Pages

Thursday, July 2, 2009

ஜீவன் முக்தன் எப்படி ஈசனுக்கு ஒப்பு?சரி ஐயா, ஜீவன் முக்தன் எப்படி பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய ஈசனுக்கு ஒப்புன்னு சொல்லறீங்க? பிரம்மா படைக்கிறார். சிவன் அழிக்கிறார். விஷ்ணு காக்கிறார். ஞானி இந்த மாதிரி எதுவும் செய்யலையே. ஈசனுக்கு முக்காலத்திலும் நடந்த நடக்கப்போற விஷயங்கள் தெரியுது. மத்தவங்க மனசில இருக்கிற விஷயங்கள் தெரியுது. அப்படிப்பட்ட சக்தி எதுவும் இருக்கிறதா ஞானி காட்டிக்கலையே.

40.
இவனயன்மால் சிவனாகிய வீசரொடெப்படி யொப்பாவன்
சிவன் முதன் மூவருமகில சிருட்டிதிதி நாசங்கள் செய்வார்
அவர்பிறர் மதிகளுமுக் காலங்களுமறிவார் விபுவாவார்
தவமிகுகுருவே யிவனுக்கவையிலொர் சற்றுங்காணேனே

இவன் அயன் மால் சிவன் ஆகிய ஈசரோடு எப்படி ஒப்பாவன்? சிவன் முதன் மூவரும் அகில (உலகின்) சிருட்டி,(உருவாக்குதல்) ஸ்திதி (நிலை பெறுத்தல்), நாசங்கள் செய்வார். அவர் பிறர் மதிகளும் (மனதில் உள்ள விஷயங்களும்) முக் காலங்களும் அறிவார்; விபு (எல்லாவற்றிலும் சம்பந்தம் உடையவர்) ஆவார். தவ மிகு குருவே இவனுக்கு அவையில் (அந்த மகிமைகளில்) ஓர் சற்றும் [தோன்ற] காணேனே.

நம்ம வீட்டிலே ஒரு ட்யூப் லைட் போட்டு வெச்சு இருக்கோம். அஞ்சாறு பேர் புழங்கற இடத்திலே அது போதுமானதா இருக்கு. இதுவே ஒரு பரபரப்பான நாலு ரோடு கூடற இடம்னா அதோட வெளிச்சம் போதாது. அதுக்கு ஒரு ஹைமாஸ்ட் விளக்குத்தொகுப்பு வேணும். இதுகளோட வீச்சு வேறயா இருந்தாலும் வெளிச்சம் தருகிற குணத்தில ரெண்டும் ஒண்ணுதானே?

வீட்டில குடிக்கிற தண்ணி ஒரு குடம் தயார் செய்து வைக்கிறோம். அது நாலு பேர் மட்டும் இருக்கிற குடும்பத்துக்கு போதும். இதுவே வீட்டில் ஒரு விசேஷம், உறவினர் இருபது, முப்பது பேர் வராங்கன்னா கடையிலேந்து ஒரு இருபத்தஞ்சு லிட்டர் கான் குடிநீர் ரெண்டு மூணு - காலத்துக்கு தகுந்தாப்போல வாங்கி வைப்போம். ரெண்டுமே தாகத்தை தணிக்கிறதுலே ஒரே குணம்தானே?

அதப்போலவே பிரம்ம ஞானியும் ஈசனும் ஞானத்தால வேறுபாடு உள்ளவங்க இல்லை.மாயையில் மட்டுமே வேறுபாடு உள்ளவங்க.
தத்துவ விளக்கப்படலத்தில பாத்து இருக்கோம் இல்லையா? ஈசன் -சத்துவ மாயை; சீவன்- ரஜஸ மாயை.

ராஜாக்கள் அவங்க நாட்டிலே இருக்கிற கெட்டவங்களை தண்டிக்கிறாங்க. நல்லவங்களை ஆதரிப்பாங்க. (இந்த காலத்து அரசைப்பத்தி இப்படி சொல்ல முடியலைங்கிறதால ராஜா ன்னு சொல்ல வேண்டி இருக்கு.:-( ) சித்தர்கள் முதலானவங்க சாபம் கொடுக்கவும் செய்வாங்க; அதை நீக்கவும் செய்வாங்க. அவங்களுக்கு அணிமா முதலான சக்திகளும் உண்டு.
அவங்களைப்போல பல சக்திகளும் உடையவன் ஈசன்.
ஞானி மனுஷ ஜன்மம் எடுத்தவன். இவனுக்கு இந்த மாயா வல்லமையும் இல்லை. அஷ்டமா சித்திகளும் இல்லை. அதனால ஏதோ தாழ்ந்தவன் மாதிரி தோணுது. இருந்தாலும் பிரம்ம பாவனையால வித்தியாசமே இல்லை.

ஞானி தன் பிராரத்தம் முடிகிற வரை டிராமாவிலே தனக்கு கொடுத்து இருக்கிற பாத்திரத்தை தேர்ந்த நடிகனா நடிச்சுவிட்டு போயிடுவான். ஈசனோ மெகா சீரியல் டைரக்டர். பல நடிகர்களை வெச்சுகிட்டு டிராமா போட்டு ஆகணும். ஞானி ரோல் முடிஞ்சு வீட்டுக்கு போயிடலாம். ஆனா டைரக்டர் ஈசன் சீரியல் முடிகிற வரை வேலை பாக்கணும். மெகா சீரியல் முடிகிறது ஏது? பிரலயத்திலேதான் முடியும்.


41.(அறுசீர் விருத்தம்-வேறு)
அதற்கு விடை:
தடத்துநீர் நிலாத்திரியொளி யுபயமுந்தழுவு மூர்தனைக்காக்கும்
குடத்து நீர் விளக்கினி லொளிரிரண்டுமோர் குடும்பமாத்திரங் காக்கும்
அடுத்த மைந்தனே ஞானியுமீசனு மறிவினாற் பிரிவில்லை
கெடுத்த மாயையின் குணங்களான் மேலொன்றுங் கீழொன்றும் பிரிவாமே

தடத்து நீர் (ஏரி நீர்) நிலாத் திரி (தீவட்டி) ஒளி உபயமும் தழுவும் (ஏற்றுக் கொள்ளும்) ஊர் தனைக் காக்கும். குடத்து நீர், விளக்கினில் ஒளி இரண்டும் ஓர் குடும்ப மாத்திரம் காக்கும். அடுத்த மைந்தனே ஞானியும் ஈசனும் அறிவினால் பிரிவில்லை. (சீவர்கள் முத்தி பெறா வண்ணம்) கெடுத்த மாயையின் குணங்களால் மேல் ஒன்றும் கீழ் ஒன்றும் பிரிவாமே.
--
ஒரு சிறு தீபம் ஒரு வீட்டில் உள்ள 5-6 பேர்களுக்கு மட்டும் ஒளி தரும். தீவட்டி பலர் உள்ள சபைக்கு ஒளி தரும். இவை ஒளி தரும் குணத்தில் ஒன்றே. ஒரு குடத்து நீர் ஒரு வீட்டில் உள்ளவருக்கு தாகம் தணிக்கும். தடாகத்து நீர் ஊருக்கே தாகத்தை தணிக்கும். ஆனால் இரண்டுமே தாகம் தணிக்கும் குணத்தை உடையவை. அது போல ஞானத்தால் ஈசனும் ஞானியும் வித்தியாசம் உடையவரல்லர். சீவர்கள் முத்தி பெறா வண்ணம் சீவர்களை தடுத்த ஆவரணம் மட்டுமே வித்தியாசம். (ஈசன் -சத்துவ மாயை; சீவன்- ரஜஸ மாயை)

42.
நரரின் மன்னனைச் சித்தரைப் போலவே நாரணன் முதலான
சுரர்கண் மாயைவல்லவ ரணிமாதிக டொக்க மாதவ மிக்கோர்
தரணிமா நுடர்க் கவைகளில் லாமையாற் றாழ்வுள ரானாலும்,
பிரம பாவனை யாலிவரவரென்னும் பேதமொன்றிலை பாராய்

நரரில் மன்னனை போலவே (தீயனைவை ஒழித்து நல்லனவற்றை பேணும் மன்னன் போல) சித்தரைப் போலவே (சாப அனுக்கிரக வல்லமை உள்ள சித்தர் போல) நாரணன் முதலான சுரர் கண் (தேவர்கள் இடத்துள்ள) மாயை வல்லவர் (மாயா சக்தி உடையவர்கள்) அணிமாதிகள் ஒக்க,(அணிமா முதலான சக்தி உடையவர்கள்)[யாரென்றால்] மாதவம் மிக்கோர். (அதற்காக பெரும் தவம் செய்தோர்). தரணி (உலக) மாநுடர்க்கு [இந்த இடத்தில் ஞானிகளை சொல்கிறார்] அவைகள் இல்லாமையால் தாழ்வுளர் ஆனாலும், பிரம பாவனையால் இவர் அவர் என்னும் பேதம் ஒன்றிலை பாராய்.


அது சரி! ஆனா பல கதைகள் கேட்டு இருக்கோமே. இந்த முனிவர்/ அந்த சித்தர்இ இப்படிப் பண்ணார், அவர் அப்படிப்பண்ணார்ன்னு. விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்காக சொர்கத்தையே படைச்சு இருக்கார். இப்படி இருக்கிறப்ப ஞானிகளுக்கு அணிமா சித்திகள் இல்லைன்னா என்ன அர்த்தம்?


Post a Comment