Pages

Tuesday, July 21, 2009

கர்மம் சித்த சுத்தி வழியே விசாரம் உதித்து ஞானம் பெறச்செய்யும்.அது போல விசாரத்தால் அஞ்ஞானமாகிய மறதியை நீக்கி அறிவினால் பரிசுத்த ஆன்மாவை தரிசிப்பதாகிய ஞானத்தை பெற வேண்டும். அது இன்றி நூறு யுகங்கள் பிரபலமாகிய பெரிய கர்மங்களை செய்தாலும் அந்த ஞானம் கிடைக்காது......

பத்தி நெறி நிலை நின்று நவகண்ட பூமிப் பரப்பைவல மாக வந்தும்
பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசிதாக மின்றி யெழுநா
மத்தியிடை நின்றுமுதிர் சருகுபுனல் வாயுவினை வன்பசி தளக்க டைத்தும்
மவுனத் திருந்துமுயர் மலைநுழை தனிற்புக்கு மன்னுதச நாடி முற்றுஞ்
சுத்தி செய் தும்மூல ப்ராணனோ டங்கியைச் சோமவட் டத்த டைத்தும்
சொல்லரிய வமுதுண்டு மற்பவுடல் கற்பங்க டோறுநிலை நிற்க வீறு
சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே சின்மயானந்த குருவே.
-தாயுமானவர்

ஆக கருமம் ஞான சாதனம் இல்லை. ஆனால் நிஷ்காம கர்மம் சித்த சுத்தி கொடுத்து அதன் வழியே விசாரம் உதித்து ஞானம் பெறச்செய்யும்.

சரி ஐயா. வேதத்திலே கர்ம காண்டத்தில சொல்லி இருக்கே ஐயா புண்ணிய கர்மம் பண்ணா தேவ ஜன்மம் கிடைக்கும் பாபம் பண்ணா மிருகம் முதல் தாவரம் வரையான ஜன்மம் கிடைக்கும். பலரும் செய்கிற படி இரண்டும் கலந்து பண்ணா மனுஷ ஜன்மம் கிடைக்கும்ன்னு. அவங்கவங்க ஜாதி ஆசாரத்திலே ஒழுக்கத்தில தவறாம நடக்கிறதே தவம் அதனால சுகமடைவான் னு சொல்லி இருக்கே. ஏன் இப்படி சொன்னாங்க?

72.
கர்ம காண்டத்தில் கூறி உள்ளதை சீடன் சந்தேகப்படுதல்:

நன்மை யாங்குரு வேசுகந் தருவது ஞானமே யெனும் வேதம்
தன்ம பாவமிச் சிரங்களாற் றேவர்க டருவிலங்குகண் மாந்தர்
சென்ம மாகுவ சாதியா சாரமே செய்தவஞ் சுகமென்று
கன்ம காண்டத்தில் விதித்ததென் விதித்துள காரணமுரையீரே

நன்மையாங் குருவே, சுகந் தருவது ஞானமே எனும் வேதம் தன்ம (புண்ணிய) பாவ மிச்சிரங்களால் தேவர்கள், தரு, விலங்குகள், மாந்தர் சென்மமாகுவர். சாதி ஆசாரமே செய்[கின்ற] தவம், சுகம் என்று கன்ம காண்டத்தில் விதித்தது என்? விதித்துள காரணம் உரையீரே.
--
உத்தம குருவே! ஞானம் ஒன்றே மோக்ஷத்தை அளிப்பது என்று கூறும் வேதம், புண்ணிய கருமத்தால் தேவ ஜன்மமும் பாப கருமத்தால் மிருகம் முதல் தாவரம் வரையில் உள்ள ஜன்மங்களும் இரண்டும் கலந்த கர்மத்தால் மனித பிறவியும் கிடைக்கும் என்றும்; அவனவன் தன் தன் ஜாதி ஆசார ஒழுக்கங்களில் தவறாது நடப்பதே தவம் என்றும், அதனால் சுகமடைவான் என்றும் சொல்லி இருக்கிறதே அதன் காரணத்தை சொல்ல வேண்டுகிறேன்.


ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை. அவங்க அம்மா மருந்து கொடுக்கப்பாக்கிறாங்க. மருந்தோ ஒரே கசப்பு. என்ன செய்கிறது? குழந்தைக்கு பிடிச்ச பண்டம் ஒன்னில மருந்தை ஒளிச்சு கலந்து வைக்கிறாங்க. குழந்த தனக்கு பிடிச்ச பண்டம் ன்னு சாப்பிட ஆரம்பிக்கும். ருசி வேற மாதிரி இருக்குன்னு அதுக்கு புரிஞ்சு துப்பறத்துக்குள்ளே ஏதோ பேச்சு போக்கு காட்டி சாப்பிட வைச்சுடுவாங்க.
அது போல இல்லற தர்மங்களை வேதம் வரையறுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் வேற. சுவர்க்கம் போன்ற போகங்களில ஆசை வெச்சு இருக்கிறவங்க அந்த உண்மையான பொருளை உணர மாட்டாங்க.


73
தினமு மண்ணுகர் பிள்ளைநோய்க் கிரங்கியே தீம்பண்ட மெதிர்க்காட்டிக்
கனம ருந்துகளொளித்து வைத்தழைக்கின்ற கருணைநற் றாய்போலே
மனைய றங்கள் செய்மகங்கள் செய் நன்றென்று மலர்ந்தவா சகஞ் சொல்லும்
நினைவு வேறுகாண் சுவர்ககா மிகளந்த நிண்ணயந் தெரியாரே

தினமும் மண் நுகர்(தின்கின்ற) பிள்ளை நோய்க்கு இரங்கியே, தீம் (இனிப்பான) பண்டம் எதிர்க்காட்டி, கன மருந்துகள் ஒளித்து வைத்து அழைக்கின்ற கருணை நல் தாய் போலே மனை (இல்லத்துக்குரிய) அறங்கள் செய்; மகங்கள் (யாகங்கள்) செய்; நன்று. என்று மலர்ந்த வாசகஞ் சொல்லும் நினைவு வேறு காண். ஸ்வர்க காமிகள் அந்த நிண்ணயம் தெரியாரே.
--
மண் முதலியவற்றை உண்டு வியாதி உற்று இருக்கும் தன் குழந்தையின் நோயை நீக்க தாயானவள், நேரே அதற்கு மருந்தை கொடுத்தால் அது சாப்பிடாதாகையால் அப்படி தராமல் சுவையான தின்பண்டங்களைக் காட்டி அவற்றில் மருந்தை மறைத்து வைத்து குழந்தை அதை சாப்பிடும் படி செய்கிறாள். அந்த கருணை உள்ள தாயாரைப்போல இல்லற தருமங்களை செய். யக்ஞங்களை செய் என்று வேதம் கூறியதே அன்றி உண்மையில் அதன் கருத்து வேறாகும். சுவர்க்கம் முதலான போகங்களை அனுபவிக்க ஆசை உடையவர்கள் அந்த உண்மை கருத்தினை உணர மாட்டார்கள்.


Post a Comment