Pages

Friday, April 29, 2016

கிறுக்கல்கள்! - 111


விருந்தினர் ஒருவர் தன் நாட்டில் நடக்கும் கலாசார விஞ்ஞான பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து பெருமையாக பேசினார்.

மாஸ்டர் கேட்டார்: சரி இவை எல்லாம் உங்கள் நாட்டினர் மனதில் ஏதாவது முன்னேற்றத்தை உண்டாக்கி இருக்கிறதா?

வழக்கம்போல் கதை சொன்னார்:
ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவில் இருண்ட பகுதிக்குள் சென்று மாட்டிக்கொண்டார். சிறை பிடித்தவர்கள் மனிதர்கள் கொன்று உண்ணும் பழக்கமுடையவர்கள். வெள்ளைக்காரரை கொல்லும் முன் தங்கள் தலைவனிடம் கொண்டு நிறுத்தினார்கள். அவர் தன்னுடன் துல்லியமான ஹார்வேர்ட் உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவதைக்கேட்டு வெள்ளைக்காரர் வியப்பின் எல்லைக்கே போய் விட்டார்.
”ஆமாம் ஹார்வேர்டில் படித்த பிறகு நீங்கள் எதுவும் கற்றுக்கொள்ளவில்லையா?”
”கற்றுக்கொள்ளாமல் என்ன? உன்னை கொன்று சமைத்த பிறகு நாங்கள் பொருத்தமான உடை அணிந்து கொண்டே சாப்பிட உட்காருவோம்!”

Thursday, April 28, 2016

கிறுக்கல்கள்! - 110



மாஸ்டர் பல சமூக ஆர்வலர்களுடன் அதிருப்தியுடன் இருந்தார். அவரது புகார் இவர்கள் சீர்திருத்தங்களை கேட்கிறார்கள்; புரட்சி செய்யவில்லை என்பதே. விளக்க ஒரு குட்டிக்கதை சொன்னார்.
ஒரு அரசரின் ஆட்சியில் சிறைச்சாலையில் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகள் நிறையபேர் இருப்பதாக தெரிந்தது.
அரசருக்கு இது கவலையை உண்டாக்கியது. அதனால் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை ஒன்றை கட்ட உத்தரவிட்டார்.

Wednesday, April 27, 2016

கிறுக்கல்கள்! - 109


மாஸ்டரின் சீடர் ஒருவர் மாஸ்டரை தெய்வமாகவே கண்டார்.

ஓ மாஸ்டர் நீங்கள் எதற்கு உலகில் அவதாரம் எடுத்து வந்தீர்கள்?
உன்னைபோல முட்டாள்களுக்கு மாஸ்டர்களை தொழுது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொல்ல!

Tuesday, April 26, 2016

கிறுக்கல்கள்! - 108


மாஸ்டரை நவீன விஞ்ஞான நுட்பங்கள் கவர்ந்தாலும் அவை முன்னேற்றம் என்று சொல்லக்கூடியவை இல்லை என்பார்.
அவருக்கு உண்மையாக முன்னேற்றம் இதயத்தினுடையது, மகிழ்ச்சியினுடையது; கருவிகளுடையதோ மூளையுடையதோ இல்லை.
ஒரு முறை நிருபர் ஒருவர் அவரிடம் நீங்கள் நவீன கலாசாரத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றூ கேட்டார்.
மாஸ்டர் சொன்னார்: ”அது நல்ல ஐடியா!”

Monday, April 25, 2016

கிறுக்கல்கள்! - 107



மடத்துக்கு வந்திருந்த ஒரு கலைஞர் ஒரு உரை நிகழ்த்தினார்.

கலை என்பதை நீங்கள் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். ஆனால் அழகு என்பது? அழகை எங்கும் பார்க்கலாம்! வானில், நிலத்தில்…. எல்லா இடங்களிலும்! இலவசமாக எடுத்துக்கொள்ள அது கூவுகிறது! பெயர் என்று எதுவும் ஒட்டப்படாமல்!”

அடுத்த நாள் சீடர்களுடன் தனியாக இருக்கும்போது மாஸ்டர் சொன்னார்: "ஆன்மீகத்தைப்போலவே! அதன் குறியீடுகள் கோவில் எனும் அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனால் அது எங்கும் பரவிக்கிடக்கிறது. இலவசமாக எடுத்துக்கொள்ளஅது கூவுகிறது! பெயர் என்று எதுவும் ஒட்டப்படாமல்!”

Sunday, April 24, 2016

மஹாகணபதி - 2



சரி சரி. இதோ இருக்கார்! 

பீ3ஜாபூர க3தேக்ஷு கார்முகருஜா சக்ராப்3ஜ பாசோத்பல:
வ்ரீஹ்யக்3ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்3யத் காராம் போ4ருஹ:
த்4யேயோ வல்லப4யா ஸபத்3மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத்3 பூ4ஷயா
விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தி2த கரோ விக்நேச இஷ்டார்த23:

மாதுளை, கதை, கரும்பு வில், ஒளிதரும் சக்கரம், தாமரை மலர், பாசக்கயிறு, அல்லி எனும் நெய்தல், நெற்கதிர், தமது கொம்பு ஆகியவற்றை முறையே தமது பத்துத் திருக் கரங்களிலும், பதினோராவது துதிக்கையில் ரத்தினகலசத்தைத் தரித்துக் கொண்டுள்ளவரும், தமது மடியில் கையில் தாமரை மலருடன் அமர்ந்துள்ள அன்புக்குரிய நாயகியினால் தழுவப் பெற்றவரும், அகிலம் அனைத்தையும் படைத்து, அழித்து, காப்பவருமான மஹா கணபதியை நான் சேவிக்கிறேன்
மாதுளை முதல் தனது கொம்பு வரையான இவை மஹா கணபதியின் கைகளில் இருப்பவை.
இப்போது நவாவரண ஸ்லோகத்தை கவனித்துப்பார்த்து கணபதியை சுற்றி யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் ..
முன் புறம் ரமா தேவியுடன் விஷ்ணு. இவர்களது பீஜாக்‌ஷரம் ஸ்ரீம்
வலது பக்கம் பார்வதியுடன் சிவன். இவர்களது பீஜாக்‌ஷரம் ஹ்ரீம்
பின் புறம் ரதியுடன் மன்மதன். இவர்களது பீஜாக்‌ஷரம் க்லீம்.
இடது பக்கம் பூமிதேவியுடன் வராஹர். இவர்களது பீஜாக்‌ஷரம் க்லௌம்.

இப்போது அவர்கள் கைகளில் உள்ளவற்றை மஹாகணபதியின் கைகளில் உள்ளவற்றுடன் ஒப்பிடுங்கள். இவர்களது பீஜாக்‌ஷரங்களை மூலமந்திரத்துடன் ஒப்பிடுங்கள்.

கதை விஷ்ணுவுடையது.
கரும்புவில் மன்மதனுடையது.
சூலம் சிவனுடையது.
சக்கிரம் வராஹருடையது.
தாமரை லஷ்மியுடையது.
பாசம் பார்வதி தேவியுடையது.
அல்லி ரதி தேவியுடையது.
நெற்கதிர் பூமா தேவியுடையது.

மூல மந்திரத்தின் பீஷாக்‌ஷரங்களை கவனித்தால் அவை கணபதியை சுற்றி வலமாக அமர்ந்திருக்கும் தேவதைகளுடையது எனத்தெரிய வரும்.
இப்படியே எந்த மந்திரத்தின் த்யான ஸ்லோகத்தையும் கவனித்தாலும் அந்த தெய்வத்தின் கொஞ்சம் விரிவான ரூபம் புலப்பட ஆரம்பிக்கும்.

பஞ்சாவரண ஸ்தோத்திரத்தின் முழு பொருள் இங்கே:http://tw.gs/4yzbeY

மேற்படி ரூபத்தில் மஹாகணபதியை வணங்குவது மாணவர்களுக்கு மிகவும் சிலாக்கியமானது என்று என் ஆன்மீக வழி காட்டி தெரிவிக்கிறார்!


Saturday, April 23, 2016

மஹா கணபதி - சிறப்புப்பதிவு


வெகு காலத்துக்கு முன் மஹா கணபதி மந்திர உபதேசம் பெற்றேன். அப்போது த்யான ஸ்லோகத்தில் உள்ளபடியான மஹா கணபதியின் படம் கிடைத்தால் த்யானத்துக்கு சௌகரியமாக இருக்கும் என்று நினைத்தேன். பலரிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. அப்போது வலை வீசி தேடியும் கிடைக்கவில்லை!

பிறகு சிலரிடம் த்யான ஸ்லோகத்தின் பொருளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.
கணபதியைச்சுற்றி லக்‌ஷ்மி- விஷ்ணு, சிவன் -பார்வதி, மன்மதன் - ரதி. வராஹர்- பூமா தேவி என்று தேவதைகள் சூழ்ந்து இருப்பதாக சொன்னார்கள். இப்படி ஒரு படம் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இல்லையே? வரையச்சொன்னால் என்ன? என்று தோன்றியது. நண்பர் ஒருவர் இந்த மாதிரி சமாசாரங்களில் வல்லவர். அவரை போனில் கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். ஆஹா செய்து விடலாமே என்றார். சில நாட்களிலேயே தகுந்த ஓவியர் என ஒருவரை தேர்ந்தெடுத்து வேலையை ஒப்படைத்தார். என்ன செலவாகும், அட்வான்ஸ் என்ன தரலாம் என்று கேட்டபோது சுமார் ஐந்தாயிரம் ஆகும்; அட்வான்ஸ் இப்ப ஒண்ணும் வேணாம் என்று சொல்லிவிட்டார்.

சில நாட்கள் கழிந்தன. நாள் வாரமாகியது; வாரங்கள் மாதங்கள் ஆகின. என்ன ப்ராக்ரஸ் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பின்னர் ஒரு வழியாக லைன் ட்ராய்ங் போட்டார். அழகாக வந்து இருக்கிறது என்று நண்பர் சொன்னார்.

இந்த வேலையை துவங்கிய வேளை ஓவியருக்கு வேலைகள் குவியலாயின. ஒரு கோவிலில் பல ஓவியங்கள் வரைய சிங்கப்பூரில் இருந்து அழைப்பு வந்தது; போய் விட்டார். எப்போதடா வருவார் என்று காத்து இருக்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி முன்பும் விசாரிப்பதும் முடியும் அறிகுறியே இல்லை என்று தெரிய வருவதுமாக போய்க்கொண்டு இருந்தது. இப்படியே வருஷம் ஒன்று, இரண்டு… இல்லை எட்டு வருஷங்கள் கழிந்தன! ஓவியர் மிகவும் நல்ல ஸ்திதிக்கு போய்விட்டார்; ஆனால் வேலை? ஒரு வருஷம் முன் திட்டம் கொஞ்சம் உயிர் பெற்றது. தீபாவளிக்கு முன் ஓவியர் இந்த படத்தை தூசு தட்டி எடுத்து மேலே கொஞ்சம் வேலை செய்தார்.

ப்ராக்ரஸை பார்த்த நண்பருக்கு கோபமே வந்துவிட்டது, சரியான வர்ணம் பூசவில்லை. சின்ன சண்டையே வந்துவிட்டது போலிருக்கிறது. போதும் நீ வேலை செய்தது என்று திட்டிவிட்டு வந்துவிட்டார்.

பிறகு பிரபல ஓவியர் ஒருவரை பிடித்தார். ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் என்றார். என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை; வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தார்,
நண்பர் திருவிடை மருதூரில் தேர்கள் திருப்பணி செய்து கொண்டு இருந்தார். ஸ்வாமி தயானந்தர் மறைவுக்கு பின் திருப்பணியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு இருந்தது. கடைசியாக சண்டிகேஸ்வரர் தேரும் பிள்ளையார் தேரும் மட்டுமே பாக்கி இருந்தது. முடியுமா, எப்போது முடியும் என்ற விசாரம் இருந்த நிலையில் இந்த வேலை புதியதாக ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சரியான காலம் வந்து விட்டது போலும். தேர் திருப்பணி ரெகார்ட் ப்ரேக்கிங் வேகத்தில் நடந்து முடிதது. ஓவிய வேலையும் அதே காலகட்டத்தில் நடை பெற்று பூர்த்தி ஆயிற்று! தேரோட்டங்கள் முடிந்த கொஞ்ச நாளிலேயே படத்தையும் துல்லியமாக போட்டோ எடுத்து அதை சிடியிலும் பதித்து கொண்டு வந்து கொடுத்துவிட்டார்!

எல்லாம் சரி; அந்த படம் எங்கேப்பா?

Friday, April 22, 2016

கிறுக்கல்கள்! - 106


தன்னலமில்லாத அன்புன்னு ஒண்ணு இருக்கா என்று யாரோ கேட்டார்கள். மாஸ்டர் கதை சொன்னார்:
மிஸ்டர் டூகுட் கொஞ்சம் பதை பதைப்புடன் நின்று கொண்டிருந்தார். பதிவு செய்யும் தேவதை அவருடைய பதிவேட்டை முழுக்க பார்த்துவிட்டு தலை நிமிர்ந்தது. “இது ரொம்பவே டூ மச். ஒரு சின்ன தப்பு கூட பண்ணாம வாழ்ந்து இருக்கீங்க. ஒரு சின்ன சபலத்துக்கும் ஆளாகலை. செஞ்சது எல்லாம் சேவையாவே செஞ்சு இருக்கீங்க. ம்ம்ம்ம் உங்களை எப்படி சொர்க்கத்துக்குள்ள அனுமதிக்கறதுன்னுதான் புரியலை. நீங்களோ தேவதை இல்லை. மனுஷன்னா சபலப்பட்டு ஒரு சின்ன தப்பு கூட செய்யலை. ம்ம்ம்ம்… சரி உங்களை உலகத்துக்கே திருப்பி அனுப்பறோம். காலை பொழுது புலரும் முன்ன ஒரு சின்ன தப்பாவது செஞ்சுட்டு வாங்க!”

அடுத்த கணம் பண்பாளர் டூகுட் தன் தெருவில் நின்று கொண்டு இருந்தார். இரவு நேரம். என்ன செய்வது, எங்கே போவது? இந்த வழியே ‘அந்த’ மாதிரி பெண்கள் வருவார்களே என்று பார்த்தால் நேரமாகிவிட்டது போலும்; யாரையும் காணவில்லை. ஒரு மணி நேரம் சென்றது… இரண்டு…. மூன்று. அப்போது ஒரு பெண் வந்து கண் சிமிட்டினாள். வயதானவள்; அழகாக இல்லை. அதனாலென்ன? தப்பு செய்ய யாரோ அகப்பட்டார்களே! அவளுடன் போய் இரவை கழித்தார்.

பொழுது புலரும் வேளை. அவசரமாக டூகுட் உடையை தரித்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண்மணி குரல் கொடுத்தார். ஆண் துணை கிடைத்து எவ்வளோ நாளாச்சு! மிஸ்டர் டூகுட்! நீங்க செஞ்சு இருக்கற சேவை மகத்தானது!

Thursday, April 21, 2016

கிறுக்கல்கள்! - 105


அந்த மடாலயத்தில் கடிகாரங்களே இல்லை. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒரு வியாபாரி இதைப்பற்றி மாஸ்டரிடம் புகார் செய்தார்.

மாஸ்டர் சொன்னார் எங்களுடையது பிரபஞ்ச கடிகாரம்; வணிகத்துக்கான கடிகாரம் இல்லை.

வியாபாரிக்கு புரியவில்லை. மாஸ்டர் விளக்கினார்.

எல்லாம் பார்வையில் இருக்கிறது. அடர்ந்த பெரும் காட்டில் ஒரு இலை விழுந்தால் என்ன பாதிப்பு? பிரபஞ்சத்தைப்பொறுத்த வரை உங்கள் வியாபார கால அட்டவணைக்கு என்ன மதிப்பு?

Wednesday, April 20, 2016

கிறுக்கல்கள்! - 104



மாஸ்டரின் வழக்கமான பூடகமான பதில்களைக்கேட்டு, எரிச்சலான ஐரோப்பிய ப்ரொபசர் கடுப்புடன் சொன்னார் “சூயஸ் கால்வாய்க்கு கிழக்கே இரண்டு எதிர்மாறான வாக்கியங்கள் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்!”

மாஸ்டருக்கு அது மிகவும் பிடித்துப்போயிற்று. சூயஸுக்கு கிழக்கே…உண்மைக்குள் ஒரு இஞ்ச்… அதனால்தான் உண்மையை புரிந்து கொள்ள முடியாத புதிர் என்கிறார்கள்!

Monday, April 18, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 10



பெருங்குழப்பத்துடன் டீக்கடைக்கு வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். சுட்டெரிக்கும் வெயில்தான். ஆனாலும் டீக்கடைக்கு வருவோர் பெருமளவில் வந்து கொண்டுதான் இருந்தார்கள். டீக்குடிக்கத்தான் அங்கே போக வேண்டும் என்று யார் சொன்னது!
ஆச்சரியமாக ”ஐஸ் டீ குடிக்கிறீங்களா சார்?” என்று டீக்கடைக்காரர் கேட்டார்.
கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் தலை அசைத்தான்.
ஜிஞ்சர் லெமன்?
மீண்டும் தலை அசைப்பு..
டீயை உறிஞ்சியபடி அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான் இளைஞன்.
ஹும், ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த சாமிங்க எல்லாம் கையில் கத்தி கபடான்னு வெச்சுகிட்டு இருக்குங்க? கருணையே வடிவம் கடவுள்ன்னா எதுக்கு அதெல்லாம்? அந்தப்பய கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல முடியலியே என்னால? சாமி! உனக்கு நா பூஜ பண்ணறேன்; உண்டில காசு போடறேன்; மொட்ட அடிச்சுக்கறேன் - நீ எனக்கு இத இப்படி செஞ்சுதான்னு கேக்கறது வியாபாரம் இல்லையான்னு கேக்கறான். அதுவும் சரிதானேன்னு தோணுது.
இப்படி எல்லாம் இருந்தா அது என்ன சாமி?”
நல்ல சாமி”” என்று பக்கத்தில் இருந்து குரல் வந்தது!
திடுக்கிட்டுக்கொண்டு குரல் வந்த திசையை நோக்கினான்.
பெரியவர் சிரித்துக்கொண்டே பேப்பரை மடித்தார். நம்ம தொகுதில….. கட்சி சார்பா நல்லசாமி போட்டிப்போடறாராம்!” என்றார்.
! நான் நினைச்சுகிட்டு இருந்ததுக்கு பதில் வந்ததோன்னு நினைச்சேன்!”
அப்படி என்ன நினைச்சுகிட்டு இருந்தேப்பா?”
சொன்னான்.
ம்ம்ம்ம்.. நல்ல கேள்விதான். இது எல்லாம் உனக்கே தோணித்தா இல்ல, யாரும் உன்ன கேட்டாங்களா?”
ஒரு ஆசாமி கூட ஆர்க்யூமெண்டு!”
ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ! விவாதம் எல்லாம் நல்லதுதான். ஆனா ஆரம்ப நிலையில இல்லே. விவாதம் என்கிற பேர்ல குழப்ப நிறையவே ஆசமிங்க இருக்காங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்!
ரொம்பவே முன்னேறின ஆசாமிக்கு கடவுள் ஒத்தரே கூட தேவையில்லை! நாம அந்த நிலைக்கு நேரா போக முடியுமா? நீ என்ன படிச்சே?”
பிஎஸ்சி”
நேரா காலேஜ் போயிட்டையா ஸ்கூல் படிச்சு போனியா?”
ஸ்கூல்ல படிச்சுட்டுத்தான். ஸ்கூலுக்கு எல்கேஜி யூகேஜின்னு எல்லாம் படிச்சுட்டுத்தான் போனேன்!”
நல்லது! உடனடியா ஆன்மீகத்தில மேல் லெவலுக்கு போக முடியாது என்கிறது அது போலத்தான்.” கீழ் மட்டத்தில சில பல விஷயங்களை புரிஞ்சுகிட்டுத்தான் மேல் லெவலுக்குப் போகணும்.
ஒண்ணுமே எதிர் பார்க்காம பக்தி செய்யறது உசந்த லெவல்! கீழ் மட்டத்தில நம்ம நிலமை என்ன? ஏதாவது வேணும்; அல்லது எதை குறிச்சோ பயமா இருக்கு. சாமிகிட்ட பக்தி செய்யறவன் என்ன செய்வான்? சாமியை கும்புட்டு இப்படி வேணும்ன்னு கேப்பான். அப்ப அவன் பாக்கிற சாமி உருவத்தில என்ன தெரியுது? அனேகமா நாலு கை தெரியும். ஒண்ணு அபயம்ன்னு காட்டற கை.... பயப்படாதே நா இருக்கேன்! இன்னொண்ணு வர ஹஸ்தம் என்கிற கொடுக்கும் கை. மீதி ரெண்டு கையில ஏதாவது ஆயுதம் இருக்கும். இந்த ஆயுதத்தாலே உன்னை கஷ்டப்படுத்தறதை விரட்டிடுவேன்; கவலைப்படாதே!” ந்னு சொல்லறா மாதிரி இருக்கும். அதானே சாமி கும்பிடறவனுக்கு வேண்டியது?”
இப்படியே கொஞ்ச நாள் போன பிறகு பக்தன் சாமி இத கொடு அத செய்யறேன்; அதக்கொடு, இத செய்யறேன் ந்னு கேப்பான். இது வணிகம் மாதிரி இருக்கு இல்லே? ஆமாம். வியாபாரமேதான்! ஆனா நேர்மையான வியாபாரம்தானே? அதுல என்ன தப்பு? இருந்தாலும் கடவுளோட நோக்கம் உன்னை இப்படியே வெச்சு இருக்கறது இல்லே. அடுத்த படியா எதையும் எதிர் பார்க்காம பக்தி செய்யணும். எனக்கு வேணும்ன்னு கேக்காம மத்தவங்களுக்கு நல்லது செய்யறதுல நாட்டம் இருக்கணும். இப்படி முன்னேறணும். ஆனா லோகத்தில பலரும் அப்படி இல்லே என்கறது வருத்தமான விஷயம்தான். ஆனா என்ன செய்யறது? இந்த ஸ்டேஜை தாண்டித்தான் பலரும் போயாகணும்!”
இப்படி பலரும் ஆன்மீகத்தில முதல் சில படிகளில இருக்கறவங்க. இவங்களை வெச்சா ஆன்மீகத்தை எடை போடணும்?”
கண்களை மூடிக்கொண்டு பெரியவர் சொன்னதை அசை போட்ட இளைஞன் கண்களை திறந்து பார்த்த போது……
 

Friday, April 15, 2016

கிறுக்கல்கள்! - 103


மாஸ்டர் சொன்னார்: மற்றவர்களை மாற்ற நீ முயற்சிக்கும் முன் இதை உன்னையே கேட்டுக்கொள். இந்த மாற்றத்தால் எது திருப்தி அடையப்போகிறது? என் ஆணவமா? என் சந்தோஷமா அல்லது என் லாபமா?
பின் வழக்கம்போல் கதை சொன்னார்.
ஒரு இளைஞன் பாலத்தில் இருந்து குதித்து உயிரை விட பாலத்தின் கட்டுச்சுவர் மீது ஏறி நின்றான். ஒரு போலீஸ்காரர் அங்கே ஓடி வந்தார்.
ஏன்பா! உனக்கு என்ன வயசாச்சு. வாழ்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை; அதுக்குள்ள உசிரை விடறேங்கறியே?”
எனக்கு வாழ்கை வெறுத்துபோச்சு!”
தயவு செய்து நான் சொல்லறதை கேளு! நீ இப்ப தண்ணிக்குள்ள குதிச்சா நான் உன்னை காப்பாத்த பின்னாலேயே குதிக்க வேண்டி இருக்கும். இப்பவே தண்ணி பாதி உறைஞ்சு போச்சு. நானோ டபிள் நிமோனியாவில படுத்து எழுந்து இப்பத்தான் ட்யூட்டி ல சேந்தேன். என்ன ஆகும்ன்னு புரியுது இல்லையா? இந்த நிலையில் நான் உறைஞ்சு போன ஆத்தில குதிச்சா செத்துப்போயிடுவேன். என் மனைவியும் நாலு குழந்தைகளும் என்ன செய்வாங்க?இது வாழ்நாள் பூரா உன் மனசை உறுத்தணுமா? வேணாமில்ல? அதனால் நா சொல்லறத கேளு. இப்ப சமத்தா கீழ இறங்கு. வீட்டுக்குப்போ. அங்கே தனியா நிம்மதியா தூக்கு மாட்டிண்டு செத்துப்போ!”

Thursday, April 14, 2016

கிறுக்கல்கள்! - 102



சில சீடர்கள் கடும் முயற்சி எடுத்தால் உலகில் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்பார்கள். மாஸ்டர் சொல்லுவார்: உலகில் இருக்கும் அருமையான விஷயங்களை முயற்சியால் சாதிக்க முடியாது!
உன் முயற்சியால் உணவை வாயில் போட்டுக்கொள்ளலாம்; ஆனால் பசியை உன்னால் முயன்றும் உருவாக்க முடியாது.
நீ முயன்று ஒரு நல்ல படுக்கையில் படுக்கலாம்; ஆனால் தூக்கத்தை உன்னால் முயற்சி மூலம் அடைய இயலாது.
நீ யாரையாவது பாராட்டலாம்; ஆனால் ஒருவரை வியப்புடன் போற்றுதல் முயற்சியால் வராது.
நீ முயன்று ஒரு ரகசியத்தைச் சொல்லலாம்; ஆனால் நம்பிக்கையை உன்னால் முயன்று பெற முடியாது.
நீ முயன்று சேவை செய்யலாம்; ஆனால் அன்பு காட்டுதல் உன் முயற்சியால் வராது!

Wednesday, April 13, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 9


மாலை நேரம். மெல்ல இருட்ட ஆரம்பித்து இருந்தது. டீக்கடையில் டீயை உறிஞ்சியபடி இளைஞன் பராக்கு பார்த்துக்கொண்டு இருந்தான். எதிர் சாரியில் அவன் பார்வை படிந்தது. அங்கிருந்து 'சட் பட்' என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது. பார்வையை மறைத்துக்கொண்டு இருந்த ஒரு நபர் எழுந்து போக சத்தம் வந்த இடம் தெரிந்தது. அங்கே ஒரு அம்மணி கொசு பேட்டை வைத்துக்கொண்டு டி-20 கிரிக்கெட்காரர் மாதிரி ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார்.
இளைஞனின் சிந்தனை விரியலாயிற்று. இது என்ன? கொலை. ஆனா கொல்லாம இருக்க முடியுமா என்ன? அது நம்பளை கடிச்சு வியாதி வரதே! சிக்கன்குனியா டெங்குன்னு ஏதேதோ ஆயிரம் சொல்லறாங்களே? ம்ம்ம்ம்? அது சரி! கொசு கடிக்கற எல்லாருக்கும் வியாதி வரதா? இல்லையே! எத்தனையோ எளிய குடும்பங்களில கொசுவை விரட்ட வழி இருக்கா என்ன? அவங்க கொசு கடில அவஸ்தை படறாங்க; ஆனா பலருக்கும் வியாதி வரலையே! அது வரதுக்கு கர்மா இருந்து இதை ஒரு வாய்ப்பா வெச்சுக்கொண்டு வரும் போலிருக்கு!

கொலையைத்தவிர வேறு ஒண்ணுமில்லை. ஏதோ வேலை செஞ்சு கொண்டு இருக்கோம். கொசு கடிக்கிறது. யோசிக்காமலே ரிப்லெக்ஸ் ஆக்‌ஷனா அத அடிக்கறோம். சில சமயம் அடி பட்டு சாகிறது. பல சமயம் தப்பி விடுகிறது. நாமும் வேலையை தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நேரத்திலேயே திரும்பவும் கொசுக்கடி. அதே கொசு. அல்லது முன்னே கொசு அடிபட்டு செத்திருந்தா புதுசா வேற கொசு. என்ன செஞ்சாலும் கொசுக்கடியில் இருந்து தப்ப முடியலை.
ரூம்ல ரிபெல்லர், ஸ்ப்ரேன்னு என்ன செஞ்சு விரட்டி இருந்தாலும் டாய்லெட்டில் உட்காந்துட்டு வரும் ஓரிரு நிமிஷத்திலேயே அது வந்து கடிச்சு தீர்த்துடறது!
இப்ப இந்த கொசுவை கொன்னா புது கர்மா வந்து பிடிச்சுக்குமா? இல்ல நாம அடிச்சுகொல்லறதுதான் கர்மாவை தீக்கிறதா? புரியலையே! ம்ம்ம்ம்?
நாம அறியாம அடிச்சு அது செத்தா அதோட கர்மாவை தீர்த்துக்கறதுன்னு வெச்சுக்கலாமா? அப்படித்தான் போலிருக்கு!
கொசு விரட்டி வெச்சா? டிவி விளம்பரத்துல என்னதான் க்ராபிக் கொசு செத்து விழுந்தாலும் நிஜத்துல எல்லாம் மயக்கமா விழுது அல்லது கிட்ட வராம பறந்து போயிடுது. இது கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு. ஆனா இந்த பேட்டை வெச்சுண்டு அடிச்சா? அதை தேடி தேடி கொல்லறா மாதிரின்னா இருக்கு? ம்ம்ம்ம்? இது புதுசா கர்மாவை சேர்க்கும்ன்னுதான் தோணறது!
குழப்பமா இருக்கே? சரியா, தப்பா?
"சரிதான்பா !" என்ற குரல் கேட்டது. இளைஞர் திரும்பி பார்த்த போது பெரியவர் பத்தடி தள்ளி கூட்டத்தில் கரைந்து கொண்டு இருந்தார்!

Tuesday, April 12, 2016

கிறுக்கல்கள்! - 101


ஏசு தன் சீடர்களிடம் பெற்றோரை வெறுக்கச்சொல்லி இருக்கிறாரே என்று சிலர் மாஸ்டரிடம் கேட்பார்கள். மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொல்லுவார்: பெற்றோரைப்போல பெரிய எதிரிகள் கிடையாது. ஒரு முறை சூப்பர் மார்கெட் போயிருந்தேன். ஒரு பெண்மணி இரண்டு சிறு குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார்.
அட! அழகான குழந்தைகள். என்ன வயசாச்சு?” என்றேன்.
பதில் வந்தது: “டாக்டருக்கு மூணு வயசு; வக்கீலுக்கு ரெண்டு வயசு!”

Monday, April 11, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 8


அட! என்ன இந்த நேரத்துக்கு வறீங்க? வாங்க வாங்க!”
உறவினர்களில ஒத்தர் இறந்துட்டாரு. போய் வழி அனுப்பிட்டு வரேன்.”
ரொம்ப சோர்வா இருக்கீங்க?”
ஆமா. அதுக்குத்தான் மதிய நேரம் மணி ரெண்டானாலும் ஒரு டீ குடிக்கலாம்ன்னு….. காலையிலேந்து டாய்லெட்டே கதின்னு கிடந்தேன்.”
அட! என்னாச்சுங்க?”
காலை டிபன் சாப்பிட ஆரம்பிக்கறப்பத்தான் போன் வந்தது. போன் பேசிகிட்டே சாப்டு முடிச்சுட்டேன். ஆபீசுக்கு லீவு போட சில ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு கிளம்பிகிட்டு இருந்தேன். அப்பத்தான் வயித்தை முறூக்கிகிட்டு… யப்பா! செம வலி. டாய்லெட்டுக்கு ஓடினேன். வயித்தாலை போச்சு. அப்பறமா இன்னும் ரெண்டு மூணு தரம். அப்பவே சோர்ந்து போயிட்டேன். பொண்டாட்டி சொல்றா, சாவு சேதி கேட்டுட்டும் சாப்டேனாம். அதனால குத்தம்ன்னு சொல்றா. அப்படிக்கூட உண்டானா?”
தெரிலீங்களே! நா கேள்விப்பட்டதில்ல.”
நமக்குத்தெரியாத விஷயம் உலகத்தில நிறைய இருக்கு!” குரலைக்கேட்டு திரும்பிப்பார்த்தான் இளைஞன். அதே பெரியவர்தான். சோர்வைத்தாண்டி கொஞ்சம் உற்சாகம் தொற்றிக்கொண்டது!
காசை கொடுத்து டீயை வாங்கிக்கொண்டவர் இளைஞன் அருகில் அமர்ந்தார்.
மாயா லோகம்ன்னு சொல்லுவாங்க இதை. ஆயிரத்தெட்டு என்ன கோடி சட்டதிட்டங்கள்… அதுல பலதும் நமக்குத்தெரியாது; பலதும் புரியாது. தெரிஞ்ச சிலதை வெச்சுகிட்டு நமக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைச்சுக்கிறோம்.”
உதாரணம் காட்டுங்களேன்!”
அதோ பார்!”
எதிர் சாரியில் இருந்த ஒரு வீட்டில் ஒருவர் வந்து மதில் சுவர் மேல் ஒரு உருண்டை சோறு வைத்துவிட்டு, காக்காக்காக்கா என்று குரல் கொடுத்துவிட்டு, ஓடி வந்த பூனையை விரட்டி விட்டு உள்ளே போனார்.
திதி கொடுக்கறார் போலிருக்கு. இதுல என்ன?”
ஆமாம். அப்பா, தாத்தா, தாத்தாவோட அப்பான்னு மூணு தலை முறைக்கு பிண்டம் வைப்பாங்க. வேடிக்கை பாரு!”
காகம் ஒன்று வந்து உட்கார்ந்தது. ஓரடி தூரத்தில் சோற்று உருண்டை இருந்தாலும் அதை கொத்தவில்லை. கா கா என கத்தியபடி இருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றன. இன்னும் கொத்தவில்லை. ம்ம்ம்ம் இப்படி ஆனா திதி கொடுத்தவர் ச்ரத்தையா கொடுக்கலைம்பாங்களே என்று நினைத்தான் இளஞன். அப்போது ஒரு காகம் பறந்து வந்து உடகார்ந்தது. சரி வந்தாச்சு என்று நினைத்தால் அதுவும் கா கா என்று கத்த ஆரம்பித்தது! இதென்னாடா இது? பசியே இல்லாத காக்காவா வருது என்று நினைத்தான், மெஸ்மரைஸ் ஆனது போல அந்த காட்சியை விட்டு வேறு எதையும் பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றன. உடல் முழுதும் கருமையான அண்டங்காக்காய் ஒன்று பறந்து வந்தது. உட்காரவில்லை. பறந்து கடக்கிற போக்கில் சட்டென்று ஒரு கொத்து கொத்திச்சென்றது. உடனே மற்ற இரு காகங்களும் கொத்த ஆரம்பித்தன! சாப்பிட்டு சில நாள் ஆனது போல விரைவாக உண்டன! பிரமிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் இளைஞன். எந்த வரிசையில் சாப்பிட வேண்டும் என்று கூடவா விதி இருக்கும்?” ”ஏன் சார்” என்று திரும்பி பார்த்த போது பெஞ்சில் காலியான டீ க்ளாஸ் மட்டுமே இருந்தது!

Friday, April 8, 2016

கிறுக்கல்கள்! -100


மாஸ்டர் எதுக்கெடுத்தாலும் கதைகள் சொல்லுவதைப்பற்றி ஒருவர் கேட்டார். இந்த கதையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க எங்கேந்து வருது?

மாஸ்டர் சொன்னார்: கடவுள்கிட்டேந்து! கடவுள் உன்னை ஒரு வைத்தியனா வேலை செய்ய வெச்சார்ன்னா உன்கிட்ட நோய் நொடி இருக்கறவங்களை அனுப்புவார். ஒரு ஆசிரியரா வேலை செய்ய வைக்க மாணவர்களை அனுப்புவார். ஒரு மாஸ்டரா இருக்க வைக்க கதைகளை அனுப்புவார்!

Thursday, April 7, 2016

கிறுக்கல்கள்! - 99


மாஸ்டர் சொன்னார்: நான் ஹிந்து, கிருஸ்துவன், முஸ்லிம்ன்னோ அல்லது இந்தியன், அமெரிக்கன், ஆப்ரிகன்னோ சொல்லிக்கறதுல ஒரு அர்த்தமும் இல்லை. அதெல்லாம் வெறும் லேபில்கள்.
அவருக்கு ஒரு யூத சீடர் இருந்தார். அவர் தன்னை ’முதலில், நடுவில், கடைசியில் யூதன்’ என்று சொல்லிக்கொள்வார். அவரிடம் மாஸ்டர் சொன்னார்: அப்படி உனக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். யூதம் உன் வளர்ப்பு, அடையாளமில்லை.”
அப்போ என் அடையாளம்தான் என்ன?
ஒண்ணுமேயில்லை!
என்னது? அப்ப நான் வெறும் பூஜ்யமா? காலி, வெற்றிடமா?
அப்படி இல்லைப்பா. நீ அடையாளப்படுத்த முடியாத வஸ்து!