Pages

Friday, March 6, 2015

ரமணர் - அடியார்கள் -1 - முருகனார்



ஒரு நாள் நாயனா பகவானிடம் அண்ணாமலை காடுகளைப்பற்றி கேட்டார். "இந்தியாவில் பல வானாந்தரங்களுக்கு போயிருக்கேன். அண்ணாமலை வனம் பத்தி தெரியாது" என்றார். பகவான் உற்சாகமாக நான் கூட்டிண்டு போறேன் நாயனா. இந்த மலையில் என் காலடி படாத இடம் இருக்காது. ஃபாரஸ்ட்காரங்களுக்கு தெரியாத இடம் எல்லாம் கூட சுற்றி இருக்கேன்என்றார்.
சில நாட்கள் கழிந்து ஒரு நாள் பகவான் பழைய ஹாலில் இருந்தார். மதிய உணவுக்குப்பின் விஸ்வநாத சாமி பகவானை பார்க்கப்போனார். கூட அண்ணாமலை ஸ்வாமி மட்டுமே இருந்தார். பகவான் விஸ்வநாதஸ்வாமியை பார்த்தவுடன் நாயனா என்ன பண்றார்? காட்டுக்குள்ளே போய்டு வரலாமா? அவருக்கு சௌகரியப்படுமா?” என்று கேட்டார். "நாயனா ஏதோ எழுதிண்டு இருக்கார். போய்ச் சொன்னா சந்தோஷமா உடனே கிளம்பிடுவார்" என்றார். பகவான் "அப்ப போய் அவரை தயாரா இருக்கச்சொல்லு. நானும் ரகசியமா வந்துடறேன்" என்றார். சரி என்று சொல்லி விஸ்வநாதசாமி போனார்.
கொஞ்ச நேரத்தில் பகவான் அண்ணாமலை ஸ்வாமி, விஸ்வநாதஸ்வாமி நாயனா ஆகிய நால்வரும் ரகசியமாக யாத்திரை கிளம்பிவிட்டனர். த்ரௌபதி அம்மன் கோவில் தாண்டி மூன்றாம் காட்டுப்பாதை வழியாக அண்ணாமலை சாரலில் பகவான் அழைத்துப்போனார். அடர்ந்த காட்டுப்பகுதி. சில காய்ந்த நீரோடைகள்; தண்ணீருடன் சில ஓடைகள்; நாயனாவால் வெயிலில் நீண்ட நேரம் இருக்க முடியாது என்று தெரியும். அதனால் கொஞ்ச நேரத்தில் பகவான் ஒரு மரத்தை தேடிப்போனார். “இதோ பார்; இதுதான் இங்குதி மரம். இதுக்கு மருத்துவ குணம் உண்டு. இதன் நிழல் விசேஷமானது. நிழலி ந்னு தமிழ்ல பேரு. ஏன்னா வெயிலோட உக்கிரம் இதன் நிழலில தணியும்என்றார்.
ஐந்து நிமிடங்களில் அது போலவே பலன் இருந்தது. எல்லோருக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது.
மீண்டும் கிளம்பி காட்டுக்குள் போனார்கள். நீரற்ற ஓடை ஒன்றில் அமர்ந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து நாய்னா பகவானே திரும்பிப்போகலாமா?” என்று கேட்டார். “எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களை எல்லாரும் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.” என்றார். பகவான் இன்னும் கொஞ்சம் போகட்டும்; சாயங்கால காத்து வந்துடும் அப்புறம் போகிற சிரமம் தெரியாது என்றார்.
சற்று நேரத்தில் அப்படியே காற்று வீச ஆரம்பித்தது. கிளம்ப தயாராகும் போது யாரோ புதர்களுக்கு நடுவில் வரும் ஓசை கேட்டது. எல்லாரும் யார் இங்கே என்று ஆச்சரியத்துடன் அந்த திசையை பார்த்துக் கொண்டு இருக்கும்போதே முருகனார் தென்பட்டார். பகவான் மூக்கில் விரலை வைத்து இவர் எப்படி இங்கே வந்தார்?” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது முருகனார் பேச்சுக்குரல் கேட்டு இவர்களை பார்த்துவிட்டு அருகில் வந்து சேர்ந்தார். பகவானின் காலில் விழுந்தார். கண்களில் கண்ணீர்; முகம் சிவந்து இருந்தது.
எப்படி இங்கே வந்தீர்? இந்த இடம் யாருக்குமே தெரியாதே? ஃபாரஸ்ட்காரங்களுக்கே இந்த இடம் தெரியாதே? என்றார் பகவான்.
முருகனார் தழு தழுத்த குரலில் எஜமானன் இருக்கும் இடம் நாய்க்குத் தெரியாதா?” என்றார். பின் கோவில் போய்விட்டு மதியம் வந்தேன். ஹால்ல பகவான் இல்லை. விசாரிச்சா யாருக்கும் தெரியலை. பலாக்கொத்துக்கு வந்தால் நாய்னாவையும் காணலை. அப்புறம் நாயனா காட்டைப்பத்தி பகவானிடம் விசாரிச்சது நினைவு வந்தது. சரின்னுட்டு எந்த பக்கமா போயிருப்பா என்று தெரியாமல் நின்ன போது காவற்காரன் மாட்டுச்சந்தை பக்கம் போனதா சொன்னான். ‘பகவானே பகவானேந்னு சொல்லிக்கொண்டே வந்துட்டேன்என்றார். வழி தெரியாத அடர்ந்த காட்டில் இரண்டு மைல் வந்ததை சர்வ சகஜமாக முருகனார் கூறினார்.

 

No comments: