85.
சடம தாகிய தியானமெய் யாகிய சர்வமுத் தியைநல்கும்
திடம தானதெப் படியெனி லவரவர் தியானமே பிறப்பாகும்
உடல மாசையாற் றியானிக்கிற் றியானித்த வுடல்களா குவர்மைந்தா
தொடர்ப வங்கெடச் சொரூபமே தியானிக்கிற் சொரூபமா குவர்மெய்யே
சடமது (பொய்) ஆகிய தியானம் மெய்யாகிய சர்வ முத்தியை நல்கும். திடம் (வலிமை) அது ஆனது எப்படியெனில் அவரவர் (மரண காலத்தில் உண்டாகும்) தியானமே பிறப்பாகும். உடலம் ஆசையால் தியானிக்கில் தியானித்த உடல்களாகுவர் மைந்தா, தொடர் பவங் கெட (பிரம) சொரூபமே தியானிக்கில் (பிரம) சொரூபமாகுவர் மெய்யே.
--
பொய்யாகிய தியானம் உண்மையான மோக்ஷத்தை தரக்கூடிய திடத்தை எப்படி உடைத்தாக இருக்கிறது என்று சந்தேகம் வந்தால்: மரண காலத்தில் அவரவர் எத்தகைய உருவத்தை தியானம் செய்கிறோமோ அந்த ஜன்மத்தையே அடைவர். ஒரு ஆசையுடன் ஒரு நாம ரூபத்தை உடையவற்றை தியானித்தால் அந்த நாம ரூபத்தை அடைவார்கள். நெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்த பிறவி ஒழிய வேண்டும் என்று நாம ரூபம் அற்ற சுத்த நிர்குணப்பொருளை தியானிப்பவன் அந்த பரப்பிரம்ம சொரூபமே ஆவான். இது சத்தியம்.
முன்னே விசாரம் நிச்சயம் வேணுமான்னு கேட்ட கேள்வி இப்ப திருப்பி வருது. பிரம்மத்தை தியானிப்பவங்களுக்கு முக்தி கிடைக்கும்ன்னா எதுக்கு விசாரணை? முதல்லே கிடைக்கிற பிரம்ம தியான அனுபவம் (பரோக்ஷமானது) மறைவானது. அது திடப்பட்டு விசாரமாகிதான் நிலையான வெளிப்படையான (அபரோக்ஷ) ஞானம் ஆகும். இதுவே மோக்ஷம்.
இது வரை சொன்னதை எல்லாம் வெச்சு பாத்தா நம்ம முயற்சியில சாதனை ஆரம்பிச்சு தீவிரமா பயிற்சி செய்து- ஒரு நிலையில நம்ம கட்டுப்பாட்டில இல்லாத விசாரம் ஒண்ணு துவங்கி படிப்படியா எல்லாம் புரிஞ்சு பிறகு எல்லாம் தெரிஞ்சு போகுது.
4 comments:
//எப்படியெனில் அவரவர் (மரண காலத்தில் உண்டாகும்) தியானமே பிறப்பாகும்//
திவா சார்
அந்திம ஸ்மரணம் என்பது விதிக்கப்பட்டு இருக்கா? அனைவருக்குமா? இல்லை யோகிகளுக்கு மட்டுமே-வா?
ஏன் கேட்கிறேன் என்றால் அந்திமம் என்றே அறியாத போது, ஸ்மரணம் எப்படி உண்டாகும்? மேலும் நல்ல நாள்-லயே பலருக்கும் ஸ்மரிக்க முடியாத போது, இறுதிக் கட்டத்தில் உபாதிகளாலோ, அவஸ்தைகளாலோ ஸ்மரிக்க முடியுமா? முடியாது போனால், அந்த ஜீவனின் கதி என்ன?
//முதல்லே கிடைக்கிற பிரம்ம தியான அனுபவம் (பரோக்ஷமானது) மறைவானது//
இது புரிகிறது!
//அது திடப்பட்டு விசாரமாகிதான் நிலையான வெளிப்படையான (அபரோக்ஷ) ஞானம் ஆகும். இதுவே மோக்ஷம்//
இது புரியலை!
நிலையான ஞானம் தான் மோட்சமா?
திடப்பட்ட பின்பு அபரோக்ஷ/ப்ரோக்ஷ பாகுபாடு ஒருவருக்கு இருக்குமா?
வாங்க கேஆர்எஸ்!
அந்திமத்தைல் எதைப்பத்தி நினைவு இருக்கோ அதுவா பிறப்பாங்க என்கிறது எல்லாருக்கும் பொதுதான். எப்போ போகப்போறோம்ன்னு முக்காலே மூணூவீசம் பேருக்கு தெரியாதுதான். இருந்தாலும் முன் காலத்தில் ஆஸ்பத்திரி கொண்டுபோய் ஊசியாக்குத்தி வென்டிலேட்டர்ல போட்டு பர்ஸ் காலி ஆகி வீட்டுக்கு கொண்டு வரலையே? வயசாச்சு அப்பப்ப நினைவு தப்புதுனா பக்கத்திலே உக்காந்து நாம பஜன் ஆரம்பொஇக்க வேண்டியதுதான். எப்படியாவது அந்த ஜீவனுக்கு அதை கேட்டு அதில் மனசு போகும்போது முடிவு வந்துடாதான்னு ஒரு ஆசைதான். ம்ம்ம் அதுக்கும் கொடுத்துதான் வைக்கணும். இல்லை அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்ன்னு ஒரு டீல் போட்டு பாக்கலாம்.
ஸ்மரிக்க முடியாட்டா அது மறு பிறவி எடுக்கும். வேற என்ன? கடைசி நினைப்பு நாயா இருந்தா நாய். மானா இருந்தா மான். புனரபி ஜனனம் புனரபி ....
2.
//நிலையான ஞானம் தான் மோட்சமா?//
ஆமாம். நிலையாக பிரம்ம நிலையிலேயே நிற்கிறதே மோட்சம்.
// திடப்பட்ட பின்பு அபரோக்ஷ/ப்ரோக்ஷ பாகுபாடு ஒருவருக்கு இருக்குமா?//
அவருக்கு....ம்ம்ம்ம் அதுக்கு இருக்காதுதான்.
நிறைய எ.பி. நேரமில்லை சரி பண்ண. யாரும் வி.எ விட்டுகிட்டு வர வாணாம்!
Post a Comment