Pages

Wednesday, July 8, 2009

(இது முன் பதிவின் தொடர்ச்சி)



50.
அதற்கு விடை
சீவ பேதங்க ளளவிலை மைந்தனே செய்கையு மளவில்லை
ஆவ வாமவ ரவரதி காரங்க ளறிந்துபக் குவநோக்கிப்
பூவ லர்ந்துபின் பலங்கள் காட் டுவனபோற் பூருவஞ் சித்தாந்தம்
காவல் வேதங்க ளிரண்டையும் வசனிக்குங் காண்டமூ வகையாலே

(கர்ம பேதத்தால்) சீவ பேதங்கள் அளவிலை மைந்தனே, செய்கையும் அளவில்லை. [ஆகையால்] ஆவவாம் (அவைகளால் ஆவன ஆகும்) அவரவர் அதிகாரங்கள் அறிந்து பக்குவம் (பருவத்தை) நோக்கிப் பூ அலர்ந்து பின் பழங்கள் காட்டுவன போல் பூருவம் (பூர்வம்) சித்தாந்தம் காவல் (காக்கும்) வேதங்கள் இரண்டையும் வசனிக்கும் (சொல்லும்), காண்டம் மூவகையாலே (கர்ம உபாசனை ஞான காண்டங்களாலே)

அந்தக்கரணங்கள் பலவாகியதால் சீவ பேதங்களும் பலவாகும். அந்தக்கரணங்களின் சுபம் அசுபம் சுபாசுபம் என்ற இந்த பேதங்களின் படி சீவன்களின் செய்கைகளும் அளவிலாதன. இவற்றால் சீவர்களிடையே அதிகாரி பேதம் உண்டு. இதனால் ஒரு மரத்தில் எப்படி முதலில் மொக்கு தோன்றி பின் பூவாகி காயாகி பழமாகுமோ அப்படி வேதமும் அதிகாரிகளுக்கு தக்கப்படி கர்மகாண்டம், உபாசனை காண்டம், ஞானகாண்டம் என்ற 3 வித காண்டங்களாலே பூர்வ பட்சம் சித்தாந்தம் ஆகியவற்றை கூறும்.

51.
ஆன பாவிக ளடைவன நரகங்க ளவசிய மானாலும்
தான் மந்திர விரதவோ மங்களாற் றவிருமென் பதுபொய்யோ
ஈன மாம்பல சன்மசஞ் சிதவினை யெத்தனை யானாலும்
ஞான மாங்கனல் சுடுமென்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே

ஆன பாவிகள் அடைவன நரகங்கள் அவசியமானாலும், தான் [செய்யும்] மந்திர விரத ஹோமங்களால் தவிரும் என்பது பொய்யோ? ஈனமாம் பல சன்ம சஞ்சித வினை எத்தனை ஆனாலும் ஞானமாம் கனல் சுடும் என்ற மறைமொழி நம்பினால் வீடுண்டே.

பாப கர்மங்களை செய்வோர் அடையும் நரகங்கள் நிச்சயம் உளதாயினும் தானம், விரதம், யக்ஞம் முதலிய பிராயச்சித்தங்களால் பாபம் ஒழிந்து போகும் என சாத்திரங்கள் சொல்வது பொய்யல்ல. அதுபோலவே அனேக ஜன்மங்களை உண்டாக்கக்கூடிய சஞ்சித கர்மங்கள் எவ்வளவு அதிகமாயினும் ஞானமாகிய தீ அவற்றை சுட்டு எரிக்கும் என்ற வேத வாக்கியத்தை நம்பினால் மோக்ஷமடைவது சத்தியமே.

கர்மத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் பிராயச்சித்தங்களால் நீக்கிக் கொள்ளலாம் என்றும் கர்ம காண்டம் சொல்வது மந்த அதிகாரிகளுக்கு. சஞ்சித கர்மத்தை ஞானாக்னி சுடும் என்று ஞான காண்டம் சொல்வது தீவிர அதிகாரிகளுக்கு. உபதேசங்கள் அதிகாரி பேதம் அறிந்து சொல்லப்பட வேண்டியன. வேதம் எல்லா அதிகாரிகளுக்கும் உபதேசம் சொல்வதால் ஞான காண்டத்தில் உள்ள சில கர்மகாண்டத்தில் சொல்லப்பட்டவைக்கு முரணாக தோன்றும். எது எங்கு யாருக்கு சொல்லப்பட்டது என அறிந்து உணர வேண்டும்.


No comments: