Pages

Thursday, March 5, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 1



ஒரு முறை கந்தாஸ்ரமத்தில் இருந்த போது பகவான், கபாலி சாஸ்திரி மற்றும் சிலர் கிரி பிரதக்‌ஷிணம் செல்லத்தயாரானார்கள். அப்போது மணவாசி ஐயருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகி விரூபாக்‌ஷ குகையில் படுக்க வைத்து இருப்பதாக தகவல் வந்தது.
பகவான் உடனே இறங்கி விரூபாக்‌ஷ குகைக்குப்போனார். மணவாசி ராமசாமி பேச்சு மூச்சு இல்லாமல் படுத்துக்கொண்டு இருந்தார். இதயம் வெகு வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது.
பகவான் அவரருகில் அமர்ந்து அவர் தலை மேல் கையை வைத்தார். ஐந்து நிமிடங்களில் ராமசாமி இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்.
பகவானோ அசையாமலே அமர்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் உடல் சுவர் மீது சாய்ந்தது. ஒரு மணி ஆகியும் அசைவில்லை. கபாலி சாஸ்த்ரிக்கு கவலை ஏற்பட்டது. கந்தாஸ்ரமத்துக்கு ஓடி தன்னிடம் இருந்த ஆலிவ் எண்ணையை கொண்டு வந்து பகவான் தலையில் சூடு பறக்கத்தேய்த்தார். சிறிது நேரத்தில் பகவான் உடலில் அசைவு ஏற்பட்டது. எழுந்து கந்தாஸ்ரமம் திரும்பினார்.
கபாலி சாஸ்த்ரி என்ன நடந்தது என்று கேட்டார்.
அதுவா? ராமசாமி எழுந்துட்டான், நான் உக்காந்துட்டேன். தலையில எண்ணை தேய்ச்சப்பத்தான் உணர்வு வந்துது. ரொம்ப சுகமா இருந்தது என்றார்!
-----
மலை மீது இருந்த நாட்களில் சில நாட்கள் சாப்பிட ஒன்றுமே கிடைக்காது. மறு நாள் நிறைய அறுசுவை உணவு வந்து சேரும்.
உணவில்லை என்று உடனிருப்பவர்கள் சோர்வுறாதிருக்க பகவான் ஒரு முறை சொன்னது: “எப்போல்லாம் பிக்‌ஷை கிடக்கலையோ அப்போல்லாம் அன்னைக்கு எகாதசின்னு நினைச்சுக்கணும். விரதம் இருக்கணும். பிறகு எப்போ கிடைக்கறதோ அப்போ துவாதசின்னு விரதத்தை முடிச்சுக்கணும்!”



 

No comments: