Pages

Thursday, July 16, 2009

எதனால் ஞானம் உதிக்கும்?



62.
அக் குற்றம் நீங்க உபாயம்:
ஒன்று கேண்மக னேபுமான் முயற்சியா லுறைத்துமா னுடர்க்கீசன்
நன்று செய்யவே காட்டிய நூல்வழி நடந்துநல் லவர்பின்னே சென்று
துட்டவா தனைவிட்டு விவேகியாய் செனித்தமா யையைத் தள்ளி
நின்று ஞானத்தை யடைந்தவர் பவங்கள்போம் நிச்சயமிதுதானே

ஒன்று கேண் மகனே! புமான் (மனிதன்) முயற்சியால் உறைத்து, மானுடர்க்கு ஈசன் நன்று செய்யவே காட்டிய நூல் வழி நடந்து நல்லவர் பின்னே சென்று, துட்ட வாதனை (வாசனை) விட்டு விவேகியாய், செனித்த மாயையைத் தள்ளி நின்று, ஞானத்தை அடைந்தவர் பவங்கள் போம். நிச்சயம் இதுதானே.
--
மனிதர்களுக்கு பிரம்மானந்த பேற்றை அளிக்கவே ஈஸ்வரன் வேதத்தை அருளியிருக்கிறார். யார் மோக்ஷம் அடைய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு முயன்று, வேதத்தில் கூறப்பட்ட வழியில் நடந்து, பிரம்ம நிஷ்டர்களாகிய பெரியோர்களின் சகவாசத்தில் இருந்து, காம குரோத முதலான மலின வாசனைகளை ஒழித்து சம, தம முதலான சாதனைகளை அடைந்து, நித்திய, அநித்திய விவேகம் உடையவர்களாய், அவிவேகத்தால் உண்டான மாயையாகிற பேத புத்தியை ஒழித்து ஓர் நிலையில் நின்று ஞானத்தை அடைகிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பாகிய பவசாகரத்தைக் கடந்து முத்தியாகிய கரையை அடைவார்கள். இது நிச்சயம்.

"அது சரி! இப்படி பல படிகள் சொல்லறீங்களே! எதால ஞானம் உதிக்கும்?” என்கிறார் சீடன்.
"ஞானம் இடைவிடாத விசாரத்தாலதான் உதிக்கும்.”
"என்ன விசாரம்?"
விசாரம் என்கிறது என்ன ? "இந்த தேக இந்திரிய கரணங்களில் நான் என்று இருப்பது எது? இவற்றில் சித்தாக உள்ளது எது? இந்த சித்தும் ஜடமும் ஒன்றாகப் பொருந்தும் பந்தம் ஆவது எது? மோக்ஷம் என்பது என்ன?” இப்படி சதா ஆராய்ச்சி செய்தலே விசாரம்.

கெடாத சிற்கண்ணா னீதான் கிளர்மே லவர்க ளுடேதான்
விடாதிவ் வுலகே தியாமாரென் றுரைக்க மெல்ல விசாரிப்பாய்
தடாதுட் பொருடேர் வித்தைக்கு விசாரந் தானே தனிஞானம்
கடாவி யறியத் தக்கத்திற் காணும் பாலின் மதுரம்போல்
-வாசிட்டம்

63.
எதனால் ஞானம் உதிக்கும்?
இந்த ஞானத்தான் வருவதெப் படியெனி லிடைவிடா விசாரத்தால்
வந்த டைந்திடும் விசாரந்தா னேதெனின் மனாதியாஞ் சரீரத்தில்
இந்த நானெவன் சித்தெது சடமெது விரண்டுமொன் றாக்கூடும்
பந்தமேதுவீ டேதென வுசாவுதல் பகர்விசா ரமதாகும்

இந்த ஞானத்தான் வருவது எப்படி எனில், இடைவிடா விசாரத்தால் வந்தடைந்திடும். விசாரந்தான் ஏதெனில், மன ஆதியாம் (முதலான) சரீரத்தில் இந்த நான் எவன், சித்து எது, சடம் எது இரண்டும் ஒன்றாக்கூடும் பந்தம் ஏது, வீடு ஏது என உசாவுதல் பகர் (சொல்லப்பட்ட) விசாரம் அதாகும்.

ஏன் நிறைய நல்ல காரியங்கள் பண்ணா தானா ஞானம் வராதா என்ன?


1 comment:

Geetha Sambasivam said...

//ஏன் நிறைய நல்ல காரியங்கள் பண்ணா தானா ஞானம் வராதா என்ன?//

அதானே!!!!! ???????