Pages

Friday, January 1, 2016

நான் யார்? - 7


அந்த லோகங்களை நீங்க சொல்லற மாதிரி பாம்பில்லை; கயிறுன்னு உண்மையா தெரிஞ்சுக்கறது எப்போ?
இப்ப லோகத்தை நாம் பார்க்கிறது நம்மோட மனசாலத்தான்னு சொன்னோமில்லையா? அந்த மனசால இல்லாம ”பார்க்க”த்தெரியும்போது அது நடக்கும்!

  1. திருசியமாகிய ஜகத் எப்போது நீங்கும்? சர்வ அறிவிற்கும் சர்வ தொழிலுக்கும் காரணமாகிய மனம் அடங்கினால் ஜகம் மறையும்.

மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப் பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு கேட்டா இல்லையேன்னு சொல்லுவோம்!
ஒரு வேளை அரை குறையா அதை பார்த்து இருந்தா, ஆமா இருந்தது போல இருக்கு. “அதுல பூ இருந்ததா?” “ஆமாம், பூ இருந்தாப்போலத்தான் இருக்கு!” அது என்ன கலர்? “ ம்ம்ம் நினைவில்லையே!” “வாடி இருந்ததா ப்ரெஷ்ஷா இருந்ததா?” “தெரியலையே!”

ஆக மனசே அதன் புலன்கள் வழியாக பார்த்து ஒரு பொருளை விரிக்கிறது. அதைப்பத்திய நினைவுகள் அதிகமாக ஆக அது இன்னும் விரிகிறது.
விழிப்பு நிலையிலும் கனவு உறக்கத்திலும் மனசு இருக்கு. நினைவுகள் இருக்கு. (கனவு நினைவில இல்லையேன்னா, அது அப்ப கொஞ்சமே கொஞ்சம் நேரம் இருந்தது. அப்புறம் மறந்து போனோம்.)

விரிக்கிற இந்த மனசு சுருங்கி தன் இடத்துக்கு போயே ஆகணும். ஒத்தர் தண்ணி இல்லாம சாப்பாடு இல்லாம கொஞ்ச நாள் இருந்துடலாம். ஆனா தூக்கம் இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்டம். முழிச்சுக்கொண்டே இருக்கணும்ன்னு நினைச்சுக்கொண்டே அப்படியே தூங்கிடுவோம். ஆழ் தூக்கத்தில இருந்து விட்டு விழிக்கிறப்ப அப்பாடா! ஒண்ணுமே தெரியலை என்போம். ஆமாம், தூங்கறவனைப்பொறுத்த மட்டில் உலகம் இல்லாமல் போகிறது!
இந்த மனசு கொஞ்சம்…. கொஞ்சம் என்ன? நிறையவே விசித்திரமானது! என்ன நினைச்சுகிட்டு இருக்கோம்ன்னு கொஞ்சம் கவனியுங்க! டக்குன்னு நினைப்பு காணாமப்போகும். ஆனா கவனம் சிதறிய மாத்திரத்தில் அது திருப்பி முளைக்கும்! சாதாரணமா பயிற்சி இல்லாம இப்படி சில நொடிகளுக்கு மேல கவனத்தை மனசு மேல வைத்திருக்க முடியாது. பழகப்பழக இந்த சக்தி அதிகரிக்கும்.
என்ன இப்படி காணாமப்போகிறது? ஏன்னா மனசு ஏதோ ஒரு பருப்பொருளை - ஸ்தூலமான பொருளை பிடிச்சுகிட்டுத்தான் நிக்கும். தனியா நிக்க முடியாது.
இபடி மனசு காணாமப்போகும் போது மீதியா இருக்கறதே ‘தான்’’ என்கிற ஆத்ம சொரூபம்.
இந்த மனசைத்தான் சூக்‌ஷ்ம சரீரம்ன்னோ அல்லது ஜீவன்னோ சொல்கிறாங்க.

  1. மனதின் சொரூபமென்ன?
    மனம் என்பது ஆத்ம சொரூபத்தில் உள்ள ஒரு அதிசய சக்தி. அது சகல நிலைகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப்பார்க்கின்ற பொழுது தனியாய் மனமென்று ஒரு பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகமென்றோர் பொருள் அன்னியமாயில்லை. தூக்கத்தில நினைவுகளுமில்லை; ஜகமும் இல்லை. ஜாக்ர சொப்னங்களில் நினைவுகளுள; ஜகமும் உண்டு. சிலந்திப்பூச்சி எப்படி தனிடமிருந்து வெளியில் நூலை நூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக்கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்தில் இருந்து ஜகத்தை தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக்கொள்ளுகிறது. மனம் ஆன்ம சொரூபத்தினின்று வெளிப்படும்போது ஜகம் தோன்றும். ஆகையால் ஜகம் தோன்றும்போது சொரூபம் தோன்றாது. சொரூபம் தோன்றும் (பிரகாசிக்கும்) போது ஜகம் தோன்றாது. மனத்தின் சொரூபத்தை விசாரித்துக்கொண்டே போனால் மனம் தானாய் முடியும். தான் என்பது ஆத்ம சொரூபமே. மனம் எப்போதும் ஒரு ஸ்தூலத்தை அனுசரித்தே நிற்கும்; தனியாய் நிற்காது. மனமே சூக்‌ஷ்ம சரீரம் என்றும் ஜீவன் என்றும் சொல்லப்படுகிறது.

No comments: