தரிசனம் செய்ய வந்த ஒருவர்
வெவ்வேறு மகான்களை
தரிசித்ததையும் அவர்கள்
அவருக்கு அன்புடன் உபதேசம்
செய்ததையும் கூறினார்.
பின் அவருக்கு இருந்த
குழப்பத்தை கூறினார். “இத்தனை பேர் மேலேயும் அன்பும் மரியாதையும் இருக்கு.
இப்ப இவர்களில் யார் சொன்னதை பின்
பற்றுவது? யாரை
குருவா ஏத்துக்கறது?”
பகவான் சொன்னார். “சொன்னவர் வேற வேறயா இருந்தாலும்
எல்லாரும் சொன்னது
ஒண்ணுதானே? அந்த ஒண்ணையே பின் பற்றுங்கோ!”
ஒரு நாள் ஓல்ட் ஹாலில்
எல்லாரும் அமைதியாக
அமர்ந்து இருந்தார்கள். சிலர் த்யானத்தில் இருந்தார்கள்.
முருகனாரின் மனைவி மீனாட்சியும் அங்கே அமர்ந்திருந்தார்,
அவளுக்கு காபி சாப்பிட வேண்டும்
போல இருந்தது.
காபி நினைப்பாகவே இருந்தாள்.
அப்போது பகவான் “எல்லோரும் ஆத்மாவை த்யானம் பண்ணறா. மீனாட்சி காபியை த்யானம் பண்ணறா!”
என்றார்!
சற்று நேரத்தில் மணவாசி ராமசாமி ஐயர் எல்லாருக்கும் இட்லி காபியுடன் வந்தார்!
பகவான் “மீனாட்சியோட தபஸ்
பலிதமாயிடுத்து! அவளுக்கு முதல்ல கொடுங்கோ!”
என்றார்.
அண்ணாமலை ஸ்வாமி வந்து சேர்ந்த
புதிது. பகவானைப் பார்க்க வந்த ஒருவர்
நிறைய இனிப்புகளை
கொண்டு வந்தார். பகவான் அண்ணாமலை ஸ்வாமியை
பார்த்து எல்லோருக்கும்
ஒவ்வொன்று கொடுக்கச்சொன்னார்.
அண்ணாமலையும் எல்லொருக்கு ஒவ்வொன்று கொடுத்து முடித்தார்.
கடைசியாக தான் ஒன்று
எடுத்துக்கொண்டார். மிகவும் அருமையாக இருந்தது.
ஆசை அதிகமாகவே இன்னொன்று
எடுத்து சாப்பிட்டார்.
பின் மீதியை பகவான் எதிரில்
கொண்டு வைத்தார்.
பகவான் அவரைப் பார்த்து “நீ மட்டும் ரெண்டு எடுத்துண்டியோ?”
என்று கேட்டார்.
அண்ணாமலைக்கு ஆச்சரியம்! உங்களுக்கு எப்படித் தெரியும்?
என்று கேட்டார்.
பகவான் பதில் ஒன்றும் சொல்லவில்லை!
ஒரு முறை அண்ணாமலைஸ்வாமி வேலை பளு தாங்காமல் சிறிது
இளைப்பாற விரும்பினார்.
“இன்னைக்கு ஒரு நாள் கிரிபிரதக்ஷிணம் போயிட்டு வரேன், ரொம்ப நாளா நினைச்சுண்டு
இருக்கேன். உத்தரவு கொடுங்க” என்றார்.
பகவான் மௌனமாக இருந்தார்.
அண்ணாமலைஸ்வாமி மேற்பார்வையிட வேண்டிய
வேலைகள் நிறைய
இருந்தன. ஆனாலும் இவர் கிரிபிரதக்ஷிணம்
போக மீண்டும்
உத்தரவு கேட்டார்.
பகவான் “சரி, நீயும் ரொம்ப நாளா த்யானம்
பண்ணனும் நினைச்சுக்கிறே.
கிரிபிரதக்ஷிணம் போயிட்டு வா. நடக்கும் போது த்யானத்திலேயே இரு என்றார்.
ஆனால் நடந்ததோ வேறு! கிரிபிரதக்ஷிணம் தொடரத்தொடர மனம் இன்னும் இன்னும் சஞ்சலமாயிற்று.
பகவான் கொடுத்த வேலையை செய்யாதது மனதை உறுத்தியது. கிரிபிரதக்ஷிணம் முடிந்து ஆஸ்ரமம் வந்து சேர்ந்த போது பக்தர்கள் எல்லாரும் “வாவா, நீ எப்போ வருவேன்னு
காத்துண்டு இருக்கோம்” என்றார்கள்.
அண்ணாமலை கிரிபிரதக்ஷிணம்
கிளம்பியதும் பகவான்
அவருடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
கட்டிட வேலை நடக்கும்
இடத்துக்குப்போய் மேற்பார்வை
இட ஆரம்பித்தார். கடும்
வெயில். தரிசிக்க வந்தவர்கள் எல்லாரும்
பகவான் இருந்த
இடத்துக்கே சென்று தரிசிக்க
வேண்டிய கட்டாயம் இருந்தது.
யாருமே பகவானை அவர் இருந்த
இடத்தில் இருந்து
நகர்த்த முடியவில்லை!
பகவான் சொல்கிற வேலையை செய்வதே த்யானம் என்பதாக
அண்ணாமலைஸ்வாமி உணர்ந்தார்.
No comments:
Post a Comment