Pages

Thursday, February 26, 2015

உள்ளது நாற்பது
பகவான் என்னும் அழைப்புக்கு வெகு சில மனிதர்களே பொருத்தமான பாத்திரமாக இருந்திருக்கின்றனர். ரமண மஹரிஷி அத்தகையவர். ‘தன்னை கண்டு கொண்ட அவர் சதா சர்வ காலமும் தன்னிலேயே தோய்ந்து இருந்தவர். அவருடையது என்று ’நான் யார்’ எனும் ஒரு வழியை அவருடன் இருந்த பண்டிதர்கள் சொன்னாலும் அவர் எந்த ஒரு குறிப்பிட்ட வழியையும் பின் பற்றும்படி யாரையும் வற்புறுத்தவில்லை. மாறாக சில கேள்விகளை மட்டுமே எழுப்பி அதற்கு விடை காணுமாறு தூண்டினார். யாரும் கேள்விகளை கேட்டால் அப்போது பதில் வருவதும் நிச்சயமில்லை. ஒன்று தானாகவே குழப்பம் தெளிந்துவிடும்; அல்லது திடீரென்று எப்போதோ பதில் வரும்.
இவர் இயற்றிய உள்ளது நாற்பதுஎன்ற நூல் அத்வைத சாரத்தை அப்படியே தருவது. ரமணர் திருவண்ணாமலை வாச ஆரம்ப காலங்களில் எழுதிய நான் யார்என்பதும் இதே பொருளை ஒட்டியது. அதில் நிறைய சம்ஸ்க்ருத பதங்கள் விரவி இருக்கும். ஆனால் இதில் தமிழ் பதங்களே உள்ளன. எளிய நடை. ஆனாலும் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே உட் பொருள் புரிய வரும். இதை வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம்.
இதற்கு இன்னொரு சிறப்பு உண்டு. போன நூற்றாண்டின்  பெரும்பாலான ஆன்மீக நூல்கள் சம்ஸ்க்ருத மூலமும் பின்னர் தமிழாக்கமும் கொண்டு இருக்கையில் இது மட்டும் தமிழில் முதலில் உருவாயிற்று.
அவ்வப்போது பக்தர்கள் தாம் படித்து வரும் ஒரு நூலை பகவானிடம் காட்டி அது என்ன சொல்லுகிறது என்று சுருக்கமாக எழுதித்தரும் படி கேட்பார்கள். பகவான் அதை ஒரு பாடல் வடிவிலே எழுதித்தருவார். அவர்களும் அதை மகிழ்வுடன் பெற்றுச்செல்வர். சிலர் கோரிக்கையை ஏற்று தனிப்பாடல்களும் எழுதித்தருவது உண்டு. இவற்றை யாரும் கேட்டு வாங்கி தொகுத்தது கிடையாது. முருகனார் இதை செய்ய நினைத்து சேகரிக்க ஆரம்பித்தார். இப்படி எழுதியவை எத்தனையொ என்றே பகவான் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் 21 பாடல்கள் மட்டுமே கிடைத்தன. அதிலும் ஒவ்வொன்றும் பக்தரின் மனநிலைக்கு ஏற்ப எழுதியதாக இருந்ததால் அவற்றை ஒன்றாகும் போது கருத்து ஒத்து இயைந்து போகவில்லை. ஒரு நாள் பகவானிடம் நேரம் பார்த்து “சங்க இலக்கியங்களில் இனியன நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது என்பது போல இந்த பாடல்கள் மொத்தம் 40 வருவது போல புதிய பாடல்களை பகவான் ஆக்கிக்கொடுத்தால் உலகத்துக்கு ப்ரயோஜனமாக இருக்கும். பகவான் நாங்கள் உய்யும் பொருட்டு உபதேசம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கு இணங்கி இது எழுதப்பட்டது. அவ்வப்போது பாடல்கள் எழுதி பகவான் கொடுக்க முருகனார் தொகுத்தார். ஆனால் புதியதாக எழுதியவற்றுடன் இயைந்து போகாத பழைய பாடல்களை தொகுப்பில் இருந்து நீக்க நேரிட்டது. மேலும் வேறு பாவினத்தை சேர்ந்தவையையும் நீக்க வேண்டி இருந்தது. இப்படியாக கடைசியில் அந்த 21 பாடல்களுமே நீக்கப்பட்டுவிட்டன! இறுதியாக ஒரு மங்கல பாடலும் 40 பாடல்களும் கொண்ட தொகுப்பு உருவாயிற்று. இதை ஸ்ரீ காவ்ய கண்ட கனபதி முனிவரிடம் காட்டினார்கள். அவர் இதில் நாம ரூப உபாசனை குறித்து ஒன்றும் இல்லை என கவனித்தார். (எப்படி இருக்க முடியும்!!?) மங்கல பாடலாக ஏதேனும் ஒரு தெய்வத்தை போற்றுவதாக இருக்க வேண்டுமே என்று சொல்லி, “மரணபயம் மிக்குஉளஅம் மக்கள் அரணாக மரணபவம் இல்லா மகேசன்” என்று தொடங்கும் பாடலில் மகேசன் எனும் ஈ ஶ்வர சப்தம் இருப்பதை கண்டு அதை கூடுதல் மங்கல பாடலாக வைக்கச் சொன்னார். இப்போது நாற்பதுக்கு ஒன்று குறைவாக இருப்பதால் பகவான் “தன்னையழித்து” என்ற பாடல் எழுதிச் சேர்த்தார். 1928 ஆகஸ்டில் இது இறுதி வடிவம் பெற்றது. அது 1931 இல் முதல் பதிப்பாக வெளியாயிற்று.
நீக்கப்பட்ட 21 பாடல்களுக்கு மேலும் பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளது நாற்பது அனுபந்தம் என்ற பெயரில் பின்னர் வெளியாயிற்று.
நாளை முதல் உள்ளது நாற்பது பதிவு பெறும்.


Post a Comment