Pages

Wednesday, July 23, 2014

உள்ளதை உள்ளபடி பார்.... Cognitive restructuring


இதுல நாம் கவனிக்க வேண்டியது உணர்வுகளை பெரிய அளவில கட்டுப்படுத்த முடியும் என்கிறது.
உணர்வுகள் ஹைஜாக் ஆனால் ஒழிய அதை டக்குன்னு மாத்திட முடியும்/ மாற முடியும்.. இந்த நிகழ்வை கற்பனை செய்து பாருங்க!

க்ரூப் மெய்ல்ல ஒரு மெய்ல் வருது. அதுல ஒத்தர் எழுதி இருக்கிறது பிடிக்கலை! பயங்கர கோபம்! இதை சம்பந்தப்பட்ட இன்னொருவருக்கு அனுப்ப நினைச்சு ரிப்ளைன்னு தட்டி அந்த ஒத்தரை திட்டு எழுதறோம்! அனுப்பின பிறகு பாத்தா அது க்ரூபுக்குத்தான் போயிருக்கு! திட்டப்பட்ட நபரும் அதை பார்ப்பார்!

இப்ப கோபம் காணாம போயிடுத்து! இப்ப இருப்பது? பயம்? வெட்கம்!
இதுவாவது பரவாயில்லை! முகம் தெரியாத நபர்களா இருக்கலாம்!
இதே மாதிரி ஆபீஸ் பாஸை திட்டி எழுதின மெய்ல் பாஸுக்கே போயிட்டா?
இன்னொரு பலமான உணர்வால ஒரு உணர்வு மாறலாம்! 
பஸ்ஸில் ஒரே கூட்டம் முண்டி அடித்து எப்படியோ ஏறிவிடுகிறோம். பஸ் வழக்கம் போல குலுங்கிக்கிட்டே வேகமா போகுது. பின்னாலிருந்து எதோ சுருக்குன்னு குத்துது! திரும்பி பார்க்கக்கூட முடியாதபடி கூட்டம். இன்னும் கொஞ்ச நேரத்தில திருப்பி ஒரு குத்து! நமக்கு கோபம் ஆரம்பிச்சு அதிகமாகிக்கிட்டே போகுது! பஸ் வேகமா பல மேடு பள்ளங்களில ஏறி இறங்க பல தரம் குத்து வாங்கறோம். இப்ப பஸ் நிற்க, நிறுத்தத்துல  பலர் இறங்கிட்டாங்க. படு கோபமா யார் நம்மை குத்தினதுன்னு திரும்பிப்பார்க்கிறோம்! பார்வை இல்லாத வயசான அதிக உயரமில்லாத ஒரு அம்மா கையில் ஒரு பையோட தடுமாறிகிட்டு நிக்கிறாங்க. அவங்க பை கைப்பிடிதான் குத்திச்சு! 

நம் கோபமெல்லாம் புஸ்ஸுன்னு காணாமப்போய் ஐயோ பாவம் ந்னு வருத்தம் தோணுது! எப்படி ஒரு உணர்ச்சி திடீர்ன்னு காணாமப்போச்சு? ஒரு புத்தி பூர்வமான புரிதல் வந்ததால.
ஆக உணர்வுகள் புத்தியால மாற்றப்பட முடியும்.
 
இது Cognitive restructuring..... இதை பார்வை மறுகட்டுமானம்ன்னு சொல்லலாமா? வேணாம். ஆங்கிலத்துல அப்படி இருக்கு என்கிறதுக்காக ஏன் அப்படிசொல்லணும்? நாம் புதிய பார்வை ந்னு சொல்லிக்கலாம்.
இதுல முதல் படி உள்ளதை உள்ளபடி பார்க்கிறது.

சாதாரணமா நாம் பார்க்கிறதை அப்படியே உள்வாங்காமல் நம் கற்பனை, முன் சார்பு எல்லாம் வெச்சுக்கொண்டு வண்ணம் பூசித்தான் பார்க்கிறோம். இதை முதல்ல நிறுத்தணும்.
அதுக்கு நேரம் ஒதுக்கி  நடந்த விஷயங்களை அசை போடணும். நமக்கு கோபத்தை உண்டாக்கிய அல்லது பிரச்சினை கொடுத்த விஷயத்தை அதாவது உணர்ச்சி தாக்குதலை நினைவுக்கு கொண்டு வரணும். என்ன நடந்தது? அப்ப நாம் என்ன உணர்ந்தோம்? என்ன நினைச்சோம்? எப்படி நடந்துகிட்டோம்?

நோட் புக்ல டேபுலர் காலம் போட்டு எழுதணும். பேப்பர் பேனா ரெடியா? ஒரு டேபிள் ... மேசை இல்லைங்க, பட்டியல்.... போடுங்க.

முதல் ரோ. உணர்ச்சியை தூண்டிய விஷயம் என்ன? நாம் ஒரு வேலையை முடித்துக் கொண்டு போய் பாஸ் கிட்ட காட்டினோம். நாம நல்ல செஞ்சதாத்தான் நினைச்சோம். ஆனா அவர் அதை பாத்துட்டு மோசமா இருக்குன்னு சொல்லிட்டார்.

அடுத்து எப்படி உணர்ந்தோம்? கோபம் வந்ததா? சோர்வா? த்ருப்தி இன்மையா?

அடுத்து முதல் எதிர்வினை. உதாரணமா….
பாஸ் கிறுக்கன்; சாடிஸ்ட்!
பாஸ்ஸுக்கு எவ்வளோ செஞ்சாலும் திருப்தி வராது.
நான் என்ன முயற்சி செஞ்சும் அது சரியா அமையலை.
எனக்கு இந்த வேலை ஒத்துவராது; பேசாம வேலைய விட்டுடலாம்.

அடுத்து வரது சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள். உதாரணமா….
நான் இன்னும் கொஞ்சம் உழைச்சு இருக்கணும்.
இதுக்கு ஆதாரங்களை திரட்டினதுல எனக்கே திருப்தி இல்லை.
இந்த வேலையை செய்யும் போது நல்ல தலைவலி இருந்தது; சரியா கவனத்தோட  செய்யலை போலிருக்கு.

இதுக்கு எதிராகவும் சில எண்ணங்கள் வரலாம். உதாரணமா….
ஏற்கெனெவே வேலைக்கு கொடுத்த நேரம் குறைவு. இன்னும் என்ன உழைச்சு இருக்க முடியும்?
எனக்கு திருப்தி இல்லைனாலும் ஆதாரங்கள் போதுமானதாத்தான் இருந்தது.
ஒரு வேலையை குறை சொன்னாங்க என்கிறதுக்காக வேலையையே விட முடியுமா என்ன? அடுத்து வரதை நல்லா செய்வேன்.

இதை எல்லாத்தையும் எழுதின பிறகு அதை படிச்சுட்டு பாரபட்சமில்லாம அடுத்து உங்க முடிவுகளை எழுதுங்க. நடந்தது என்ன? அதற்கு உங்க எதிர்வினை பொருத்தமானதா?
இதைப்பத்தி மிகவும் நம்பிக்கையான ஒத்தர்கிட்டே விவாதிக்கவும் செய்யலாம். அவசியம்ன்னு இல்லை; ஆனா தப்பில்லை. அந்த நபர் ரொம்பவே நம்பிக்கை வைக்கக்கூடியவரா இருக்கணும்; இது முக்கியம்.
   
அடுத்து  பாரபட்சமில்லாம முத்தாய்ப்பா உங்க முடிவை எழுதுங்க. உதாரணமா….
இந்த முறை சொதப்பிட்டேன்; அடுத்த முறை நல்லா செய்வேன்.
இதே வேலையை வேற கோணத்திலேந்து அணுகி செய்து பார்க்கணும்.
   
முன்னே செய்த வேலைகளுக்கு எல்லாம் நிறையவே பாராட்டுகள் வாங்கி இருக்கேன். திரும்ப இன்னமும் வாங்க முடியும்.
   
அடுத்து வரது மூட் . இந்த ஆராய்ச்சி மூலமா நீங்க இப்ப வித்தியாசமா உணருகிறீங்களா? தப்பான வழில பண்ணிட்டோம்; மோசமில்லை, இப்படி செய்தால் இதை சரி செய்துடலாம் ந்னு தோணலாம். சில நேரம் செய்ததை ஒண்ணும் சரி செய்ய முடியாது. அடுத்த முறை இதை இப்படி செய்யணும்ன்னு தோணலாம். எப்படி இருந்தாலும் இப்ப வித்தியாசமா மூட் இருக்கும். அதை பதிவு செய்யுங்க.
   
கடைசியா மேலே என்ன செய்யப்போகிறோம்ன்னு எழுதுங்க. உதாரணமா…. நாளைக்கு பாஸ்கிட்ட இதை வேற விதமா இப்படி செய்திருக்கலாமான்னு விவாதிக்கணும்.
என்ன இருந்தாலும் அவர் கோவிச்சுக்கிட்டது ரொம்பவே அதிகம்; எனக்கு நிறைய வருத்தம் உண்டாச்சுன்னு அவருக்கு தெரிவிக்கணும்.
இந்த ரீதியில இருக்கலாம்.
  
இதயே செய்து கொண்டு வர நம்மோட புரிதல் அதிகமாகும். அப்படி அதிகமாக ஆக நாம் செய்யும் எதிர்வினைகள் இன்னும் அர்த்தம் உள்ளவையாக இருக்கும். மொத்தத்தில் நாம் முன்னேறுவோம்.

  
 
Post a Comment