Pages

Wednesday, January 13, 2016

நான் யார்? - 9குதிரை மாதிரி தாவுதுன்னு நல்லாச்சொன்னீங்க! அது மட்டுமா? முடிவே இல்லாம கடல் அலை போல எண்ணங்கள் வந்துகிட்டேதானே இருக்கு? அது எப்ப ஓயறது; எப்ப மனசு ஏகாக்கிரதையை அடையறது? எண்ணமே வராம இருக்கறதை அப்பறமா பாத்துக்கலாம்!

நம்மோட உண்மை சொரூபத்தை பாத்து அதுல லயம் ஆக ஆக நினைவுகள் எல்லாம் நீங்க ஆரம்பிச்சுடும்.

13. விஷயவாசனை (நினைவு)கள் அளவற்றனவாய்க் கடலில் அலைபோலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?
சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும்.

அது சரி! எவ்ளோ வருஷமா இந்த எண்ணங்கள் எல்லாம் இருக்கு! ஒண்ணே திருப்பித்திருப்பி வேற வரது…. என்னை ஏமாத்தினவனைப் பத்தி, அடிச்சவங்களைப்பத்தி, திட்டினவங்களை பத்தி…. இதெல்லாம் கொஞ்சமா நஞ்சமா? அதோட இந்த ஜன்மத்துலதான் இதுன்னா இன்னும் ஏகப்பட்ட முன் ஜன்மங்களில எத்தனை விஷயங்களில ஈடு பட்டு வாசனை எல்லாம் சம்பாதிச்சு இருக்கேனோ! இதெல்லாம் ஒடுங்கிப்போய் சொரூபத்திலேயே இருக்கிறதுன்னா சாத்தியமா என்ன?
அப்படி சந்தேகம் எல்லாம் வரக்கூடாது! வெளியுலகத்தில நமக்கு ஏதாவது வேணும்ன்னா எவ்வளோ சிரமப்பட்டு சம்பாதிக்கிறோம். ஒரு சின்ன வேலை நடக்கணும்; அதுக்காக நடையா நடக்கிறோம். உழைக்கிறோம். என்னென்னவோ த்யாகம் எல்லாம் செய்து அதை அடைய தயாரா இருக்கோம். ஆனா சும்மா இரு ந்னு சொன்னா அதுக்கு ஏன் இவ்வளோ ஆட்சேபணை எல்லாம் வரது? சந்தேகமே இல்லாம விடாப்பிடியா சொரூபத்யானத்தை கடை பிடிக்கணும்.

உம்… நான் எவ்வளோ பாபங்கள் செஞ்சு இருக்கேன் தெரியுமா?

அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்! பாப புண்ணியங்கள் செஞ்சது எல்லாம் கடந்த காலம். பாபியோ புண்ணியம் செஞ்சவனோ, யாரா இருந்தாலும் அதையே நினைச்சு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காம மேலே நடக்க வேண்டியதை பார்க்கலாம். ஊக்கத்தோட சொரூப த்யானம் செய்யறதுதான் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.
மனசு என்கிறது ஒண்ணுதான். நல்ல மனசு கெட்ட மனசுன்னு ரெண்டு மனசு இல்லை. அந்த மனசு எது கூட நிற்கிறது என்கிறதை பொருத்து நல்லது கெட்டதாகிறது. நம்மோட வாசனைகள் -பழக்க வழக்கங்கள் - நல்லதா இருந்தா அது நல்ல மனசு; கெட்டதா இருந்தா கெட்ட மனசு.
நம்ம மனசை கவனிச்சு சரி பண்ணவே நமக்கு முடியலை. இதுல எதுக்கு அனாவசியமா மத்தவங்க காரியத்திலேயும் லோக விஷயங்களிலேயும் மனசை அலைய விடணும்? லோகத்தோட விஷயத்தை லோகமே பாத்துக்கட்டும். மத்தவங்க அவங்கவங்க விஷயத்தை பாத்துக்கட்டும். அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நமக்கு எதுக்கு சிந்தனை? எவ்வளோதான் கெட்டவங்களா இருந்தாலும் அவங்ககிட்ட ஒரு வெறுப்பு வைக்கக்கூடாது. விருப்போ, வெறுப்போ அது தேவையில்லாத இன்னொரு சம்பந்தத்தை ஏற்படுத்துது இல்லையா? இப்படிப்பட்ட பற்றை விடணும்.

யார் யாருக்கு எதை கொடுத்தாலும் அது தனக்கேதான் கொடுக்கப்படுது. தன்னை விட அந்நியமா வேற யாரும் இல்லையே?
ம்ம்ம் இன்னொரு விஷயம் நினைவுக்கு வரது. யாகம் முடிந்து தக்‌ஷிணை கொடுக்கற சமயத்துல சொல்லற மந்திரம். யாகம் செய்தவர் அதோட பலன் தனக்கு வரணும்ன்னு தக்‌ஷிணை கொடுக்கறாராம். செய்து வைத்தவர் ’ரைட்டு; அதுக்கு பதிலா பணம் வரட்டும்’ ன்னு வாங்கிக்கறாராம்! எப்படியோ எதை கொடுத்து வாங்கினாலும் ஒவ்வொத்தருக்குமே ஒவ்வொண்ணு கிடக்கறது. இது புரிஞ்சா யாரும் கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.
நான் என்னுது ந்னு ஒரு நினைவு எழுந்தாத்தான் உலகமே எழுகிறது; இது அடங்கினா எல்லாமே அடங்கறது! எவ்வளவுக்கு எவ்வளோ நாம அடங்கி தாழ்ந்து போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளோ நல்லது. அப்படி இருந்தா எங்கே இருந்தா என்ன? அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலோ, குச்சு வீடு, குடிசையோ எதானாலும் பிரச்சினை இல்லை! வெள்ளத்துக்கு நடுவிலே இருக்கோமோ நல்ல வெய்யிலோ ஒரு பொருட்டு இல்லை. எங்கே இருந்தாலும் நலமாவே இருப்போம்.

14. தொன்றுதொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா?
'முடியுமா, முடியாதா?' வென்கிற சந்தேக நினைவுக்குமிடங் கொடாமல், சொரூபத் தியானத்தை விடாப் பிடியாய்ப்பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியா யிருந்தாலும், 'நான் பாபியா யிருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?' என்றேங்கி அழுது கொண்டிராமல், தான் பாபி என்னுமெண்ணத்தையு மறவே யொழித்து சொரூபத் தியானத்திலூக்க முள்ளவனாக விருந்தால் அவன் நிச்சயமாயுருப்படுவான். நல்ல மனமென்றும் கெட்ட மனமென்று மிரண்டு மனங்க ளில்லை; மன மொன்றே. வாசனைகளே சுப மென்றும், அசுப மென்று மிரண்டு விதம். மனம் சுப வாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமென்றும், அசுப வாசனை வயத்தாய் நிற்கும் போது கெட்டமன மென்றும் சொல்லப்படும். பிரபஞ்ச விஷயங்களிலும் பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாயிருந்தாலும், அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத்தக்கன. பிறருக் கொருவன் கொடுப்ப தெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடா தொழிவான்? தானெழுந்தால் சகலமும் எழும்; தானடங்கினால் சகலமு மடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை யடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலு மிருக்கலாம்.

Post a Comment