எப்பவும் நல்ல குரு சீடனோட தராதரத்தை அறிஞ்சு கொண்டே செய்ய வேண்டியதை சொல்லுவார்; உபதேசம் செய்வார். ஒத்தரால முடியாததை செய் ன்னு சொல்கிறதுல என்ன பிரயோசனம்?
சீடனறி வெவ்வளவோ வவ்வளவுஞ் சிந்தித்துக்
கூறுமுப தேசங்கள் கூறுவா-னீடுபுக
மூக்கமுடைச் சீராம னெண்ணுதற்கா யன்றெய்தான்
காக்கைக்கு தக்க கணை
(ஞான விளக்கம்- வள்ளலார்)
சீடன் அறிவு எவ்வளவோ அவ்வளவும் சிந்தித்துக் கூறும் உப தேசங்கள் கூறுவான் - ஈடு புகம் ஊக்கமுடைச் சீராமன் எண்ணுதற்கா அன்று எய்தான் காக்கைக்கு தக்க கணை.
(இந்த காக்கைக்கு தக்க கணை பத்தி பின்னூட்டம் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன்! :-)மந்த அதிகாரிகளுக்கே சரியை கிரியை எல்லாம் சொல்லி இருக்காங்க. அதாவது முக்காலே மூணு வீசமான நமக்குத்தான். அதனால ஞானத்தை உபதேசிக்கிற இடத்திலே இதை எல்லாம் தாழ்த்தியேதான் சொல்லி இருக்கும்.
தலையெலாந் தெய்வமென்னுந் தன்னை மற்றேனை
யிடையெல்லாம் வேறிருக்கு மென்னுங்-கடையெல்லா
மரத்தைபா டாணத்தை மண்ணையிருஞ் செம்பைக்
கருத்துருகத் தெய்வமெனுங் காண்
உத்தமங்க ளெல்லா முணர்வையே தாம்பேணும்
மத்திமங்க ளேபதுமை யைவாழ்த்துஞ்-சுத்த
அதமங்க ளெல்லாந்தன் னாகத்தைப் போற்று
நதியோடை கூபமென நாடு
தத்துவத்துக்கப்பாலே தன்னை தரிசித்து
நித்த பரி பூரணத்தினில்லாமல்-சுத்த
பனிமாயை யாற்செய் பதுமையினைத் தேடு
நனிமா னிடமிருக நாடு
(ஞான விளக்கம்- வள்ளலார்)
(தமிழ் அறிஞர்கள் யாரென்னும் இந்த் அபாடல்களுக்கு இன்னும் விளக்கம் தரலாம்!)
இதனால கிரியை, சரியை, விக்கிரஹ ஆராதனை எல்லாம் தேவை இல்லைன்னு இல்லை. அவரவருக்கு தகுந்தபடி...
மொட்டை மாடிக்கு போய்விட்டவனுக்கு மேலே போக படிகள் வேணாம். கீழ் மாடிகளிலே இருக்கிறவனுக்கு அது நிச்சயம் வேணும்தான்!
--
நிறைய அறிஞர்களை பாக்கலாம். பல நூல்களை எல்லாம் கரைச்சு குடிச்சு இருப்பாங்க. ஞான சம்பந்தமான நூல்களைக்கூடத்தான். அது குறிச்சு மணிக்கணக்கிலே விவாதம் செய்ய தயாரா இருப்பாங்க. சமயத்திலே சூடு பறக்கற விவாதங்கள் கூட நடக்கும். (பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான் ஞாபகத்துக்கு வரார்!) சரி அவ்வளொ தெரிஞ்சு இருக்கு இல்லே? அப்பக்கூட ஞான வழியிலே போகாம கர்ம படுகுழியிலே ஏன் விழறாங்க?
இந்த தியரிக்கும் நடைமுறைக்கும் ரொம்ப தூரம் என்கிற விஷயம் அடிக்கடி பாக்கலாம் வாழ்க்கையிலே! அன்பின் அவசியத்தைப்பத்தி மணிக்கணக்கிலே பேசிட்டு மத்தவங்க மேலே எரிஞ்சு விழுகிறவர்களை பாத்துதானே இருக்கோம்!
52.
அறிஞர்களும் ஆனந்தம் தரும் அத்வைத ஞானத்தை விட்டு கர்மம் செய்து துன்புறுதல் ஏன்?
என்ம னந்திருக்கோவிலாத் தினங்குடி யிருந்தருள் குருமூர்த்தி
சென்ம சஞ்சித வினைகள்வே ரறுத்திடும் தேவரீர் மெஞ்ஞானம்
தன்ம யந்தரு மகிமையை விபுதராஞ் சமர்த்தரு மறியாமல்
கன்ம மாங்குழி யினில்விழுந் தழிகின்ற காரணமுரையீரே
என் மனந்திருக்கோவிலாத் தினம் குடி இருந்து அருள் குருமூர்த்தி, சென்ம சஞ்சித வினைகள் வேரறுத்திடும் தேவரீர், மெஞ்ஞானம் [ஆனது] தன்மயம் (மோக்ஷம்) தரும் மகிமையை விபுதராம் சமர்த்தரும் (கற்று தெரிந்து கொண்ட பெரும் அறிஞர்களும்) அறியாமல் (அதை அடைந்து உய்யாமல்) கன்மமாம் (கர்மமாம்) [படு] குழியினில் விழுந்து அழிகின்ற காரணம் உரையீரே. (கூறுங்கள்)
4 comments:
/"காக்கைக்கு தக்க கணை"/
யப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே:-((
//இந்த காக்கைக்கு தக்க கணை பத்தி பின்னூட்டம் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன்! :-) //
Full form ல கோதாவுக்குத் தயாராத் தான் வந்திருக்கீங்க போல!
..எல்லாம் அந்த ஆன்மீக அன்பு படுத்தும் பாடுதானோ?
:-))
//Full form ல கோதாவுக்குத் தயாராத் தான் வந்திருக்கீங்க போல!..எல்லாம் அந்த ஆன்மீக அன்பு படுத்தும் பாடுதானோ?
:-)) //
இந்த பதிவை எழுதி ஒரு வாரம் ஆச்சு! அதனால் இது அன்பு பதிவால பாதிக்கப்பட்டது இல்லை!
:-))
எழுதறப்போ ராமன் செஞ்சது கொஞ்சம் டூ மச் இல்லையோன்னு தோணித்து. ஒரு காக்காய்க்காக பிரம்மாஸ்திரத்தை போடுவாங்களா? இருந்தாலும் வள்ளலார் ஏன் இதை சரியான - appropriate - என்கிறதுக்கு உதாரணமா சொல்லி இருக்கார்?
கொஞ்சம் வேளுக்குடி கிருஷ்ணன் மாதிரி உபன்யாசம் செய்பவர்களிடம் கேட்டால் சுவாரசியமாகக் கதையோடு விஷயமும் கிடைக்குமே!
பரம்பொருளாக இருப்பவன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை நம்முடைய சின்ன புத்தியில் கண்டுகொள்ள முடியுமோ, விமரிசிக்க முடியுமோ என்பது ஒரு பதில்! Mere Escapism.
இன்னொரு பதில் உபந்யாசகர்கள் கொஞ்சம் கூட்டிக் குறைத்து, சுவாரசியத்திற்காகச் சொல்வார்களே, அப்படி பார்க்கையில், ராமன் தன்னிடம் அபராதப் பட்டவர்களிடம் கூடக் கோபப் படவில்லை, பிராட்டியிடத்தில் அபசாரப் பட்டானே என்கிற சீற்றம், மறக்கருணையாக அங்கே பொங்குகிறது! சீற்றம் பொங்கும்போது, பிரம்மாஸ்திரம் என்ன, பாசுபதாஸ்திரம் என்ன?
காக்கைக்குத் தக்க கணை என்று வள்ளலார் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ அது எனக்குத் தெரியாது! ஆனால், ராமனுடைய கணைக்குத் தப்ப முடியாமல் இந்திர லோகம், கைலாசம், சத்தியலோகம் இப்படி எல்லா இடங்களிலும் ஓடித் தப்ப முயன்ற பொது, அங்கே எவரும் அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை, களைத்துப் போய், ராமன் காலடியிலேயே வந்து விழுகிறான். அப்போது கூட, தலை வேறு பக்கம், வால்பகுதி ராமனின் காலில் இருப்பதைக் கண்டு, சீதை, இரக்கம் கொண்டு, .தலை ராமனுடைய திருவடியில் படுமாப்போல, உதவுகிறாள். அங்கே ஒரு விசித்திரமான சரணாகதி கைகூடுகிறது!
"பத்தி முதலாமற்றிற்பதிஎனக்குக் கூடாமல் எத்திசையும் உழன்றோடி இளைத்து விழும் காகம் போல்" என்று சுவாமி தேசிகனுடைய அடைக்கலப் பத்தில் முதல் பாட்டு சொல்லும் கருத்தே உகப்பாயிருக்கிறது, உங்களுக்கு எப்படி வசதியோ:-)
விசித்திரமான சரணாகதி என்று சொல்லும் போதே, 'காக்கைக்குத் தக்க கணை' என்ற வார்த்தைக்குப் பொருத்தமான அர்த்தமும் வந்து விடுகிறது!
சரணாகதி என்று வரும் போதே அதற்கு சில அடிப்படைகள் இருக்கின்றன. முக்கியமாக,ஆகிஞ்சன்யம், அனன்ய கதித்வம் இந்த இரண்டும் மிக முக்கியமான தேவைகள்.
என்செயலாவதொன்றுமில்லை என்பதை உள்ளபடிக்கே உணர்ந்து, உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு உபாயம் இல்லை என்கிற இயலாமை.
இங்கே காக்கைக்கு வேறுவழி தேடிப்போயும் கிடைக்கவில்லை என்பதால் ஆகிஞ்சன்யம் கூடிற்று. ஆனால், அனன்ய கதித்வம் --உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லேன் என்கிற உணர்வும் அறிவும் இல்லாமல் போயிற்று. அதனால் தான்,ராமன் காலடியில் இளைத்து விழுந்தபோது கூட ஏடாகூடமாக விழுந்தது.
இந்த ஏடாகூடத்திற்கே, பிரம்மாஸ்திரம் மட்டுமல்ல, எல்லா அஸ்திரங்களையும் வீசியிருக்கலாம் என்று வள்ளலாரும் கருதினார் போல!
காக்கையின் நல்ல காலம், பிராட்டி உடனிருந்தது! அவள் கருணையாலே, பெரும் பிழை செய்தும் தப்பிக்க முடிந்தது.
வாலிவதைப்படலத்தில் கம்பன் அனுபவித்துச் சொல்வதையும் சேர்த்துப் பார்த்தால், காக்கைக்குத் தக்க கணை டூ மச்சா, இல்லையா என்பது புரியுமே அண்ணா!
இதற்கு நீங்கள் எதிர்பார்த்த பின்னூட்டம் வேறு, இடம் வேறு அல்லவா?
அதனால் என்ன, அதற்குள் நானும் கொஞ்சம் பிராட்டியோடு சேர்ந்திருக்கும் ராமனைக் கொஞ்சம் சேவித்துக் கொள்கிறேனே!
Post a Comment