Pages

Wednesday, July 15, 2009

பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?கடவுள் மறுப்பாளர்கள் முன் வைக்கிற இன்னொரு வாதம் - ஏன் ஏற்றத்தாழ்வு இருக்கு? எல்லாரும் ஒரே மாதிரி இருந்து இருக்கலாமே? ஏன் சிலர் பணக்காரங்க சிலர் அறிவாளி சிலர் பலசாலி மத்தவங்க அப்படி இல்லாம? சிலருக்கு எல்லாமே நல்லதா நடக்குது சிலருக்கு குட்டிக்கரணம் போட்டாலும் நடக்கலை. எல்லாருக்கும் பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?

முதலாவதா கடவுள் பாரபட்சம் காட்டலை. ஒரே அப்பா ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்கற பையனை தட்டிக்கொடுத்து பாராட்டுறார். சரியா படிக்காம ஊர் சுத்ததிட்டு குறைவா மார்க் வாங்கற பையனை திட்டறார் அடிக்கிறார். அது ஏன் அவருக்கு அதில சந்தோஷமா என்ன? கண்டிக்காட்டா பையன் இன்னும்தானே கெட்டுப்போவான்? அப்புறம் கஷ்டப்படுறது யாரு? அது போலதான் தர்மத்துப்படி நடந்துக்கிறவங்களுக்கு நல்லது செஞ்சு மத்தவங்களுக்கு தண்டனை தருவது இதுக்குத்தான். மக்களை நல்வழியிலே போக வைக்கத்தான். தண்டனை கொடுக்கிறதும் கருணையாலதான்.

இரண்டாவதா நெருப்பு எரியுது. யார் கிட்டே போய் உக்காந்துக்கிறாங்களோ அவங்களுக்கு குளிர் போகும். சுகமாயிருப்பாங்க. யார் கிட்டேயே வர மாட்டேன் என்கிறாங்களோ அவங்களுக்கு அதோட பயன் கிடைக்காது. இது நெருப்போட குத்தமா இல்லை பயன்படுத்தறவங்க குத்தமா? வெய்யில்லே காஞ்சுட்டு வந்த ஆசாமி குடத்தில இருக்கிற தண்ணியை குடிச்சாதான் தாகம் போகும். இல்லைனா தாகம் போகாது. அது தண்ணியோட குத்தமில்லை. அது போல ஆண்டவன்கிட்டே முறையிட்டா பலன் கிடைக்கும். இல்லாட்டா எப்படிக்கிடைக்கும்?

60.
ஈஸ்வர சிருட்டி பொதுவானால் அவரும் பொதுவாமே, அப்படியானால் பட்சபாதம் வருவானேன்? விடை:

நலமெய் யையனே யெல்லவர்க் குந்தெய்வ நாயகன் பொதுவானால்
சிலரை வாழ்வித்தல் சிலரொடு கோபித்தல் செய்வதே யேனென்றாயேல்
குலவு மக்களைத் தந்தை போற் சிட்டரைக் குளிர்ந்து துட்டரை காய்வன்
கலைக்கணல் வழி வரச்செய்யும் தண்டமுங் கருணையென் றறிவாயே

நலமெய் ஐயனே, எல்லவர்க்கும் (எல்லாருக்கும்) தெய்வ நாயகன் (ஈசன்) பொதுவானால் சிலரை [நன்கு] வாழ்வித்தல், சிலரொடு கோபித்தல் செய்வது (துன்பமடையச்செய்வது) ஏன் என்றாயேல், குலவு மக்களைத் தந்தை போல் சிட்டரைக் குளிர்ந்து (சாத்திரங்களில் செய்யச் சொல்லியவற்றை செய்து விலக்கச் சொல்லியவற்றை விலக்கி செய்யாது உள்ளோருக்கு இன்பத்தை அளிக்கிறான்) துட்டரை காய்வன். (விலக்கிய தீ நெறியில் செல்வோர்களை தண்டிப்பான்) கலைக் கணல் வழி (ஆன்மாக்கள் நல்ல வழியில்) வரச் செய்யும் தண்டமும் (தண்டனையும்) கருணை[யால் செய்வதே] என்று அறிவாயே.
--
தந்தை நன்னடத்தை உள்ள மகனை சீராட்டி, கெட்ட நடத்தை உள்ள மகனை தண்டிப்பது போல ஈசனும் செய்கிறான்.

61.
மற்றொரு விதமாக விடை:
மனை யிலங்கறு மைந்தனே கற்பக மரங்கனல் புனன் மூன்றும்
தனைய டைந்தவர் வறுமையுஞ் சீதமுந் தாகமுந் தவிர்த்தாளும்
அனைய வீசனு மடைந்தவர்க் கருள்செய்வ னகன்றவர்க் கருள்செய்யான்
இனைய குற்றங்க ளெவர் குற்றமாகு மென்றெண்ணிநீ யறிவாயே

மனையிலங்கு அரு மைந்தனே, கற்பக மரம், கனல் (தீ), புனல் (நீர்) மூன்றும் தனை (தம்மை) அடைந்தவர் வறுமையும், சீதமும் (குளிரும்) தாகமும் தவிர்த்து ஆளும். (காப்பாற்றும்) அனைய [அதுபோல்] ஈசனும் அடைந்தவர்க்கு (வழிபடுவோருக்கு) அருள் செய்வன். அகன்றவர்க்கு அருள் செய்யான். இனைய (இந்த) குற்றங்கள் எவர் குற்றமாகும் என்று எண்ணி நீ அறிவாயே.

"சரி, எனக்கு என்ன செய்யணும் ன்னு தெரியலையே!"ன்னா செய்ய வேண்டியது ஒண்ணுதான். ஈசன் கொடுத்து இருக்கிற சாஸ்திரங்கள், வேதம் முதலியதெல்லாம் என்ன செய்ய சொல்லி இருக்குன்னு பாத்து அது மாதிரி நடந்துக்கணும். இப்படி செய்து கொண்டு நல்லவங்க கூடவே பழகிகிட்டு கெட்ட வாசனைகளை விட்டுடணும். இது ஆன்ம முன்னேற்றத்துக்கு உதவும் - இது உதவாது என்கிற விவேகத்தோட சமம், தமம் முதலானதை பழகணும். இப்படியாக சாதனை செஞ்சு, மாயையை நீக்கி, ஞானத்தை அடைகிறவங்களோட பிறப்பு ஒழியும். இது சர்வ நிச்சயம் என்கிறார் தாண்டவராய சுவாமிகள்.

பொரு திடங்கொண்ட பொன்னி புரக்கும்
அருதிடங்கொண்ட மருத வாண
நின்னது குற்றம் உளதோ நின்னி நினைந்து
எண்ணருங் கோடி இடர் பகை களைந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகழ்ந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியற் பெறுக்கள் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றமன்று வெயிலின் வைத்து
ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டு இருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர் குற்றமன்று கண்ணகன்று
தேன்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலில் புள்ளிவெயர் பொடிப்ப
வடிபெயர்த்திடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் இழற்றீங்கு அன்றே.

குண்ட்ஸா புரியுது இல்லே? சாப்பாடு ரெடியா இருக்கிறப்ப பசியோட இருக்கிறவன் சாப்பிடலைனா அது என்ன பண்ணும்? தாகமா இருக்கிறவன் இருக்கிற வாசனையான தண்ணியை குடிக்கலைனா தண்ணி என்ன பண்ணும்? குளிர்ச்சியான சோலை இருக்க வெயில்லே நான் காயறேன்னா சோலை என்ன பண்ணும்?


Post a Comment