Pages

Wednesday, October 31, 2018

பறவையின் கீதம் - 59





அரபி மிஸ்டிக் சதியின் இன்னொரு முத்து:

ஒருவர் காட்டின் வழியே போய்க்கொண்டு இருந்தார். வழியில் பின்னங்கால்கள் இரண்டையும் இழந்த நரி ஒன்றை பார்த்தார். இது எப்படி உயிர் வாழ்கிறது என்று ஆச்சரியப்பட்டார். அப்போது புலி ஒன்று தன் இரையை இழுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தது. வயிறார உண்டு விட்டு போய்விட்டது. நரி மெதுவாக ஊர்ந்து போய் மீதியை சாப்பிட்டு வயிறை நிரப்பிக்கொண்டது. "ஆகா, கடவுள் எப்படி எல்லாம் உணவளிக்கிறான்!” என்று நினைத்துக்கொண்டார். அன்று இரவு அங்கேயே தங்கியவர் அடுத்த நாளும் அதே புலி இரையை கொண்டுவந்து உண்டு மீதியை விட்டுச்சென்றதை பார்த்தார்.

"ஆஹா! இனி நாம் உணவையோ வேறு எதையுமோ தேடி அலைய வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது எல்லாம் அவன் கொடுப்பான்" என்று நினைத்து ஒரே இடத்தில் சும்மா இருக்கலானார். எதிலும் முனையவில்லை. நாட்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. கொலைப்பட்டினி. ஏறத்தாழ இறக்கும் தறுவாய்க்கு போய் விட்டார். "ஆண்டவா ஏன் இப்படி கைவிட்டாய்" என்று புலம்பினார். அப்போது அசரீரி கேட்டது

முட்டாள்! உண்மையை சரியாக புரிந்துக்கொள். காலிழந்த நரிக்கு உணவு கொடுத்தேன். உனக்கு என்ன குறை? நீ ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்? புலி போல இருப்பதுதானே?”

வீதியில் ஒரு நிர்வாணமான குழந்தை குளிரில் நடுங்கிக்கொண்டு பசியுடன் இருப்பதை பார்த்தேன். எனக்கு கோபம் வந்துவிட்டது. "ஆண்டவா! இதை ஏன் அனுமதிக்கிறாய்? நீ ஏன் எதையும் செய்யவில்லை?” என்று கேட்டேன். பதில் இல்லை. அன்றிரவு திடீரென்று பதில் சொன்னான்: “நான் உன்னை படைத்தேன்!”

No comments: