Pages

Thursday, October 25, 2018

பறவையின் கீதம் - 55





அந்த பாதிரியார் கப்பலில் போய்க்கொண்டு இருந்தார். அது ஒரு சின்னஞ்சிறு தீவில் ஒரு நாள் நின்றது. இவர் இறங்கி கடற்கரையில் உலாவப்போனார். அங்கே மூன்று மீனவர்கள் வலையை உலர்த்திக்கொண்டு இருப்பதை பார்த்தார். அவர்கள் இவரை பார்த்து முகமன் சொன்னார்கள். பின் உடைந்த ஆங்கிலத்தில் தாங்கள் பல வருடங்களுக்கு முன் மதம் மாற்றப்பட்டதாகவும் தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும் சொல்லிக்கொண்டார்கள். பாதிரிக்கு ஆச்சரியமாகிவிட்டது. 'அப்படியா பிரார்த்தனையை சொல்லுங்க பார்க்கலாம்' என்றார். அவர்கள் 'அதெல்லாம் தெரியாது' என்றார்கள்.
'பின்னே?'
"வானத்தை பார்ப்போம். 'நீங்க மூணு பேர், நாங்க மூணு பேர். காப்பாத்து' ன்னு சொல்லுவோம்.”
பாதிரி தலையில் அடித்துக்கொண்டார். சரி, சரி சொல்லிக்கொடுக்கிறேன். அதுபடி சொல்லுங்க' என்று சொல்லி மீதி நாள் முழுக்க சொல்லிக்கொடுப்பதில் செலவிட்டார். அடுத்த நாள் கப்பல் கிளம்பும் முன் அவர்கள் சரியாக பிரார்த்தனை சொல்லுவதை பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு கிளம்பினார்.
பல வருஷங்கள் கழித்து அவரது கப்பல் மீண்டும் அந்த பகுதிக்கு வந்தது. மாலை பிரார்த்தனையை செலுத்தியபடி கப்பலின் மேல் தளத்தில் உலவிக்கொண்டு இருந்த பாதிரியார் 'இங்கேதானே அறியாமையில் இருந்த மீனவர்களுக்கு பொறுமையாக பிரார்த்தனை சொல்லிக்கொடுத்தேன். என்னால் அவர்கள் சரியாக பிரார்த்தனை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்' என்று நினைத்தார்.
அப்போது அந்த அரையிருட்டில் கிழக்கே ஒரு வெளிச்சம் தெரிந்தது. எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அது கப்பலை நெருங்கி வந்தது. கிட்டே வந்தபின் அது அந்த மூன்று மீனவர்கள் என்று தெரிந்தது. கப்பலின் கேப்டன் கப்பலை நிறுத்திவிட்டார். எல்லாரும் ஆச்சரியத்துடன் தண்ணீரில் நடக்கும் மீனவர்களை பார்த்தார்கள். அவர்கள் பாதிரியாரை பார்த்து 'இந்த கப்பல் இங்க இன்னைக்கு வரதா கேள்விப்பட்டு உடனே அவசர அவசரமா வந்தோம்.' என்றார்கள்.
அதிர்ச்சியில் இருந்த பாதிரி 'உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டார்.
'மன்னிக்கணும். நீங்க போன அடுத்த நாளே எங்களூக்கு மந்திரம் மறந்து போச்சு. மந்திரத்த திருப்பியும் சொல்லித்தறீங்களா?' என்று கேட்டார்கள்.
திருந்திய பாதிரி சொன்னார்: “வீட்டுக்கு போங்க நண்பர்களே. பிரார்த்தனை நேரத்துல வானத்த பாத்து 'நீங்க மூணு பேர் நாங்க மூணு பேர். காப்பாத்து' ன்னு சொல்லுங்க.” என்றார்.

No comments: