கும்பகோணத்தில் இருந்து
இரண்டு பெண்கள் வந்தார்கள். ஒருவர்
குரு; இன்னொருவர்
சிஷ்யை. அன்று
மாலையே ரயிலில் திரும்ப இருந்தார்கள். மதியம் மூன்று மணிக்கு ஹாலுக்கு வந்தார்கள். சிஷ்யை தன் குருவுக்கு
ஆசனம் தயார் செய்து பகவான் முன்பு அமர வைத்தார். அவ்வப்போது பகவான் அருகில் சென்று
“ அவங்க
எல்லாத்துலேயும் உங்க மாதிரியே ஸ்வாமி. நீங்க இருக்கிற ஸ்திதியிலேயே
அவங்களும் இருக்காங்க. எங்களை
ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்றார்.
சிறிது நேரம் கழித்து “மோக்ஷத்துக்கான
வழி என்ன? அதை
உபதேசம் செய்யணும். பந்தம்ன்னா
என்ன? மாயையில்
இருந்து விடுபடறது எப்படி?” என்று
கேட்டார்.
பகவான் பதிலே சொல்லவில்லை.
நேரமோ போய் கொண்டே
இருந்தது. ரயிலுக்கு
நேரமாகிக்கொண்டு இருந்தது. சிஷ்யை
பதட்டத்துடன் “ஸ்வாமி!
தயை செய்து உபதேசம்
செய்யுங்க. சீக்கிரம்
தீக்ஷை கொடுங்க. வேகமா
முடியுங்க. ரயிலுக்கு
நேரமாச்சுன்னு உங்களுக்கே தெரியும்”
என்றார். பகவான்
அப்போதும் மௌனமாகவே இருந்தார்.
ஸ்வாமி! ஏதாவது சொல்லுங்களேன்.
எல்லாரும் அஞ்ஞானம்
அஞ்ஞானம் என்கிறாங்களே அது
என்ன? என்றார் சிஷ்யை.
பகவான் அருகில் இருந்த
முருகனாரிடம் திரும்பி “அவளை யார் அஞ்ஞானத்துல இருக்கான்னு
விசாரம் பண்ணச்சொல்லுங்கோ!”
என்றார்.
முருகனார் அவர்கள் பக்கம் திரும்பி “நீங்க போகலாம். தீக்ஷை முடிஞ்சது” என்றார். அவர்களும் கிளம்பினார்கள்.
சிறிது நேரம் கழித்து பகவான்
பொதுவாக பேச
ஆரம்பித்தார். “எல்லாம் உடனே கிடைக்கணும்.
எல்லாருக்குமே ஏதோ ஒரு ட்ரெய்னை பிடிக்க வேண்டி இருக்கு. வரும் போதே அவசரமா வரது!
போகும் போதும் மோக்ஷம் பார்சல்லே வேண்டி இருக்கு. எதையாவது இங்கேயும் அங்கேயும்
படிச்சுட்டு எல்லாம்
தெரியும்ன்னு நினைக்க
வேண்டியது.
“எல்லாரும் இங்கே சிரத்தையோட சாதனை பண்ணனும்தான் வரா.
வந்த பிறகு இங்கேதான் இனின்னு ஆனபிறகு அகந்தை தலைக்கு ஏறிவிடறது; எதுக்கு இங்கே வந்தோம் என்கிறதே மறந்துடறது. எனக்கு ஏதோ பெரிய சேவை செய்யறதா நினைச்சுக்கறா, அவா மட்டுமே பகவானுக்கு சேவை பண்ண பிறந்தாப்போலயும்
மத்தவா எல்லாம்
வீணா பொழுது போக்கறதாகவும் நினைக்கறா.
இந்த நினைப்போட சேவை செய்யறதே
அவா வந்த
நோக்கத்தை கெடுக்கும். அடக்கம் மட்டுமே அகந்தையை நாசம் பண்ணும்.
“ஈஸ்வரனோட கதவு எப்பவும் திறந்தே
இருக்கு. ஆனா
கதவு உசரம்
ரொம்ப கம்மி. தலை வணங்கினாத்தான் உள்ளே போகலாம். பெருமாள் ஸ்வாமியை விடவா யாரும்
எனக்கு சேவை
செய்துட முடியும்? பல
வருஷம் என்
நிழலாவே இருந்தார். எனக்கு
பேதி கண்டப்ப
மலத்தை தன் கையாலேயே எடுத்து
சுத்தம் பண்ணினார், அவரேதான் எனக்கு எதிரா கோர்ட்டுக்கு போய் விசாரணை கமிஷன்
போட்டு விசாரிக்க
வெச்சார்.
மனசுல நான் என்கிற எண்ணம்
கொஞ்சம் இருந்தாலும்
அது வேகமா பரவி வந்த
நோக்கத்தையே கெடுத்துடும்” என்றார்.
No comments:
Post a Comment