Pages

Thursday, July 31, 2014

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 1

 
நம்மில் பலருக்கும் பிரச்சினை இந்த கோபம்தான். அதனால் இந்த காக்னிடிவ் ரீஸ்ட்ரக்சரிங் என்கிற புதிய பார்வைபடி கோபத்தை பார்க்கலாமா?
கோபம் கெட்டது, இருக்கக்கூடாதுன்னு சொன்னாலும் அது ஓரளவுக்கு பயன்படவும் செய்யுது. ரொம்ப சாதுவா இருக்கிறவங்களுக்கு இது காலம் இல்லைன்னு சொல்லக்கேட்டு இருக்கீங்கதானே? சாதுவா இருக்கிறது தனக்கு; மத்தவங்களுக்காக இல்லை. போகட்டும்.
கோபத்தில இரண்டு வகை இருப்பதா சிலர் சொல்கிறாங்க. இவங்க தியரியை பார்ப்போம்.
கொஞ்சம் 'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம்.
கொஞ்சம் 'நல்ல' கோபம் எது? இது எரிச்சலும், லேசான கோபமும். இவை தேவையான போது நம்முடைய உரிமையை நிலைநாட்ட உதவும்.
கெட்ட கோபம் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கும் மிகலேசா எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயத்துக்கும் அளவு மீறின எதிர்வினையை உருவாக்குது. மேலும் நம்முள்ளேயே கோபத்தை அடைச்சு வைக்கிறதும் கெட்ட கோபம்தான்! அதை சம்பந்தமில்லாதவர்களிடம் வெளிப்படுத்துவதும் கெட்ட கோபம்தான்.
எல்லா உணர்சிகளுமே தூண்டப்படுவது ஏதோ ஒரு செட் அப்பில்தான். அதாவது ஒரு சூழ்நிலை. நம்முடைய சொந்த விதிகளை மீறுவது; சொல்லாலோ செயலாலோ நம்முடைய சுய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பது; அல்லது நாம் நம் இலைக்கை அடைவதற்கு தடையாக இருப்பது.
இந்த கெட்ட கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?
 1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்கிற வளையாத பிடிவாதம்.
 2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது.
 3. என் சூழ்நிலை இப்படித்தான் இருக்கணும்; எனக்கு என் குறிக்கோள்களுக்கும் நடுவே யாரும் வரக்கூடாது.
 4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க.
 5. நான் சொல்வது செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான்!
 6. மத்தவங்களோட கருத்துக்கோ பார்வைக்கோ இங்கே இடமில்லை.
இதை எல்லாம் நமக்கு இருக்கான்னு பாரபட்சமில்லாம பார்த்தால் ஒழிய நாம் கெட்ட கோபத்தை தவிர்க்க முடியாது.
இந்த கெட்ட கோபத்தால பின் வருவதெல்லாம் நடக்கும்!
 1. நேரடியா சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது
 2. மறைமுகமாக சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது - உதாரணமா அவரோட வேலையை இன்னும் கடினமாக ஆக்குவது.
 3. உங்கள் கோபத்தை மூன்றாம் நபர்/ மிருகம்/ பொருள் - இடம் காட்டுவது.
 4. பழிக்குபழி என்று திட்டமிடுவது
 5. கருவிக்கொண்டு இருப்பது
 6. மற்றவர்களை நமக்கு வேண்டாதவருக்கு எதிராக திருப்பிவிடுவது.
 7. உம்மணாம் மூஞ்சியாக இருப்பது
 8. நமக்கு எதிராக செயல் பட அவருக்கு உள்நோக்கம் இருக்கிறதா என்று ஆராய்வது
 9. எப்போது அவர் மீண்டும் நமக்கு எதிராக செயல்படுவார் என்று காத்திருப்பது.
 10. நமக்குப்பிடிக்காதவர் எப்போது சிறிய தப்பாவது செய்வார் என்று கண்காணிப்பது.

வழக்கமா இவற்றுக்கான உடல்மொழி: இறுக்கிய கைகள்; இறுகிய தசைகள் (- வழக்கமாக கழுத்திலும் தோள்களிலும் தென்படும்.); உடல் துடிப்பது; பற்களை கடிப்பது; இதயம் வேகமாக துடிப்பது; சூடாக உணர்வது.
சிலருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். சிலருக்கு நேரமாகும். ஆனால் கோபம் வருகிறது என்று சில உடல் மாறுதல்கள் முன்னேயே உணர்த்தும். இதை கொஞ்சம் ஆராய்ந்து தெரிந்து கொண்டால் நாம் சீக்கிரமே இதை கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம்.
சரி! இந்தகொஞ்சம் 'நல்ல' கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி இருக்கும்? அதுக்கும் கெட்ட கோபத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?
 1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்பதில் வளையாத பிடிவாதத்துக்கு பதில் நெகிழும் பலமான தேர்வுகள்.
 2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது என்றில்லாமல் இப்படி இருந்தால் நல்லது என்று நினைப்பது.
 3. என் சூழ்நிலை இப்படித்தான் இருக்கணும்; எனக்கு என் குறிக்கோள்களுக்கும் நடுவே யாரும் வரக்கூடாது என்றில்லாமல் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று ஆசை படுவது.
 4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க என்று நினைக்காமல் யதார்த்தமாக பார்ப்பது.
 5. நான் சொல்வது செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான் என்றில்லாமல் அவற்றில் தவறு இருக்கக்கூடும் என்றும் மற்றவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொள்வது.
 6. மத்தவங்களோட கருத்துக்கோ பார்வைக்கோ இங்கே இடமில்லை எனாமல் மற்றவர் கருத்தையும் பாரபட்சமில்லாமல் ஆராய்வது.

இந்த மனப்போக்கு இருந்தா நாம் தன் நிலை இழக்க மாட்டோம். நம் சுய கௌரவம் பாதிக்கப்படாது. நம் கோபம் கட்டிலேயே இருக்கும். பிரச்சினை இருந்தால் அதை அதிகமாக்காமல் தீர்வு காண முயற்சிப்போம். மற்றவருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் என ஒப்புக்கொள்வோம்; ஆனால் அதே சமயம் மற்றவர் தம் போக்கையும் மாற்றிக்கொள்ள இடமிருக்கிறது என்று கோபப்படாமல் சுட்டிக்காட்டுவோம். அவர் வேண்டுமென்று நமக்கு எதிராக இல்லை என்பதற்கு ஆதாரங்களை தேடுவோம். மன்னிக்கவும் அம்றக்கவும் தயாராக இருப்போம். மொத்தத்தில் இந்த போக்கு நல்லது.
ஆகவே எப்படி கெட்ட கோபத்தை நல்ல கோபமாக ஆக்குவது என்று புரிகிறதல்லவா? நம் பார்வை மாற வேண்டும்!

 
Post a Comment