Pages

Friday, July 24, 2009

ஞானம் ரெண்டு வகை....



உலகிலே இருக்கிற அஞ்ஞானம் கருமத்துக்கு விரோதி இல்லை, அதோட உறவாகிவிடும் ன்னு சொன்னீங்க. அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் விரோதம் இருக்குன்னா சந்திரனில களங்கம் இருக்கிறாப் போல பரிசுத்த ஞானத்தோட அஞ்ஞானமும் ஒன்றாக பொருந்தி இருந்து எல்லா காரியங்களையும் செய்ய முடியுமா?

77.
உலக மானவஞ் ஞானமுங் கருமமு முறவென்ற வழி கூடும்
பலவு மானவஞ் ஞானமு ஞானமும் பகையென்ப துளதானால்
நிலவி லேமறுப் போலவஞ் ஞானமு நிமலஞானத்தோடே
குலவி நின்றிந்தச் சிருட்டிகள் செய்யவுங் கூடுமோ குருமூர்த்தி

உலகமான அஞ்ஞானமுங் கருமமும் உறவென்ற வழி கூடும் (ஒன்றுக்கு ஒன்று சாதகமாகும்). பலவுமான அஞ்ஞானமும் ஞானமும் பகை என்பது உளதானால் (உண்மையானால்) நிலவிலே மறுப்போல அஞ்ஞானமும் நிமல ஞானத்தோடே குலவி நின்று இந்த சக சிருட்டிகள் செய்யவும் கூடுமோ குருமூர்த்தி!

78.
குரு ஞானம் இரு விதம் என்கிறார்.

சொரூப ஞானமும் விருத்திஞா னமுமென்று சோதிஞானமு மிரண்டாம்
சொரூப ஞானமே விருத்தியின் ஞானமாய்த் தோன்றும்வே றிலைமைந்தா
சொரூப ஞானமஞ் ஞானசத்துருவன்று சுழுத்தியிற் கண்டாயே
சொரூப ஞானத்தின் மருவுமஞ் ஞானத்தைச் சுடும்விருத் தியின் ஞானம்.

சொரூப ஞானமும் விருத்தி ஞானமும் என்று சோதி ஞானமும் இரண்டாம்.
சொரூப ஞானமே விருத்தியின் ஞானமாய் தோன்றும், வேறு இல்லை மைந்தா. சொரூப ஞானம் அஞ்ஞான சத்துருவன்று [என] சுழுத்தியிற் (அஞ்ஞானத்தை அனுபவித்து) கண்டாயே. ஆனாலும் சொரூப ஞானத்தில் மருவும் (தோன்றும்) அஞ்ஞானத்தைச் சுடும் விருத்தியின் ஞானம். (ஆகவே அதுவே சத்துரு)
--
ஞானமானது சொரூப ஞானம் என்றும் விருத்தி ஞானம் ன்னு ரெண்டு வகைப்படும்.
ஆனாலும் சொரூப ஞானமே அப்புறமா விருத்தி ஞானமா மாறுது அன்றி அது வேற இல்லை. சொரூப ஞானம் அஞ்ஞானத்துக்கு விரோதி இல்லை ன்னு நித்திரையில் பாத்தோம் இல்லையா? சுழுத்தியில் சொரூப ஞானத்துடன் கலந்து அழியாம இருந்த அந்த அஞ்ஞானத்தை விருத்தி ஞானம் சுட்டு எரிச்சுடும்.

அதெப்படி ஸ்வாமி?
சுழுத்தியிலே சொரூப ஞானம் இருக்கு. (நாம் ன்னு ஒரு நினைப்பு- நான் நல்லா தூங்கினேன்) தூங்கி எழுந்தா முன்னே இருந்த அதே அஞ்ஞானத்தோடதான் இருக்கோம். இப்படி அஞ்ஞானத்தை நீக்க முடியாத சொரூப ஞானம் திடீர்ன்னு எப்படி விருத்தி ஞானமாகி அஞ்ஞானத்தை சுட்டு எரிக்கும்?

சொரூப ஞானம் என்பது சாதாரண /சாமான்ய ஞானம். விருத்தி ஞானம் என்பது விசேஷ ஞானம்.

சுழுத்தியில் உள்ள சொரூப ஞானம் என்பது ஆன்ம பிரகாசம் மட்டுமே. அந்தக்கரண விருத்தி (செயல்பாடு) சுழுத்தியில் இல்லை. சொரூப ஞானம் ஒரு கொள்ளிக்கட்டை போல. அது தன் வரை பிரகாசமாக இருக்கும். ஆனால் அறையை அதனால பிரகாசமாக்க முடியாது. ஆனால் அதை விசிறிவிட்டு சுடர் உண்டாகச்செய்தா, அப்போது அது இருளை நீக்கும். அதுபோல சொரூப ஞானம் அஞ்ஞானத்தை அழிக்கக் கூடியது இல்லை. அதுவே அந்தக்கரண விருத்தி கூட சேர்ந்து விருத்தி ஞானமாக ஆன பின்னால அச்சக்தியை பெறுது.

சூரிய கிரணங்கள் சிதறி இருப்பதால் எதையும் எரிக்க சக்தி இல்லாம இருக்கு. அதே கிரணங்கள் சூரிய காந்த கல்லிலே (lens) பிரவேசித்து வெளி வந்து ஓரிடமாக குவியும்போது அந்த வல்லமை வருது. அதுபோல சமாதியிலே அந்தக்கரண விருத்தியுடன் சொரூப ஞானம் சம்பந்தப்பட்டால் விருத்தி ஞானமாகி அஞ்ஞானத்தை சுட்டு எரிக்கிறது.


8 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம் அப்டேட் ஆகலையே இது ஏன்???? வலைப்பக்கம் வந்தால் மட்டும் தெரியுது!

சூரியன் உதாரணம் சொன்னதாலே புரிஞ்சுக்க முடியுது. நன்னிங்கோ!

கிருஷ்ண மூர்த்தி S said...

/சொரூப ஞானம் என்பது சாதாரண /சாமான்ய ஞானம். விருத்தி ஞானம் என்பது விசேஷ ஞானம்./

அடக் கடவுளே! இதுல கூட த்வைதமா?

திவாண்ணா said...

@ கீதாக்கா
உங்க பிரண்டை ப்ளாகர் வேதளத்தோட வேலையா இருக்கும்.
நன்னிங்கோ!

திவாண்ணா said...

@ கி அண்ணா
என்ன செய்யறது? அத்வைத நிலை வருமுன்னே பலதையும் அப்புறம் ரெட்டையையும் கடந்துதான் போக வேண்டி இருக்கு!

கபீரன்பன் said...

//சொரூப ஞானம் ஒரு கொள்ளிக்கட்டை போல. அது தன் வரை பிரகாசமாக இருக்கும். ஆனால் அறையை அதனால பிரகாசமாக்க முடியாது. ஆனால் அதை விசிறிவிட்டு சுடர் உண்டாகச்செய்தா, அப்போது அது இருளை நீக்கும் //

எதுவும் உதாரணம் இல்லைன்னா தலைக்குள்ள போக மாட்டேங்குது :)

ரொம்ப நல்ல உதாரணம். நன்றி

R.DEVARAJAN said...

ஸஹஜ அநுபூதி என்பது வ்ருத்தி ரூப ஞானமா ?

தேவ்

திவாண்ணா said...

வருகைக்கு நன்றி கபீரன்பரே! சாத்திரங்கள்லே அனேகமா எல்லாத்தையும் உதாரணங்களோடதான் சொல்லி இருக்காங்க! எல்லாருக்குமே அதுதானே சுலபம்?

திவாண்ணா said...

வாங்க தேவ் சார்!
சகஜ நிஷ்டை கடைசி நிலை. அங்கே பிணம் சுடு தடியும் அழிஞ்சு போயிடும்! அந்தக்கரணம் சுத்தமா போயிடும். அதனால அதோட விருத்தி பத்தி கேள்வி இல்லை.
இது 88 ஆவது செய்யுள் பதிவிலே வரும்.