Pages

Wednesday, October 31, 2018

பறவையின் கீதம் - 59





அரபி மிஸ்டிக் சதியின் இன்னொரு முத்து:

ஒருவர் காட்டின் வழியே போய்க்கொண்டு இருந்தார். வழியில் பின்னங்கால்கள் இரண்டையும் இழந்த நரி ஒன்றை பார்த்தார். இது எப்படி உயிர் வாழ்கிறது என்று ஆச்சரியப்பட்டார். அப்போது புலி ஒன்று தன் இரையை இழுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தது. வயிறார உண்டு விட்டு போய்விட்டது. நரி மெதுவாக ஊர்ந்து போய் மீதியை சாப்பிட்டு வயிறை நிரப்பிக்கொண்டது. "ஆகா, கடவுள் எப்படி எல்லாம் உணவளிக்கிறான்!” என்று நினைத்துக்கொண்டார். அன்று இரவு அங்கேயே தங்கியவர் அடுத்த நாளும் அதே புலி இரையை கொண்டுவந்து உண்டு மீதியை விட்டுச்சென்றதை பார்த்தார்.

"ஆஹா! இனி நாம் உணவையோ வேறு எதையுமோ தேடி அலைய வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது எல்லாம் அவன் கொடுப்பான்" என்று நினைத்து ஒரே இடத்தில் சும்மா இருக்கலானார். எதிலும் முனையவில்லை. நாட்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. கொலைப்பட்டினி. ஏறத்தாழ இறக்கும் தறுவாய்க்கு போய் விட்டார். "ஆண்டவா ஏன் இப்படி கைவிட்டாய்" என்று புலம்பினார். அப்போது அசரீரி கேட்டது

முட்டாள்! உண்மையை சரியாக புரிந்துக்கொள். காலிழந்த நரிக்கு உணவு கொடுத்தேன். உனக்கு என்ன குறை? நீ ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்? புலி போல இருப்பதுதானே?”

வீதியில் ஒரு நிர்வாணமான குழந்தை குளிரில் நடுங்கிக்கொண்டு பசியுடன் இருப்பதை பார்த்தேன். எனக்கு கோபம் வந்துவிட்டது. "ஆண்டவா! இதை ஏன் அனுமதிக்கிறாய்? நீ ஏன் எதையும் செய்யவில்லை?” என்று கேட்டேன். பதில் இல்லை. அன்றிரவு திடீரென்று பதில் சொன்னான்: “நான் உன்னை படைத்தேன்!”

Tuesday, October 30, 2018

பறவையின் கீதம் - 58





மனநிலை பாதிப்புக்கு உள்ளான சிலர் குணமாக விரும்புவதில்லை. ஏனெனில் அது வலிக்கிற வழி. அவர்களுக்குத்தேவை அவர்களுடைய குறைப்பாட்டுடனே சௌகரியமாக இருப்பது. பொதுவாக எதிர்பார்ப்பது ஒரு அற்புதம்- வலியில்லாத விடுதலை.

அந்த கிழவர் இரவு உணவுக்குப்பின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து தன் பைப்பில் புகை பிடிப்பதை மிகவும் விரும்பினார். ஒரு நாள் இரவு அவரது மனைவி வேறு நாற்றம் வருவதை உணர்ந்தார். போய்ப்பார்த்தால் கிழவரது தாடி தீப்பற்றி இருந்தது.

ஏய் கிழவா, உன் தாடி தீப்பற்றி இருக்கு!
அது தெரியாதா? மழை பெய்யட்டும்ன்னு பிரார்த்தனை செஞ்சு கொண்டு இருக்கேனே தெரியலை?

Monday, October 29, 2018

பறவையின் கீதம் - 57





ஜப்பானிய ஜெனரல் நபுநகா போரில் ஈடுபட்டு இருந்த போது எதிரிகளை தாக்க முடிவு செய்தார். ஆனால் எதிரிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம். ஜெனரல் ஜெயிப்பதைக் குறித்து நம்பிக்கையுடன் இருந்தாலும் வீரர்கள் பயந்து கொண்டு இருந்தனர்.

வழியில் ஒரு ஷிண்டோ கோவில் இருந்தது. அதன் உள்ளே போய் பிரார்த்தனை செய்து விட்டு வந்த ஜெனரல் "வீரர்களே, விதி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். இதோ ஒரு நாணயத்தை சுண்டிவிடுகிறேன். தலை விழுந்தால் நாம் ஜெயிப்போம். பூ என்றால் தோற்போம். விதி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளட்டும்.”

சுண்டிய நாணயம் தலையாக விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. போரில் எதிரிகளை பந்தாடிவிட்டார்கள்.

அடுத்த நாள் நபுநகாவின் உதவியாளர் "யாருமே விதியை மாற்ற முடியாது" என்றார்.
ஆமாம்" என்று சொன்ன நபுநகா அந்த நாணயத்தை உதவியாளரிடம் காட்டினார்.
இரு பக்கங்களும் தலைதான் இருந்தது!

விதியை யார் நிர்ணயிப்பது?

Friday, October 26, 2018

பறவையின் கீதம் - 56





நாரதர் மஹாவிஷ்ணுவை பார்க்க ஸ்தல யாத்திரையாகப்போய் கொண்டு இருந்தார். ஒரு நாள் இரவு நேரம். தங்க கிராமத்தில் ஒருவர் இடமளித்து உணவளித்து உபசாரம் செய்தார். பின் எங்கே போய்க்கொண்டு இருக்கிறீர்கள்? என்று விசாரித்தார். நாரதர் தான் மஹாவிஷ்ணுவை பார்க்க போவதாக சொன்னார்.
அப்படியா? எங்களுக்கு குழந்தைகள் இல்ல. அவர்கிட்ட அனுகிரஹம் பண்ணச்சொல்லி சொல்லுங்க.”
நாரதரும் சம்மதித்தார். பல இடங்களுக்கும் போய் கடைசியில் விஷ்ணுவை தரிசிக்கையில் ஞாபகமாக இது பற்றியும் சொன்னார். விஷ்ணுவோ "நான் என்ன செய்ய? அவரது கர்மா படி அதுக்கு வாய்ப்பு இல்லை. சட்ட திட்டத்தை எல்லாம் நானே மீற முடியாது" என்றார்.
இதை சொல்ல மனதில்லாமல் நாரதர் வேறு வழியாக திரும்பி விட்டார். ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அதே வழியில் போக நேர்ந்தது. இந்த முறை அந்த குடிசையில் இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருப்பதை பார்த்து" யார் இவர்கள்?” என்று கேட்டார். "என் குழந்தைகள்தான்" என்றார் கிராமவாசி. “நீங்க போன தரம் வந்து போன பிறகு சில நாட்களில ஒரு சன்னியாசி வந்தார். அவர்கிட்டயும் சொன்னேன். ஆசீர்வாதம் பண்ணார். அதுக்கப்பறம் ஒரு வருஷம் கழிச்சு குழந்தை பிறந்தது" என்றார்.
விஷ்ணுவை தரிசிக்க கோவிலுக்கு போன நாரதர் நடையிலிருந்தே கத்தினார். “ நீ அந்த கிராமவாசிக்கு குழந்தைக்கு வாய்பே கிடையாதுன்னு சொல்லலை? இப்ப அவருக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு!”
விஷ்ணு சிரித்துக்கொண்டே சொன்னார். “ நான் என்ன செய்ய? அது அந்த உத்தம சன்னியாசியோட ஆசீர்வாதம் பண்ண வேலை. ஆமா விதிய அவங்களால மாத்த முடியும்!"
ஏசுவின் விதி அனுமதிக்கும் முன் அவரது அம்மா அவரை திருமண விருந்தில் ஒரு அற்புதம் நிகழ்த்த வைத்தது போல!

Thursday, October 25, 2018

பறவையின் கீதம் - 55





அந்த பாதிரியார் கப்பலில் போய்க்கொண்டு இருந்தார். அது ஒரு சின்னஞ்சிறு தீவில் ஒரு நாள் நின்றது. இவர் இறங்கி கடற்கரையில் உலாவப்போனார். அங்கே மூன்று மீனவர்கள் வலையை உலர்த்திக்கொண்டு இருப்பதை பார்த்தார். அவர்கள் இவரை பார்த்து முகமன் சொன்னார்கள். பின் உடைந்த ஆங்கிலத்தில் தாங்கள் பல வருடங்களுக்கு முன் மதம் மாற்றப்பட்டதாகவும் தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும் சொல்லிக்கொண்டார்கள். பாதிரிக்கு ஆச்சரியமாகிவிட்டது. 'அப்படியா பிரார்த்தனையை சொல்லுங்க பார்க்கலாம்' என்றார். அவர்கள் 'அதெல்லாம் தெரியாது' என்றார்கள்.
'பின்னே?'
"வானத்தை பார்ப்போம். 'நீங்க மூணு பேர், நாங்க மூணு பேர். காப்பாத்து' ன்னு சொல்லுவோம்.”
பாதிரி தலையில் அடித்துக்கொண்டார். சரி, சரி சொல்லிக்கொடுக்கிறேன். அதுபடி சொல்லுங்க' என்று சொல்லி மீதி நாள் முழுக்க சொல்லிக்கொடுப்பதில் செலவிட்டார். அடுத்த நாள் கப்பல் கிளம்பும் முன் அவர்கள் சரியாக பிரார்த்தனை சொல்லுவதை பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு கிளம்பினார்.
பல வருஷங்கள் கழித்து அவரது கப்பல் மீண்டும் அந்த பகுதிக்கு வந்தது. மாலை பிரார்த்தனையை செலுத்தியபடி கப்பலின் மேல் தளத்தில் உலவிக்கொண்டு இருந்த பாதிரியார் 'இங்கேதானே அறியாமையில் இருந்த மீனவர்களுக்கு பொறுமையாக பிரார்த்தனை சொல்லிக்கொடுத்தேன். என்னால் அவர்கள் சரியாக பிரார்த்தனை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்' என்று நினைத்தார்.
அப்போது அந்த அரையிருட்டில் கிழக்கே ஒரு வெளிச்சம் தெரிந்தது. எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அது கப்பலை நெருங்கி வந்தது. கிட்டே வந்தபின் அது அந்த மூன்று மீனவர்கள் என்று தெரிந்தது. கப்பலின் கேப்டன் கப்பலை நிறுத்திவிட்டார். எல்லாரும் ஆச்சரியத்துடன் தண்ணீரில் நடக்கும் மீனவர்களை பார்த்தார்கள். அவர்கள் பாதிரியாரை பார்த்து 'இந்த கப்பல் இங்க இன்னைக்கு வரதா கேள்விப்பட்டு உடனே அவசர அவசரமா வந்தோம்.' என்றார்கள்.
அதிர்ச்சியில் இருந்த பாதிரி 'உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டார்.
'மன்னிக்கணும். நீங்க போன அடுத்த நாளே எங்களூக்கு மந்திரம் மறந்து போச்சு. மந்திரத்த திருப்பியும் சொல்லித்தறீங்களா?' என்று கேட்டார்கள்.
திருந்திய பாதிரி சொன்னார்: “வீட்டுக்கு போங்க நண்பர்களே. பிரார்த்தனை நேரத்துல வானத்த பாத்து 'நீங்க மூணு பேர் நாங்க மூணு பேர். காப்பாத்து' ன்னு சொல்லுங்க.” என்றார்.

Wednesday, October 24, 2018

பறவையின் கீதம் - 54





ஸுஃபி மாஸ்டர் சாதி ஆஃப் ஷிரேஸ் இன் முத்து ஒன்று:

என் நண்பன் ஒருவன் தன் மனைவி கர்ப்பமாக இருந்தது குறித்து மகிழ்ந்தான். தனக்கு ஒரு ஆண் பிள்ளை பெற வேண்டும் என்று ஆசை. இது குறித்து இறைவனிடம் மிகவும் வருத்திக்கொண்டு வேண்டினான்

அவன் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். மிகவும் சந்தோஷம் அடைந்த நண்பன் கிராமம் முழுவதுக்குமே விருந்து வைத்தான்

பல காலம் சென்றது. நான் மெக்காவில் இருந்து திரும்பினேன். நண்பனின் கிராமம் வழியாக பயணித்தேன். அங்கே நண்பன் குறித்து விசாரித்தேன். அவன் சிறையில் இருப்பதாக சொன்னார்கள்.ஏனென்று கேட்டேன். அவனது மகன் கோபத்தில் ஒருவனுடன் சண்டையிட்டு கொன்று விட்டதாகவும் ஊரை விட்டு ஓடிப்போய்விட்டதால் அவனுக்குப்பதில் அவனது தந்தையை சிறையிட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.
கடவுளிடம் எதையும் மிகவும் வேண்டிப்பெறலாம்தான். அது பாராட்டுக்குறியது. சில சமயம் ஆபத்தானதும் கூட!

Tuesday, October 23, 2018

பறவையின் கீதம் - 53





நான் பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தேன். பரபரப்பு, உளச்சோர்வு, தன்னலம்....... பலரும் என்னை மாறும்படி அறிவுறுத்தினர்.
அவர்களை எனக்குப்பிடிக்கவில்லை. ஆனாலும் மாற நினைத்தேன். முடியவே இல்லையே, என்ன செய்வது?

எது என்னை மிகவும் துன்புறுத்தியது? என் நெருங்கிய நண்பன் என்னை மாறச்சொல்லிக்கொண்டு இருந்தான். நான் சக்தியிழந்தவனாகவும் பொறியில் மாட்டிக்கொண்டவன் போலவும் உணர்ந்தேன்.

ஒரு நாள் அந்த நண்பன் என்னிடம் சொன்னான். சரி நீ மாற வேண்டாம். நீ இருப்பது போலவே இருந்தாலும் உன்னை நேசிக்கிறேன்.

என் இறுக்கம் தளர்ந்தது; நான் உயிர்த்தேன். எதிர்பாராமல் நான் மாறிவிட்டேன்!
இப்போது எனக்குப்புரிகிறது. மாறுகிறேனோ இல்லையோ, அதை பொருட்படுத்தாமல் என்னை ஒருவர் நேசிக்கிறார் என்று தெரியும் வரை என்னால் மாறமுடியவில்லை.

இப்படித்தான் என்னை நேசிக்கிறாயா கடவுளே?

Monday, October 22, 2018

பறவையின் கீதம் - 52





இங்கிலாந்தில் ஒருவர் வீட்டின் எதிரில் புல்தரை வளர்த்தார். அது குறித்து அவருக்கு மிகவும் பெருமை இருந்தது. சில காலம் கழித்து அதில் டான்டலியன் - சீமை காட்டு முள்ளங்கி - வளர ஆரம்பித்தது. அதை ஒழிக்க என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடைசியாக விவசாயத்துறைக்கு 'என்ன செய்வது' என்று கேட்டு கடிதம் எழுதினார். காலப்போக்கில் மெதுவாக ஒரு பதில் வந்து சேர்ந்தது. 'அவற்றை நேசியுங்கள்!”

என் வீட்டுப்புல்தரையும் அப்படித்தான். டான்டலியன்கள் முளைக்கும் வரை அருமையாக இருந்தது. என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் முளைக்கும் டான்டலியன்களை கட்டுப்படுத்த போராடினேன். கடைசியில் போராட்டத்தை நிறுத்திவிட்டு அவற்றுடன் பேச ஆரம்பித்தேன். முதலில் சுமுகமாக. ஒரு நண்பனாக. அவை முறைத்துக்கொண்டு மௌனமாக இருந்தன. அவற்றுடன் போராடியதை மறக்கவில்லை போலும்! நாளடைவில் கொஞ்சம் இளகின. புன்சிரிப்பு வந்தது. பிறகு நாங்கள் நண்பர்களாகி விட்டோம்.
இப்போது என் புல் தரை நாசமாகிவிட்டது. ஆனால் என் தோட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

Friday, October 19, 2018

பறவையின் கீதம் - 51





மடத்தில் குரு பூஜைக்கு உக்காரும்போதெல்லாம் ஒரு பூனை வந்து கவனத்தை கலைத்தது. ஆகவே அதை பிடித்து கட்டி வைக்கும் படி சொன்னார். இது தினசரி கதையாயிற்று.

குரு இறந்து போனார். வேறொருவர் வந்தார். அப்போதும் பூனையை பிடித்து கட்டிபோட்டனர். ஒரு நாள் அந்த பூனை செத்துப்போயிற்று. குருவின் உத்தரவை மதிக்க வேறொரு பூனையை கொண்டு வந்து கட்டிப்போட்டனர். இதே அங்கே பழக்கமாகிப் போனது
பல நூற்றாண்டுகள் கழித்து அறிஞர்கள் பூனையை கட்டிப்போடும் ஆன்மீக சடங்கின் மகத்துவம் பற்றி பெரிய பெரிய புத்தகங்களை எழுதினார்கள்!

Thursday, October 18, 2018

பறவையின் கீதம் - 50





துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்திவிட்டனர்.

உங்கள் குருவின் காலடிகளிலேயே எப்போதுமே நீங்கள் இருந்தால் அது உங்களது குருவுக்கு பெருமை அல்ல!

Wednesday, October 17, 2018

பறவையின் கீதம் - 49





ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளையை சாயங்காலம் இருட்டும் முன் வீட்டுக்கு வர வைப்பதில் பிரச்சினை இருந்தது. அதனால் வழியில் பேய்கள் இருப்பதாகவும் அவை இருட்டிவிட்டல் வெளியே வந்து உலாவும் என்றும் சொல்லி வைத்தார். அதிலிருந்து பிள்ளையும் நேரத்துக்கு வீடு திரும்ப ஆரம்பித்தான்.

ஆனால் பெரியவன் ஆகியும் அந்த பயம் போகவில்லை. இருட்டிவிட்டால் வெளியே போய் செய்யக்கூடிய சிறு வேலைகளை செய்ய மறுத்தான். ஆகவே அவள் ஒரு தாயத்தை கட்டிவிட்டு அது பேய்களில் இருந்து அவனை பாதுகாக்கும் என்று சொன்னாள்.

மோசமான மதம் அவனுக்கு தாயத்தை கொடுத்தது. நல்ல மதம் அவனுக்கு பேய்கள் இல்லை என்று புரியவைத்திருக்கும்.

Tuesday, October 16, 2018

பறவையின் கீதம் - 48





மாஸ்டரின் பிரசங்கம் ஒரே ஒரு புதிரான வாக்கியமாக இருந்தது.

நான் செய்வதெல்லாம் நதிக்கரையில் உட்கார்ந்து நதி நீரை விற்பதுதான்!”

நான் நீரை வாங்குவதிலேயே குறியாக இருந்தேன்; நதியை கவனிக்கவில்லை.

(நேத்து கொஞ்சம் பெரிசா நெருடலா போச்சு இல்ல? இதோ காம்பன்சேஷன்!)

Monday, October 15, 2018

பறவையின் கீதம் - 47





யதார்த்தத்தில் அவன் ஒரு நாஸ்திகனாக ஆகிவிட்டதாக சொன்னான். அவன் நிஜமாகவே யோசித்தால் அவனது மதம் சொல்லிக்கொடுத்த எதையும் அவன் நம்பமாட்டான். கடவுளின் இருப்பு தீர்க்கும் பிரச்சினைகளை விட அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது. இறப்புக்கு பின் வாழ்வு அவனைப்பொருத்த வரை ஒரு நப்பாசை. சாத்திரங்களும் பாரம்பரியமும் நல்லதை விட கெட்டதே அதிகம் செய்திருக்கின்றன. இவை எல்லாம் மனித வாழ்வில் தனிமையையும் கையறு நிலையையும் கொஞ்சம் சமப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டவை.
இவனை அப்படியே விட்டுவிடுங்கள். இவன் தன்னைத்தானே அறிந்து கொண்டு வளரும் நிலையில் இருக்கிறான்.
(அந்தனி தெமெல்லோ அப்படி ஒரு நிலையில் இருந்து எழுதினார் போலிருக்கிறது!)

சீடன் மாஸ்டரிடம் ஒரு நாள் கேட்டான்.
புத்தா என்கிறது என்ன?”
"“மனமே புத்தா"
இன்னொரு நாள் அதே கேள்வியை கேட்டான். ஆனால் பதில் வேறாக இருந்தது.
'மனமில்லையானால் புத்தாவை அறிவாய்"
சீடன் குழம்பிவிட்டான். “அன்னைக்கு வேற மாதிரி சொன்னீங்களே?”
அப்ப குழந்தை அழுதுகிட்டு இருந்தது. அத நிறுத்த அப்படி சொன்னேன். அழுகை நின்னப்பறம் இப்படி சொல்லறேன்!”

அவனுள் இருந்த குழந்தை அழுவதை நிறுத்திவிட்டது. உண்மைக்கு அவன் தயாராக இருந்தான். ஆகவே அவனை அப்படியே விட்டுவிடுவது சரியாக இருந்தது.
ஆனால் பிறகு அவன் பேச ஆரம்பித்தபோது அவனை கட்டுப்படுத்த வேண்டி இருந்தது. அவனது புதிய நாத்திகத்தை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஒரு காலத்தில் மக்கள் சூரியனை போற்றி வழிபட்டார்கள். அது அறிவியல் வரும் முன்னே. அதன் பின் அறிவியல் சூரியன் கடவுள் ஏன் ஒரு வாழும் உயிரினம் கூட இல்லை என்றது. அதன்பின் ஒரு உள்ளுணர்வு காலம் வந்தது. ப்ரான்சிஸ் ஆஃப் அசிசி சூரியனை தன் சகோதரன் என்று சொல்லி அதனுடன் பக்தி கலந்த அன்புடன் பேசலானார்.”

