Pages

Monday, July 20, 2009

ஞானத்தாலேயே அஞ்ஞானம் அழிய வேண்டும்68.
ஞானத்தாலேயே அஞ்ஞானம் அழிய வேண்டுமென நன்றாய் அறிய வினவுதல்:

துளங்கு தர்பண மழுக்கறக் கைக்கொண்டு துலக்கினாற் போமன்றி
விளங்குபுத்தியா லுலகிலார் துலக்கினார் விமலதே சிகமூர்த்தி
களங்கமாகுஞ் ஞானமு மப்படிக் கருமத்தாற் கழுவாமல்
உளங்கு றித்தஞா னத்தினா லெப்படி யொழியுமீ தருள்வீரே

துளங்கு (விளங்குகின்ற) தர்பணம் (கண்ணாடி) அழுக்கு அறக் (அழுக்கு போக) கைக்கொண்டு துலக்கினாற் (துடைத்தால்) போம் அன்றி விளங்கு[கின்ற] புத்தியால் உலகில் யார் துலக்கினார்? விமல தேசிக மூர்த்தி! களங்கமாகும் ஞானமும் அப்படிக் கருமத்தால் கழுவாமல் உளம் குறித்த ஞானத்தினால் எப்படி ஒழியும்? ஈது அருள்வீரே.
--
என்ன ஐயா இப்படி சொல்லறீங்க? கண்ணாடியில இருக்கிற அழுக்க கையால துடைச்சாத்தானே சுத்தமாகும்? அப்படி இல்லாம புத்தியால யார் சுத்தம் செய்தாங்க? அதப் போல களங்கமா இருக்கிற அஞ்ஞானம் நல்ல செயல்களால நீங்காம அறிவால உணருகிற ஞானத்தால எப்படி நீங்குமோ?

இப்படி சீடன் கேட்க குரு சொல்லறார்.

கண்ணாடில இருக்கிற அழுக்கு உண்மையானது, அப்பா! அதனால கையால தேச்சு சுத்தம் பண்ணணும். இதுவே ஒரு கருப்பு துணி பக்கத்தில இருக்கிற ஸ்படிக கல்லில கருப்பா பாக்கிறோம் ன்னா, அது நிஜமா அந்த கல்லிலே இல்லை, பக்கத்துல இருக்கிற துணியோட வண்ணம் தான் அப்படி தோணுதுன்னு அறியணும்னா மனசு மட்டுமே போதுமே?
இது போலதான் சச்சிதானந்தத்திலே தோன்றுகிற அசத்து, சட, துக்கமா தெரிகிற இந்த பிரபஞ்சம் உண்மையிலே கிளிஞ்சலிலே வெள்ளியை பாக்கிறது போல மாயைதான். சத்தியமில்லை. அஞ்ஞானத்தை கர்மங்கள் பகைச்சுக்காது. மாறா உறவாக்கிக்கும். பரிசுத்த ஞானம் மட்டுமே கருமத்தையும் அஞ்ஞானத்தையும் சுட்டு எரிக்கிற அக்னியாகும்.

69.
விடை:
தர்ப்ப ணத்தினிற் களிம்புவாஸ் தவமலஞ் சகசமாதலின் மைந்தா
கற்ப ளிங்கினிற் கருநிறஞ் சகசமாக் கருத்ததன் றாரோபம்
தர்பணத்தினி லழுக்கறவேண்டினாற் சாதனத் தொழில் வேண்டும்
கற்ப ளிங்கினிலா ரோபமே கறுப்பென்று கண்டிட மனம்போதும்.

தர்ப்பணத்தினில் (கண்ணாடியில்) களிம்பு (அழுக்கு) வாஸ்தவ மலம் (உண்மையான அழுக்கு) சகசம் ஆதலின் [அது செயலால் நீங்கும்]. மைந்தா கற் பளிங்கினில் கரு நிறம் சகசமாக (உண்மையாக) கருத்தது அன்று. [அது] ஆரோபம். தர்பணத்தினில் அழுக்கற வேண்டினால் சாதனத் தொழில் வேண்டும். கற் பளிங்கினில் ஆரோபமே கறுப்பு என்று கண்டிட மனம் போதும்.
--
கண்ணாடியில் உள்ள அழுக்கு உண்மையானது. ஆனால் ஸ்படிகக் கல்லில் கருமை நிறம் தோன்றுவது உண்மையல்ல, அது ஆரோபம். (கற்பிக்கப்பட்டது) ஆகையால் கண்ணாடியில் உள்ள அழுக்கை கையால் தொழில் (செயல்) தேவை. ஸ்படிகக் கல்லில் தோன்றும் கருமை நிறம் பொய் என்று அறிய மனம் மட்டுமே போதும்.

70.
அஞ்ஞானம் அத்தியாசமானாலும் கருமத்தால் நீங்காதோ?
இங்கு மப்படி சச்சிதாநந்தத்தி லிடர்சடம் பொய்மூன்றும்
தங்கு மாயையின் கற்பித மன்றியே சகவாஸ் தவமன்றே
பங்க மாகுமஞ் ஞானத்தைக் கருமங்கள் பகைசெய்யா துறவாக்கும்
துங்க ஞானமே கருமவஞ் ஞானத்தைச் சுடுகின்ற நெருப்பாமே

இங்கும் அப்படி சச்சிதாநந்தத்தில் இடர் சடம் பொய் மூன்றும் தங்கு மாயையின் கற்பிதம் அன்றியே சக வாஸ்தவம் அன்றே. பங்கமாகும் அஞ்ஞானத்தைக் கருமங்கள் பகை செய்யாது உறவாக்கும். துங்க ஞானமே கரும அஞ்ஞானத்தைச் சுடுகின்ற நெருப்பாமே.
--
அது போல இந்த தாஷ்டாந்தத்திலும் (உபமேயத்திலும்- எதற்காக உதாரணம் சொன்னோமோ அது) சச்சிதானந்த சொரூபத்தில் தோன்றி இருக்கும் அசத்து, சடம், துக்கமாகிய பிரபஞ்சம் முதலானவை யாவும் கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல
மாயையால் கற்பிதம் செய்யப்பட்டதாக (ஆரோபமாக) தோன்றியவை அன்றி உண்மை அன்று. அஞ்ஞானத்தை கருமங்கள் பகைத்து ஒழிக்கா; உறவாக்கிக்கொள்ளும். பரிசுத்தமான ஞானமே கருமத்தையும் அஞ்ஞானத்தையும் சுட்டு எரிக்கக்கூடிய நெருப்பாகும்.
{கிளிஞ்சலில் வெள்ளி: தூரத்தில் இருந்து பாக்கும் போது வெள்ளி போல பளிச்சிடுகிறது. கிட்டே போய் நன்றாக பார்த்தபின் அது வெள்ளி இல்லை கிளிஞ்சல் என்று தெரிகிறது.}


ஒரு பொருளை தவறுதலா வெச்சுட்டு தேடுறதுதான் நமக்கு பழக்கமாச்சே!
ஒத்தர் கணினியிலே நிறைய படங்கள் சேத்து வெச்சு இருந்தார். ப்ளாக்ல போட ஆசை ஆசையா சேத்தது. ஒரு நாள் குறிப்பிட்ட ஆனை படத்தை தேடினா காணோம். எங்கே சேமிச்சோம்னு நினைவுக்கு வரலை. செர்ச்சில் ஜேபெக் பிஎம்பி ன்னு தேடித்தேடி பாத்து கிடைக்கலை. என்னதான் அழுது புரண்டாலும் அது கிடைக்குமா? உக்காந்து நிதானமா எப்ப அதை கடைசியா பாத்தோம் என்ன செய்தோம்ன்னு யோசனை செய்தா அட ஆமாம் அன்னிக்கு நண்பருக்கு காட்ட ப்ளாஷ் ட்ரைவிலே காப்பி செய்தோமேன்னு நினைவு வந்து அந்த ப்ளாஷ் டரைவை எடுத்து பாத்தாத்தான் அதிலே கிடைக்கும்.
அது போலத்தான் விசாரத்தால அஞ்ஞானமாகிய மறதியை நீக்கணும்; அறிவால பரிசுத்தமான ஆத்மாவை தரிசிக்கணும். இப்படி இல்லாம நூறு யுகங்கள் பெரிய பெரிய யாகங்கள் பண்ணாலும் அந்த ஞானம் கிடைக்காது.

71.
மனைக்குள் வைத்தபண் டங்களை மறந்தவன் வருடநூறழுதாலும்
நினைத்து ணர்ந்தபின் கிட்டுமப் படியிந்த நின்மல வான்மாவும்
அனர்த்த மானதன் மறதியைக் கெடுத்துத் தன்னறிவினாற் காணாமல்
கனத்த கர்மங்க ணூறுகஞ் செய்யினுங் காணுமோ காணாதே

மனைக்குள் (வீட்டுக்குள்) வைத்த பண்டங்களை மறந்தவன் நூறு வருடம் அழுதாலும், நினைத்து உணர்ந்த பின் [மட்டுமே] கிட்டும். அப்படி இந்த நின்மல ஆன்மாவும் அனர்த்தமான தன் மறதியைக் கெடுத்துத் (போக்கி) தன் அறிவினால் காணாமல் கனத்த (பெரிய) கர்மங்கள் நூறுகள் செய்யினும் காணுமோ? காணாதே.
--
வீட்டில் ஒருவன் ஒரு பொருளை எங்கோ வைத்து விட்டு அந்த இடத்தை மறந்து போனான். அதற்காக அவன் நூறு வருஷ காலம் விழுந்து புரண்டாலும் அழுதாலும் அப்பொருள் கிடைக்குமோ? ஒரு போதும் இல்லை. நிதானமாக யோசனை செய்து கடைசியில் 'ஓ, கூடத்தில் உள்ள மேற்கு பக்க அறையின் சிறிய மாடத்தில் வைத்தோம்" என்று அந்த இடத்தை நினைவுக்கு கொண்டு வந்தால்தான் அது கிடைக்கும்.
அது போல விசாரத்தால் அஞ்ஞானமாகிய மறதியை நீக்கி அறிவினால் பரிசுத்த ஆன்மாவை தரிசிப்பதாகிய ஞானத்தை பெற வேண்டும். அது இன்றி நூறு யுகங்கள் பிரபலமாகிய பெரிய கர்மங்களை செய்தாலும் அந்த ஞானம் கிடைக்காது.


Post a Comment