சில விஷயங்கள் ஏற்கெனவே சுபாவமா இருக்கில்லை? அதை செய் ன்னு சொல்ல வேதம் வரணுமா என்ன? யாரும் "ஓ! காகமே! நீ கறுப்பாகு. அக்னியே, நீ சுடு! வேம்பே, நீ கசப்பா இரு! காத்தே, நீ வீசு!” ன்னு சொல்லறாங்களா என்ன? அதெல்லாம் அதததோட சுபாவம் இல்லையா?
74.
போக மாருயிர் கண்டதை யுண்பதும் புணர்வது மியல்பேகாண்
ஆக மங்களுஞ் சுபாவத்தை விதிக்குமோ வத்தனை தெரியாதோ
காக மேகறுத் திடுநெருப் பேசுடு கசந்திடு வேம்பே
வேக வாயுவே யசையென வொருவரும் விதித்திடல் வேண்டாவே
போகம் (உண்கின்ற) ஆருயிர்(கள்) கண்டதை உண்பதும் புணர்வதும் இயல்பே காண். ஆகமங்களும் சுபாவத்தை விதிக்குமோ அத்தனை தெரியாதோ? காகமே கறுத்திடு நெருப்பே சுடு, கசந்திடு வேம்பே, வேக வாயுவே அசைந்திடு என ஒருவரும் விதித்திடல் வேண்டாவே.
--
போகங்களை புசிக்கும் சீவன்கள் அகப்பட்டதை உண்பதும் உடன்உறங்குவதும் இயல்பே ஆகும். ஸ்ருதி (வேதம்) சுபாவமாக உள்ளதை எங்காவது விதிக்குமோ? அதற்கு அவ்வளவு தெரியாதோ? “காகமே! நீ கருப்பாய் இரு. நெருப்பே நீ சுடு, வேம்பே நீ கசப்பாய் இரு " என்று எல்லாம் யாரும் விதிக்க வேண்டியது இல்லையே?
மேலும் பாருப்பா! வேதம் சாதாரணமா நாம செய்ய விரும்புகிற விஷயங்களை பண்ணுன்னு சொல்லலை. மாறா அதுக்கெல்லாம் கட்டுப்பாட்டை விதிக்குது. "மது, மாமிசம் உண்ண ஆசை வந்தாச்சு; அதை கட்டுப்படுத்த முடியலை ன்னா யக்ஞங்கள் செய்து அங்க சாப்பிடு. ஸ்திரீ போகத்தில் இச்சை இருந்தா கட்டின பெண்டாட்டி கூட மட்டும் வெச்சுக்க.” இப்படி கட்டுப்பாடுகளை விதிக்குது. அதை மேலும் கட்டுப்படுத்தவும் பாக்குது. "யக்ஞத்தில மதுவோ மாமிசமோ சாப்பிட்டாகணும் ன்னு இல்லை; முகர்ந்து பாத்துட்டு விட்டுடலாம். அப்போ அது கர்ம வழி நடந்ததாகவும் ஆகும். நெடுங்காலம் சுவர்க போகங்களும் கிடைக்கும்.” என்கிறது. மேலும் அது "உன்னால யாகத்தில் பலி போடப்பட்ட பசு, சுவர்கத்தில கூர்மையான எஃகு கொம்புகளோட, நம்ம பலி போட்டப்பயல் எப்படா வருவான்; முட்டி குத்தி கிழிக்கலாம்" ன்னு கோபத்தோட காத்திருக்கும் அப்படின்னும் சொல்லுது.
"கண்ட கண்ட ஸ்த்ரீக்களோட போகம் அனுபவிச்சா இந்த பிறவில பழி ஏற்படும் மறுமையில நரக வேதனையும் கிடைக்கும்" என்குது. மேலும் "கட்டின பெண்டாட்டியானாலும் இன்னின்ன நாட்களில போகம் செய்யாதே" ன்னு பெரிய பட்டியலே போடுது. அதை கடைப்பிடிச்சா பெரிய - ஹிஹிஹி சின்ன - குடும்ப திட்டமே தேவையில்லை. இயற்கையாவே கட்டுப்பாடு வந்துடும்.
75.
கள்ளு மூனுநீ விரும்பினான் மகங்கள் செய் காமத்தின் மனதானால்
கொள்ளும் பெண்டொடு கலவி செய் யெனிலிவன் குறையெலாந் தொடானென்றே
தள்ளும் வேதத்தின் சம்மதஞ் சகலமுந் தவிர்வதே கருத்தாகும்
விள்ளுமிவ்விதி யென்னெனிர் பூருவ நியமமாம் விதியன்றே
"கள்ளும் ஊனும் நீ (உண்ண) விரும்பினால் மகங்கள் (யாகங்கள்) செய். காமத்தின் மனதானால் கொள்ளும் (கல்யாணம் செய்த) பெண்டொடு கலவி செய்” எனில் இவன் குறை எலாம் தொடான் என்றே வேதத்தின் சம்மதம் தள்ளும் (சம்மதித்தது போல கூறியது). சகலமும் தவிர்வதே கருத்தாகும். விள்ளும் (முன் சொல்லிய) இவ்விதி என்ன எனில் பூருவ நியமமாம். விதி (சித்தாந்தம்) அன்று.
--
மதுவும் மாமிசமும் உண்ண நீ இச்சித்தால் யாகங்கள் செய்து அங்கே உண். ஸ்திரீ போகத்தில் விருப்பம் கொண்டால் அக்னி சாட்சியாக மணம் செய்து கொண்ட பெண்ணுடன் கலவி செய்" என்று வேதம் விதித்தது. அப்படி சொன்னால் இவன் மனம் போன படி நேரிட்ட எல்லா போகங்களிலும் தலையிட மாட்டான் என்று கருதியே அப்படி கூறியது. யாவற்றையும் விட்டு ஒழிக்க வேண்டும் என்பதே அதன் கருத்து.
No comments:
Post a Comment