உங்கள் நம்பிக்கை பயப்படும் குழந்தை போல இருந்தது. நீங்கள் பயம் நீங்கியவரானதும் அதற்கு தேவையில்லாமல் போனது. நீங்கள் அடுத்து உள்ளுணர்வு மட்டத்துக்கு முன்னேறி உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவீராக!”

நம்பிக்கை சத்தியத்துக்கான அச்சமற்ற தேடல்.
ஆகவே ஒருவரின் நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் போது அது மறைவதில்லை.

Friday, October 5, 2018

பறவையின் கீதம் - 46





ஒரு இறை தூதர் நகரவாசிகளை மாற்ற வந்தார். முதலில் அவரது பிரசங்கத்தை கேட்க பலர் கூடினர். மெதுவாக அவர்கள் கலைந்தனர். சில நாட்களில் யாரும் நின்று கேட்கக்கூட இல்லை. இருந்தாலும் அவர் பிரசங்கம் செய்து கொண்டே இருந்தார்.

ஒரு நாள் ஒரு வழிப்போக்கர் இதை பார்த்துவிட்டு கேட்டார். 'எதுக்கு யாருமில்லாட்டாக்கூட பிரசங்கம் செய்யறிங்க?'

இறைதூதர் சொன்னார்: 'முதல்ல மக்கள மாத்த முடியும்ன்னு நினைச்சு பிரசங்கம் செஞ்சேன். இப்ப அவங்க என்ன மாத்திடாம இருக்கணும்ன்னு பிரசங்கம் செய்யறேன்.'

Thursday, October 4, 2018

பறவையின் கீதம் - 45





முல்லா நசருதீன் முட்டைகளை விற்று பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்தார். ஒரு நாள் ஒருவர் கடைக்கு வந்தார். 'என் கையில என்ன இருக்குன்னு சொல்லு பாப்பம்?'

'ம்ம்ம்ம் ஒரு குளூ கொடுங்க.'

'சரி. ஒரு முட்டை வடிவத்துல இருக்கு. முட்டை சைஸ்ல இருக்கு. பாக்க முட்டை மாதிரியே, சாப்பிட முட்டை மாதிரியே வாசனை முட்டை மாதிரியே இருக்கு. உள்ள மஞ்சளும் வெள்ளையுமா இருக்கு. சமைக்கறதுக்கு முன்ன தண்ணியா இருக்கும். சமைச்சா இறுகிடும். ம்ம்ம்ம்ம் ஒரு கோழிதான் இத போட்டது...'

'அஹா! எனக்குத்தெரியுமே! அது ஒரு மாதிரி கேக்!'

ரொம்ப நிபுணத்துவம் இருக்கறவங்க தெளிவா இருக்கறதை பாக்கிறதில்லை! தலைமை பூசாரி இறைதூதரை பார்க்கிறதில்லை.

Wednesday, October 3, 2018

பறவையின் கீதம் - 44





சாது ஒருவர் புத்தரை கேட்டார். 'நேர்மையானவர்களின் ஆன்மாக்கள் இறப்பை தாண்டி ஜீவித்து இருக்குமா?'
வழக்கம் போல புத்தர் மௌனமாக இருந்துவிட்டார்.
ஆனால் அந்த சாது விடவில்லை. தினசரி அந்த கேள்வியை கேட்டு தொணப்பிக்கொண்டே இருந்தார். புத்தரும் மௌனமாகவே இருந்து கொண்டிருந்தார். ஒரு நாள் சாது கடைசி அம்பை எய்தார். புத்தர் தன் மகா முக்கியமான கேள்விக்கு பதில் கொடுக்காவிட்டால் தான் வெளியேறிவிடுவதாக சொன்னார். நேர்மையானவர்களின் ஆன்மாவும் உடலுடன் அழிந்து போகும் என்றால் எதற்காக சன்னியாசம் கொண்டு ஒரு வாழ்கையை வாழ வேண்டும்?
பின் புத்தர் பரம கருணையுடன் சொன்னார்: 'நீ கேட்பது ஒரு கதையை நினைவு படுத்துகிறது. ஒருவர் மீது யாரோ விஷம் தோய்த்த அம்பை எய்துவிட்டர்கள். சாகக்கிடந்தவரை உறவினர்கள் வைத்தியரிடம் துக்கிக்கொண்டு ஓடினார்கள். ஆனால் இவர் அம்பை எடுத்து மருந்து வைத்து கட்ட அனுமதிக்கவில்லை. தன் மூன்று கேள்விகளுக்கு பதில் தெரிந்தால்தான் அனுமதிப்பேன் என்றார். ஒன்று, அம்பை எய்தவன் கருப்பா வெள்ளையா? இரண்டு அவன் உயரமா அல்லது குட்டையா? மூன்றாவது அவன் உயர் சாதியா தாழ்ந்த சாதியா?'
சாது அன்றிலிருந்து அந்த கேள்வி கேட்பதை விட்டுவிட்டார். புத்தருடனேயே இருந்தார்.

Tuesday, October 2, 2018

பறவையின் கீதம் - 43





கிராம பூசாரி வழிபாடு செய்யும்போது அங்கே விளையாடிக்கொண்டு இருந்த கிராம சிறுவர்கள் தொல்லை அதிகமாக இருந்தது. அவர்களை துரத்த ஒரு உபாயம் செய்தார். 'பசங்களா, நதிக்கரை பக்கம் போயிடாதீங்க. அங்க நெருப்பு கக்கற மிருகம் ஒண்ணு இருக்கு' என்றார்.
வெகு சீக்கிரத்திலேயே கிராம மக்கள் அனைவரும் நதியை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தனர். ஏன் என்று விசாரித்தார். 'நதிக்கரையில் நெருப்பு கக்கற மிருகம் ஒண்ணு இருக்காம்' என்று சொல்லிக்கொண்டு ஓடினார்கள். கொஞ்சம் யோசித்துவிட்டு இவரும் சேர்ந்து ஓட ஆரம்பித்தார். மூச்சிரைக்க நாலு கிலோ மீட்டர் ஓடுகையில் இப்படி நினைத்துக்கொண்டே ஓடினார். 'நாதான் அந்த கதைய கிளப்பிவிட்டேன். ஆனா ஒரு வேளை உண்மையா இருந்துட்டா? சொல்ல முடியாதே?'

நாம் கதை கட்டிவிட்ட கடவுளர்களைப்பற்றி நம்புவதற்கு நல்ல வழி மற்றவர்களை அதை நம்ப வைப்பதுதான்!

Monday, October 1, 2018

பறவையின் கீதம் - 42





முல்லா நசருதீனின் வீட்டுக்கு ஒரு நண்பர் வந்தார். வரும்போது ஒரு வாத்தை கொண்டு வந்தார்.
வாத்தை சமைத்து அனைவரும் உண்டார்கள்.
சில நாட்கள் சென்றன. இன்னொருவர் வந்தார். நான் வாத்தை கொண்டு வந்த உங்கள் நண்பனின் நண்பன். நசருதீன் வீட்டில் சாப்பிட்டு விட்டுப்போனார். அன்று முதல் யாரேனும் வருவதும் நசருதீனின் வாத்தைக்கொண்டு வந்த நண்பனின் நண்பன் என்று சொல்லுவதும் சாப்பிட்டு போவதும் வழக்கமாகிவிட்டது.
ஒரு நாள் முன்பின் தெரியாத முற்றிலும் புதிய நபர் ஒருவர் வந்தார். வாத்தைக்கொண்டு வந்த நண்பனின் நண்பன் என்றார். நசருதீன் அவரை வரவேற்று உட்கார்த்தி வைத்து சூடான நீர் கொண்ட கிண்ணத்தை அவர் முன் வைத்தார்.
'இது என்ன?'
'இது அந்த வாத்தின் சூப்பில் இருந்து தயாரித்த சூப்பில் இருந்து தயாரித்த சூப்'
தெய்வீக நிலையை அனுபவித்தவர்களின் சீடர்களின் சீடர்களின் சீடர்கள் பற்றி நாம் கேள்விப்படுகிறோம் அல்லவா?
ஒரு முத்தத்தை தபாலில் எப்படி அனுப்புவது?