Pages

Thursday, July 23, 2009

வேதத்தின் உண்மை நோக்கம்....




76.
மதுவி றைச்சிகளுண்ணென்ற சுருதிபின் மணந்துபா ரெனல் பாராய்
மிதுன விச்சையும் புத்திரோற் பத்தியால் விரும்பென்ற விதிபாராய்
இதையும் விட்டொழி யதிநயிட் டிகவந்நிக் கிகழ்ச்சியற் றதும்பாராய்
அதைய றிந்துகன் மங்களா சைகளொழித் தானந்த மடைவாயே

மது இறைச்சிகள் (விதிப்படி) உண் என்ற சுருதி பின் மணந்து பார் எனல் பாராய்.
மிதுன இச்சையும் புத்திர உற்பத்தியால் விரும்பு என்ற விதிபாராய். இதையும் விட்டொழி, யதி (சன்யாசி) நயிட்டிகவன்னுக்கு (நைஷ்டிக பிரம்மச்சாரிக்கும்) இகழ்ச்சி அற்றதும் பாராய். அதையறிந்து கன்மங்கள், ஆசைகள் ஒழித்து ஆனந்தம் அடைவாயே.
--
"மதுவும் மாமிசமும் உண்ண நீ இச்சித்தால் யாகங்கள் செய்து உண்" என்ற வேதம் பின்னால் "அவற்றை புசிக்காமல் முகர்ந்து பார்ப்பது மாத்திரமாய் விட்டு விடுவாயின் நெடுங்காலம் சுவர்க்க போகங்களை அனுபவிப்பாய்" என்று கூறி உள்ளதைப் பாராய். மேலும் "ஸ்திரீ போகமும் புத்திர உற்பத்தி நிமித்தம் விரும்புவாயாக" என்று கூறி உள்ளதையும் பாராய். நேரிட்ட ஸ்திரீக்களை எல்லாம் சேர்ந்தால் இம்மையில் பழியும் மறுமையில் நரக வேதனையும் உண்டாகும் என்றும் கூறி உள்ளது. மேலும் மனைவியை சேர இந்த இந்த தினங்களில்தான் சேர வேண்டும் என்பது முதலான பல விதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. "யாக யக்ஞங்களை செய்" என்ற வேதம் "உன்னால் யாகத்தில் கொல்லப்பட்ட ஆடானது சுவர்க லோகத்தில் எஃகினால் ஆன கூரிய கொம்புகளுடன் கோபத்துடன் உன் வரவை எதிர் பார்த்து இருக்கும்; நீ அங்கு வந்ததும் உன்னை அக்கொம்புகளால் குத்தி வயிற்றை பிளந்து துன்பப்படுத்தும். ஆகையால் யாவற்றையும் விட்டொழி" என்றும் கூறுகிறது.

அம்மட்டும் இல்லாமல் மனைவி, மகன் யாவற்றையும் விட்டு ஒழித்த சந்நியாசி. துறவி ஆகியோருக்கு நிந்தை நீங்கி புகழ்ச்சி ஏற்பட்டு இருப்பதை பாராய்.

இவை யாவும் அறிந்து எல்லா கருமங்களையும் மனைவி, புத்திரர், செல்வம் ஆகியவற்றில் ஆசைகளை துறந்து பிரம்ம ஐக்கிய ஞானத்தால் உண்டாகும் ஆனந்தத்தை அடைவாயாக.

அயமகத்தினில் அரசநீ படுத்தவம் மறிகள்
செயிர்த ழைந்துகண் டீயுக வரவுபார்த் திருக்கும்
பயில்வி சும்புசெல் காலையில் வெருவரப் பாய்ந்து
வயிறு போழும்வல் விருப்பினொண் மருப்பினின் மாதோ
பகுத்திடு மறிகள் வேள்வி புரிந்தவன் பனிவி சும்பி
னகுத்திடுங் கால நோக்கி யழல்விழி யொழுகப் பாய்ந்து
வடித்தசா ரிருப்பிற் செய்த மருப்பினால் வயிறு போழ்ந்த
தெடுத்துநா முரைத்துங் கேட்டி விறைவனென் றுரைக்க லுற்றான்
பாகவதம்

No comments: