ல, மருத்துவ ரீதியா சொல்கிற இதயம் இல்லை. இது பாப்புலரா புழங்கற இதயம்.) சுய நலம்ன்னு தோணினாக்கூட ’நான் நான்’ ந்னு நினைச்சுக்கொண்டே இருந்தாக்கூட நாளடைவில் இந்த இடத்துக்கு கொண்டு விட்டுடும்.
தூங்கி எழுந்துக்கறோம்; மனசில வர முதல் எண்ணம் என்ன? நான் இருக்கேன்
அப்புறமா கொஞ்சம் மெதுவா நாம எங்க எந்த ஊர்ல இருக்கோம்; இப்ப காலையா மாலையா; அடுத்து இருக்கிற வேலை என்னன்னு நினைவுக்கு வர ஆரம்பிக்கும். அப்பறமாத்தான் இன்னைக்கு ஞாயித்துக்கிழமை, இன்னும் கொஞ்ச நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடலாம்ன்னு எல்லாம் நினைப்பு வரும்! நான் ந்னு ஒரு எண்ணம் வந்த பிறகுதான் கிட்டே இருக்கிற அடுத்த மனுஷரோ தூரத்தில இருக்கிறவங்களோ நினைவுக்கு வர ஆரம்பிப்பாங்க. இப்படி நான் ந்னு ஒண்ணு இல்லாம முன்னிலை, படர்க்கை எல்லாம் இல்லை. தூக்கத்திலன்னு இல்லாம விழிப்பில கூட இப்படி நான் ந்னு ஒண்ணு இல்லாம போனால் அப்ப நமக்கும் மற்றவற்றுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாது.

9. மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன?
இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவ தெதுவோ அஃதே மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்தவிடத்திற் றோன்றுகிற தென்று விசாரித்தால், ஹ்ருதயத்திலென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். நான், நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும்கூட அவ்விடத்திற்கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகளெல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை யின்றி முன்னிலை படர்க்கைக ளிரா.



No comments: