ஏன் நிறைய நல்ல காரியங்கள் பண்ணா தானா ஞானம் வராதா என்ன?
வராது.
முன்னமேயே பார்த்து இருக்கோம். கர்மங்கள் கொண்டு விடறது சித்த சுத்தியிலதான். தெளிவா இருக்கிற இந்த சித்தத்தால விசாரம் செய்துதான் முக்தி அடையணும். தெளிவான சித்தம் நித்தியம் எது அநித்தியம் எது நாம் யார் என்றெல்லாம் விசாரித்து ஞானம் அடையும்.
64.
கன்மம் முக்கியம் எனும் கொள்கை நீங்கும் பொருட்டு ஞானம் உதிக்க சற்கருமம் இருக்க விசாரம் ஏன்?
போன சன்மங்க டமிலநுட் டித்தநற் புண்ணிய பரிபாகம்
ஞான மாக்குமே விசாரமே னென்றிடி னாமுரைத்திடக் கேளாய்
ஆன புண்ணிய மீசுரார்ப் பணஞ்செயி னசுசி போஞ் சுசியாகும்
மான தம்பினை விசாரித்து ஞானத்தை மருவுமென் றறிவாயே
போன சன்மங்கள்தமில் அநுட்டித்த (கடை பிடித்த) நற் புண்ணிய பரிபாகம் (பயன்) ஞானமாக்குமே? (ஞானத்தை தருமே) விசாரம் ஏன் என்றிடின், யாம் உரைத்திடக் கேளாய். ஆன (செய்யும்) புண்ணியம் ஈசுர அர்ப்பணம் செயின் அசுசி (அசுத்தம்) போம். சுசியாகும். (சுத்தமாகும்) மானதம் (மனது) பினை (பின்னை- பிறகு) விசாரித்து (ஆத்ம அனாத்ம விசாரம் செய்து) ஞானத்தை மருவும் (அடையும்) என்று அறிவாயே.
--
ஈஸ்வர அர்ப்பணமாக செய்யும் கருமங்கள் சித்த சுத்தி தரும். அதன் பின் மனம் நித்தியம் எது, அநித்தியம் எது என விசாரித்து ஞானம் அடையும். நிஷ்காம்ய கர்மம் சித்த சுத்தி தருமே ஒழிய நேரடியாக ஞானத்தை தராது.
என்னங்க இது? கர்மங்கள் எவ்வளவு பலமா இருக்கு? பக்தி, வைராக்கியம், சுவர்க்கம், அணிமா சித்தி, நிஷ்டை ,யோகம் ,தியானம் ன்னு எவ்வளவு தர முடியது கர்மங்களாலே. சிவலோகம், வைகுந்தம், பிரம்ம லோகம், தேவலோகம் ன்னு கூட தர முடியுது.
இப்படி இருக்க அஞ்ஞானத்தை தள்ளனும்னா விசாரணை வேணும் என்கிறீங்க. ஏன்?
65.
ஞானத்துக்கு விசாரமே முக்கியமாய் வேண்டுமென்பது உறுதிப்பட வினா
பத்தியும்வயி ராக்கிய மும்பர லோகமு மணிமாதி
சித்தி யுந்தவ நிட்டையும் யோகமுந் தியானமுஞ் சாரூப
முத்தி யுந்தரும் விசித்திர கருமங்கண் மோகமா த்திரந்தள்ளும்
புத்தி தந்திட லருமையோ விசாரமேன் புண்ணிய குரு மூர்த்தி.
பத்தியும், வயிராக்கியமும், பர லோகமும் (சுவர்கம்) அணிமாதி சித்தியும், தவ நிட்டையும், யோகமும், தியானமும், சாரூப முத்தியுந் [இவ்வளவு அரிய விஷயங்களை] தரும் விசித்திர கருமங்கள் மோக (அஞ்ஞானம்) மாத்திரம் தள்ளும் புத்தியை தந்திடல் அருமையோ? (நடவாததோ) விசாரமேன் (அதற்கு விசாரம் வேண்டும் என்பது ஏன்) புண்ணிய குரு மூர்த்தி.
ஒத்தர் வேஷம் போட்டு இருக்கார். அவரை கண்டுபிடிக்க அவரோட நடை, பாவனை, குரல், உசரமா குட்டையா, அங்க அடையாளங்கள் இப்படி எல்லாம் தெரிஞ்சு இருக்கணும். இதை தெரிஞ்சுகிட்டு உத்துப்பாத்து "ஓ! இவன் சர்தார்ஜி மாதிரி வேஷம் போட்டு இருந்தாலும் குரலை மாத்திக்கலை; வலது கால்ல கொஞ்சம் ஊனத்தால விந்தி நடக்கிறது அப்படியே இருக்கு.” இப்படி எல்லாம் ஆராய்ஞ்சு பாத்து, அவர் இன்னார்தான் ன்னு கண்டுபிடிக்கலாம். அதை விட்டுட்டு "வெகு தூரம் ஓடறேன், மரத்தோட உச்சாணி கொம்பிலே ஏறறேன், முத மாடியிலேந்து குதிக்கிறேன்; அப்படிப் பண்ணா அவர் யாருன்னு தெரியணும்" ன்னா, அப்படி நடக்குமா?
அதே போல பரப்பிரம்மம் பஞ்ச கோசங்களோட சீவனா வேஷம் போட்டு இருக்கு. அதை தெரிஞ்சுக்க அதைப்பத்திய ஞானம் வேணும். பிரம்மத்தோட விவரத்தை வேதம் முதலானவை சொல்கிறதை கேட்டு உள் வாங்கிக்கொண்டு விசாரித்து பாத்து புரிஞ்சுக்கணும்.
நாமார் நமக்கு பதியா ரெனவரு ஞானங்களே
மாமாயை கன்ம மலத்திரள் மாற்றிடும் ....
-வள்ளலார்
தன்னையறிவதறிவா மஃதன்றிப்
பின்னை யறிவது பேயறிவாமே....
தன்னை யறிந்து சிவனுடன் றானாக
மன்னு மலங்குண மாளும் பிறப்பும்....
தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியா மற் றானே கெடுகின்றான்
-திருமந்திரம்
66.
வேட மாறிய பேர்களை யறியவே வேண்டினான் மகனேகேள்
கூட மாமவர் சுபாவங்கள் சீலங்கள் குறிகளாய்ந் தறியாமல்
ஓடி யுங்குதித் துந்தலை கீழ்நின்று முயர்ந்தகம் பத்தேறி
ஆடி யும்பல கருமங்கள் செய்யினு மவருண்மை தெரியாதே
வேடம் மாறிய பேர்களை அறியவே வேண்டினால், மகனே கேள். கூடமாமவர் (மறைந்திருக்கும் அவர்) சுபாவங்கள் சீலங்கள் (குணங்கள்) [அறி]குறிகள் ஆய்ந்து அறியாமல், ஓடியும் குதித்தும் தலை கீழ்நின்றும் உயர்ந்த கம்பத்து ஏறி ஆடியும் பல கருமங்கள் (செயல்கள்) செய்யினும் அவர் உண்மை தெரியாதே.
--
தன் உண்மை உருவை மாற்றி மாறு வேடம் கொண்ட ஒருவனைக் கண்டறிய வேண்டும் என்றால் மறைந்து இருக்கும் அவனது குணங்கள், ஒழுக்கங்கள், அடையாளங்கள் ஆகியவற்றை உற்று உணர்ந்து இவன் இன்னவன் என அறிய வேண்டும். அப்படி இல்லாது வெகு தூரம் ஓடுவதாலும், குதிப்பதாலும், தலை கீழ் நிற்பதாலும், உயர்ந்த கம்பத்தின் உச்சியில் ஏறி ஆடுவதாலும், இன்னும் இத்தகைய பல செய்வதாலும் வேடம் மாறி இருக்கும் அவன் உண்மையை கண்டறிய முடியாது.
67
திருஷ்டாந்தம்:
இன்ன வாறந்தப் பிரமத்தை யறிவிக்கு மிலக்கணத் தால்வேதம்
சொன்ன ஞானமும் விசாரத்தால் வருமன்றிச் சுருதிநூல் படித்தாலும்
அன்ன தானங்க டவங்கண் மந்திரங்களா சாரங்கள் யாகங்கள்
என்ன செய்யினுந் தன்னைத்தா னறிகின்ற திவைகளால் வாராதே
இன்னவாறு அந்தப் பிரமத்தை அறிவிக்கும் இலக்கணத்தால் வேதம் சொன்ன ஞானமும் விசாரத்தால் வரும். [இது] அன்றிச் சுருதி நூல் (வேதம்) படித்தாலும், அன்ன தானங்கள், தவங்கள், மந்திரங்கள், ஆசாரங்கள், யாகங்கள் என்ன செய்யினும் தன்னைத் தான் அறிகின்றது இவைகளால் வாராதே.
--
சச்சிதானந்த சொரூபமாகிய பரப்பிரம்மம் பஞ்ச கோசம் முதலானவற்றோடு கூடி சீவனாக மாறு வேடம் அணிந்து இருக்கிறது. அதை அறிய வேண்டினால் ஞானத்தை பெற வேண்டும். பிரமத்தை அதற்கு உரிய இலக்கணங்களால் அறிவிக்கும் வேதங்களால் சொல்லப்பட்ட அந்த ஞானம் விசாரத்தால் மட்டுமே வரும். பிற செயல்களால் வாராது.