இதற்காக உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவை என்று ஒன்றுமில்லை. உணர்வுகள் கால தேச வர்த்தமானத்துக்கு பொருத்தமாக இல்லாமல்
இருப்பதுதான் பிரச்சினை. உணர்வுகள் தான் நம்மை சில கடினமான காலகட்டங்களில் வழி நடத்துகின்றன. இந்த கால கட்டங்களில் மூளையால் ஆகக்கூடியது ஏதுமில்லை. அது வெறும் பாசிபிலிடீஸ் - சாத்தியக்கூறுகளைத்தான்
காட்டும். என்ன செய்ய வேண்டும் என்பது நம் கலாசாரத்தாலும் மனதாலும்தான்
நிர்ணயிக்கப்படுகிறது.
உணர்வுதான் சில முக்கிய விஷயங்களை புத்திக்கு கொடுக்காமல்
தானே முடிவெடுக்க தூண்டும். ஆபத்து, ஒரு துன்பமான இழப்பு, பல
தடைகளை தாண்டி ஒரு இலக்கை அடைய செய்யும் முயற்சி, ஒருவருடன்
இருக்கக்கூடிய உறவு, குடும்பத்தை நடத்திப்போவது…. இது
போன்ற சில விஷயங்களில் மனசோ அல்லது உள்ளுணர்வு என்கிற இன்ஸ்டிங்ட்டோ முடிவு எடுக்கணும்.
உணர்வுகள் இல்லாம பல அரிய காரியங்களை செய்ய முடியாது. புத்தி ஒரு காரியத்தை முடியாது, விட்டுடலாம்ன்னு
சொல்கிறப்போ உணர்வுகளே ஒருவரைத் தூண்டி அவற்றை சாதிக்க வைக்கும்! ஒரு அநியாயம் கண் முன்னே நடக்கிறப்ப அதை தடுக்க முனைவது உணர்ச்சியால்
தூண்டப்பட்டே. ஒரு விபத்து நடந்தால் இருக்கிற வேலையை ஒத்திப்போட்டு உடனடியாக
உதவப்போவது உணர்ச்சியால் தூண்டப்பட்டுதான். உதவப்போகிறாங்களா
இல்லை எனக்கென்ன ந்னு தான் பாட்டுக்கு தன் வழியில் போகிறாங்களா என்பதுதான் ஒரு வட்டார
மக்களின் கலாசாரத்தை காட்டுது.
நாமோ சாதாரணமாக புத்திசாலித்தனத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறோம். ஆனா எவ்வளவு சமூக கட்டுப்பாடுகள் இருந்தாலும் திருப்பித்திருப்பி
உணர்ச்சிதான் ஜெயிக்குது!
ஆழமாகவும் பலமாகவும் இருக்கும் உணர்ச்சிகள் இந்த புத்தியை
தாண்டிச்செல்கின்றன. வழக்கமா புத்தியும் உணர்வு மயமான மனதும் ஒன்றை ஒன்று அனுசரிச்சுப்போகின்றன. புத்தியின் செயல்களை உணர்வுகள் ஆராய்ஞ்சு, அதற்கு விமர்சனமும் தருகின்றன. “உன்னால இந்த ரௌடியோட சண்டை போட
முடியாதுதான்; இருந்தாலும் இதைக்கூட தட்டி கேக்க துணிச்சல் இல்லைன்னா எதுக்குடா
வாழ்கை?” ந்னு கடிஞ்சுக்கும்!
புத்தி உணர்வுகளை செம்மைப்படுத்துது. சில சமயம் கூடவே கூடாது என்று வீட்டோ கூட போட்டுவிடும்! “இவன் கம்பத்துல மின்சாரம் தாக்கி செயலிழந்து நிக்கறான். முட்டாள்தனமா இவனை நீ தொட்டா நீயும் மின்சாரத்தால தாக்கப்படுவே. ரெண்டு பேரும் பாதிக்கப்படுவீங்க! வேற வழியை பாரு!” என்கிற
ரீதியில இவை அமையும் இல்லையா? இவற்றுக்கான நரம்புப்பின்னல்கள் தனித்தனியாக, அதே சமயம் பிணைந்தும் இருக்கின்றன!
எல்லா உணர்ச்சிகளும் கெட்டவை ந்னு இல்லே. சோகத்துக்குக் கூட ஒரு வேலை இருக்கு. நெருங்கிய ஒத்தர் இறந்து போயிட்டார்ன்னா துக்கம் மனசை வேற
எதையும் கவனிக்காம செஞ்சு இழப்பு மேலே கவனத்தை கொண்டு வந்து இனி எப்படி இவர் இல்லாம
இருப்போம்ன்னு வழி தேட வைக்கும். இந்த மாதிரி சோகம் இருக்கலாமே ஒழிய பெரிய டிப்ரஷனுக்கே போயிடக்
கூடாது. அழுகை உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கலாம். துக்கம் மேலே மேலே வளர்ந்துவிடாம தடுக்கும். ஆனால் அதுவே துக்கத்தை மேலும் வளரச்செய்யவும் செய்யலாம்.
சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?
No comments:
Post a Comment