ஈஸ்வரனோட சிருஷ்டி வேறே; சீவனோட சிருஷ்டி வேறே. உலகத்தில பொதுவா இருக்கிறது எல்லாமே ஈஸ்வரனோட சிருஷ்டி. நதிகள் அவன் சிருஷ்டி. மலைகள், கடல், பூமி, வானம், செடி கொடிகள்......
அதை எல்லாம் வைத்துக்கொண்டு மனிதன் செய்கிறது சீவ சிருஷ்டி.
நான், என்னுது, கோபம், தாபம், பொறாமை - இதெல்லாம் மனிதனோட சிருஷ்டி.
[ஒரு சன்னியாசி வித்தியாசமா இறைவன் பத்தி சொன்னார்.
சாமி இருக்கான்னு கேக்கிறியா? இருக்கார்.
அவர் யார் ன்னு கேக்கிறயா?
எதுவெல்லாம் உருவாக மனுஷன் பொறுப்பில்லையோ, அதை எல்லாம் உருவாக்கினவர்தான் சாமி!]
முக்கிய வித்தியாசம் என்னன்னா ஈசனோட சிருஷ்டிகள் மோக்ஷமடைய சாதனமா ஆகும். புண்ணிய தீர்த்தங்கள், மலைகள், விருட்சங்கள்.... இப்படி ஏராளமா இருக்கே.
இன்னுமொன்னு. ஈசனோட சிருஷ்டிகள் நாசம் ஆகிறதால யாருக்கும் பிறவி ஒழியாது. ஆனா மனித சிருஷ்டியான நான், என்னது என்கிறதெல்லாம் ஒழிஞ்சா பிறவி ஒழியும்.
பிரலய காலத்திலே ஈச சிருஷ்டிகள் எல்லாம் ஒழியும். அப்பவும் பிறவி ஒழியாது. மெழுகு உருண்டையில தங்க தூள் போல ஜீவாத்தமா எல்லாமே சரியான நேரத்துக்காக காத்து இருந்து திருப்பி பிறவி எடுக்கும்.
ஆனா தேசம், காலம், தேகம் எல்லாம் இருக்கிறப்பவே ஆசை, கோபம், அகங்காரம் ஒழிச்சவங்க உயிரோட ஜீவன் முக்தர்களா இந்த உலகத்திலேயே ஞானத்தோட இருக்காங்க.
ஈஸ்வர சிருஷ்டி பொது; சீவன் அதில வேறுபாட்டை உருவாக்கறான் என்பதுக்கு உதாரணம் பாக்கலாம். ஈசன் ஒரு பெண்ணை படைக்கிறான். பொதுவா எல்லா பெண்களும் ஒரே தேக அமைப்போடதான் இருக்காங்க. ஆனா மனித பார்வையிலே ஒத்தர் அழகு ஒத்தர் கோரம்... இதே பெண் ஒத்தருக்கு பெண்; ஒத்தருக்கு மனைவி; ஒத்தருக்கு அம்மா; சகோதரி, நாட்டுப்பெண், பாட்டி..... இப்படி வித்தியாசங்களை உருவாக்குகிறது மனிதனோட கற்பனைதான்.
ஈச சிருஷ்டியை சீரழிச்சு மனுஷன் இயற்கையை திட்டுகிறதையும் பாத்துகிட்டுதானே இருக்கோம்.
55.
திகழ்ந்த வீசனார் சிருட்டியுஞ் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே
சகந்த னிற்பொது வீசனார் சிருட்டிகள் சராசரப் பொருளெல்லாம்
அகந்தை யாமபி மானங்கள் கோபங்க ளாசைக ளிவையெல்லாம்
இகழ்ந்த சீவனார் சிருட்டிக ளாகுங்கா ணீசனார் செயலன்றே
திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் சீவனார் சிருட்டியும் வெவ்வேறே. ஈசனார் சிருட்டிகள்- சகந்தனில் பொது - சராசரப் பொருளெல்லாம். அகந்தையாம் (என் என்ற) அபிமானங்கள், கோபங்கள், ஆசைகள் இவையெல்லாம் இகழ்ந்த சீவனார் சிருட்டிகள் ஆகும் காண். ஈசனார் செயல் அன்றே.
--
56.
மூவராம்பரன் சிருட்டிக ளுயிர்களுக்கெல்லா முத்திசா தனமாகும்
சீவ னார்செயுஞ் சிருட்டிக டங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும்
தாவ ராதிக ணசித்திடி லொருவர்க்குஞ் சனனங்க ணசியாவாங்
கோப மாதிக ணசித்திடிற் பந்தமாங் கொடும் பிற விகள்போமே
மூவராம் பரன் சிருட்டிகள் உயிர்களுக்கெல்லாம் முத்தி சாதனமாகும். சீவனார் செயும் சிருட்டிகள் தங்களைச் செனிப்பிக்கும் பிணியாகும். தாவராதிகள் நசித்திடில் ஒருவர்க்கும் சனனங்கள் நசியாவாம். கோபமாதிகள் நசித்திடில் பந்தமாம் கொடும் பிறவிகள் போமே.
--
ஈசனது சிருட்டிகள் மோக்ஷத்துக்கு சாதனமாகும். சீவர்களின் சிருட்டிகள் பிறவி அளிக்கும் பந்தங்களாம். ஈசன் சிருட்டித்த தாவரம் முதலியவை அழிந்தால் ஒருவருக்கும் ஜனனம் ஒழியாது.
57.
ஈசர் காரியம் பிரளயத் தொழியவு மெவர்பவ மொழிந்தார்கள்
தேச காலதே காதிக ளிருக்கவுஞ் சீவகா ரியமோகம்
நாச மாக்கிய விவேகத்தி னுயிரொடு ஞானமுத் தர்களானார்
பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே
ஈசர் காரியம் பிரளயத்து ஒழியவும் எவர் பவம் (உலகம்) ஒழிந்தார்கள்? தேச கால தேகாதிகள் இருக்கவும் சீவகாரிய மோகம் நாசமாக்கிய விவேகத்தின் உயிரொடு ஞான முத்தர்களானார். பாச மோகங்கள் பசுக்களின் செயலன்றிப் பசுபதி செயலன்றே.
--
பிரளய காலத்தில் ஈசன் சிருட்டித்த அனைத்தும் அழிகின்றன. அப்படியும் யாருக்கும் ஜனன நாசம் ஏற்படுவதில்லை. கோபம் அகங்காரம் ஆசை ஆகிய ஜீவ சிருஷ்டிகள் ஒழிந்தால் ஜனன நாசம் ஏற்படும்.
No comments:
Post a Comment