Pages

Saturday, February 28, 2015

உள்ளது நாற்பது - 2

 
மங்க³லம்
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.

உள்ளதுஅலது உள்ளஉணர்வு உள்ளதோ உள்ளபொருள்
உள்ளலற உள்ளத்தே உள்ளதால் – உள்ளமெனும்
உள்ள பொருள் உள்ளல்எவன் உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல் உணர்.
ஆதி அந்தமில்லாது எப்போதும் இருக்கிற ஞான ஸ்வரூபம் ஒன்றே உண்மை. அது அல்லாமல் வேறு ஒரு உண்மையான வஸ்து உள்ளதோ? இல்லை. அந்த ஞான ஸ்வரூப சத்திய வஸ்துவானது, மனம் சகல நினைப்புக்களும் நீங்கி தன்னுள்ளே ஒடுங்கும் போது ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது. ஆகவே மனம் எப்படி அந்த சத்திய வஸ்துவை நினைக்க முடியும்? ஞான மயமான ஹ்ருதயத்தில் அந்த ஞான ஸ்வரூபம் உள்ளது போலவே மனம் அதன் உள்ளே மறப்போ நினைப்போ இல்லாது அம்மயமாகவே ஒடுங்கிக்கிடப்பதே அதை நினைத்தல் ஆகும் என அறிவாயாக.
முக்காலத்திலும் இருக்கக்கூடியது ஞான ஸ்வரூபம் ஒன்றே. மற்ற அனைத்தும் தோன்றி மறைவன. இந்த உலகம், ஜீவன் போன்ற அனைத்தும் அப்படியே. தோன்றி மறையும் காலம் சில வினாடிகளாகவோ பல ஆயிரம் வருடங்களாகவோ இருக்கலாம். இருந்தாலும் தோற்றம் என்று ஒன்று இருக்கும் எதற்கும் முடிவும் இருக்கிறது. முக்காலத்திலும் இல்லாத ஒன்றை சத்தியம் என ஏற்பதற்கில்லை. அதையே மித்யா என்பர்.
இந்த ஞானஸ்வரூபத்தை எங்கே எப்படி காண இயலும்?
எப்போதும் இருக்கும் இந்த ஞான ஸ்வரூபத்தில் இருந்தே மனம் எழுகிறது. மனம் தோன்ற இந்த உலகம் என்று ஒன்று அதனால் உணரப்படுகிறது. மனம் இல்லையானால் இந்த உலகம் இல்லை. அதனாலேயே மனம் உறங்கும் ஆழ் உறக்கத்தில் இந்த உலகம் நம்மைப்பொருத்த வரை இல்லாமல் போகிறது. விழித்து எழ மனம் மீண்டும் கிளம்புவதால் உலகம் தோன்றுகிறது.
மனம் தான் வந்த இடத்துக்கு மீண்டும் சென்றுவிட்டால்? அதாவது தான் தோன்றிய அந்த ஞானஸ்வரூபத்துக்கே சென்று ஒடுங்கி விட்டால் என்ன ஆகும்? அப்போது உறக்கத்தில் பிரபஞ்சம் காணமல் போவது போல காணாமல் போகும். அப்போது ஞானஸ்வரூபம் ஒன்றே இருப்பதால் அது மட்டுமே பிரகாசிக்கும். இப்படி நிகழ்ந்தால் பின் மனம் மீண்டும் எழுவதில்லை.
பெயர் வடிவம் என்பதெல்லாம் மனம் கற்பிப்பதே. மனம் புலன்கள் வழியாகவே ஒன்றை அறிகிறது. புலன்கள் வழி அல்லாது ஒன்றை அது அறிய இயலாது. ஞான ஸ்வரூபமோ பெயர் வடிவம் அற்றது. ஆகையால் அதை புலன்களால் அறிய முடியாது. ஆகவே மனதாலும் அதை அறிய முடியாது. முன்னே அறிந்து இராத ஒன்றை அதால் அறிய முடியாது. அது எப்போது அறியும்?
நினைப்பதும் மறப்பதும் மனதின் இயல்பே. மனம் தான் அறியும் இந்த பிரபஞ்சம் அநித்தியமானதாகையால் உண்மையல்ல என விலக்குமானால் மீதி இருப்பது அது தோன்றிய அந்த ஞான ஸ்வரூபமே. அதில் ஒடுங்கும் போதே மனது அதை அறிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி ஒடுங்கும் போது அதன் தனித்துவம் காணாமல் போய் அதுவும் ஞான ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறது. ஆகவே மனம் என்று ஒன்று இருந்து கொண்டு ஞானஸ்வரூபத்தை நினைப்பது என்பது இயலாத ஒன்றாகி விடுகிறது.
இந்த ஞான ஸ்வரூபத்தையே நாம் பலவாறாக அழைக்கிறோம். நாம் புரிந்துகொள்ளும் பொருட்டு நாம ரூபமில்லாத ஒன்றை ஆன்மா, பரமான்மா, சிவம், பிரம்மம் என பலவாறாக அழைக்கிறோம்.
॥ सद्दर्शनम् ॥
|| ஸத்³³ர்ஶனம் ||
श्रीभगवद्रमणमहर्षि-विरचित-द्राविडग्रन्थस्य संस्कृतानुवादात्मकम्
ஶ்ரீப⁴க³வத்³ரமணமஹர்ஷி-விரசித-த்³ராவிட³க்³ரந்த²ஸ்ய ஸம்ʼஸ்க்ருʼதானுவாதா³த்மகம்

सत्प्रत्ययाः किं नु विहाय सन्तं हृद्येष चिन्तारहितो हृदाख्यः ।
कथं स्मरामस्तममेयमेकं तस्य स्मृतिस्तत्र दृढैव निष्ठा ॥ १ ॥
ஸத்ப்ரத்யயா: கிம்ʼ நு விஹாய ஸந்தம்ʼ ஹ்ருʼத்³யேஷ சிந்தாரஹிதோ ஹ்ருʼதா³க்²: |
கத²ம்ʼ ஸ்மராமஸ்தமமேயமேகம்ʼ தஸ்ய ஸ்ம்ருʼதிஸ்தத்ர த்³ருʼடை⁴வ நிஷ்டா² || 1 ||

 

No comments: