Pages

Wednesday, March 11, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 2




நாளடைவில் பகவானின் புகழ் எங்கும் பரவியது. பகவான் மலை மேல் இருந்த போது ஒரு சாஸ்திரிகள் வந்தார். அவர் பகவானைப்பற்றி கேள்விப்பட்டு இப்படிப்பட்டவரை தம் குரு பரம்பரையில் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். பகவானிடம் வந்து வினயமாக ஸ்வாமி! உங்களுக்கு தெரியாதது இல்லே. நீங்க ப்ராம்மணர். சாஸ்திரம் சொன்னபடி சன்னியாசம் வாங்கிக்கொள்ளறதுதான் முறை .... பரம்பரையிலே நீங்க வந்தா நல்லா இருக்கும் என்றார். கூடவே நீங்க சரின்னா போதும். ஏற்பாடு செய்துடுவேன். காஷாயம் முழுசா கூட வேண்டாம். கௌபீனத்தை காஷாயத்துல கட்டிக்கொண்டால் போதும்என்றார். பகவான் ஒன்றும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டார்.
சாஸ்த்ரிகள் டவுனுக்கு போய் விட்டு பிற்பகல் வருவதாக சொல்லி விடை பெற்றார்.
அவர் போய் கொஞ்ச நேரத்தில் ஒரு வயதான ப்ராம்மணர் வந்தார். “எப்போவோ வந்திருக்கணும். ட்ரெய்ன் லேட். இன்னும் சந்தி கூட பண்ணலே. இந்த மூட்டையை கொஞ்சம் பாத்துக்கடா அம்பி! இங்கேயே இருக்கட்டும். இதோ வந்துடறேன் என்று சொல்லி மூட்டையை வைத்துபோனார்.”
இவரது முகம் மிகவும் பழகின முகமாக பகவானுக்குத் தோன்றியதே ஒழிய யார் என்று தெரியவில்லை.
உணர்வால் தூண்டப்பட்டு அந்த மூட்டையை பிரித்தார். அதில் ஒரு வேட்டி துண்டும் சில புத்தகங்களும் இருந்தன. மேலே இருந்த புத்தகம் சம்ஸ்க்ருதத்தில் அருணாசல புராணம். பகவான் அது வரை தமிழில்தான் இந்த நூலை பார்த்து இருந்தார். அதை எடுத்து புரட்ட உடனே ஏதோ ஒரு இடம் பிரிந்தது. அந்த பக்கங்களில் இருந்த இரண்டு ஸ்லோகங்கள் கண்ணில் பட்டன. அவற்றை பார்த்த பகவான் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு திருப்பி மூட்டையில் வைத்து கட்டி விட்டார்.
சிறிது நேரத்தில் பழினிச்சாமி உணவுடன் வந்தார். உணவு உண்ட பின் மூட்டையை பார்த்தால் அதை காணவில்லை. பழனிச்சாமியும் யாருமே வரவில்லை என்றார். மூட்டையை வைத்துச்சென்ற ப்ராம்மணரும் வரவில்லை. மூட்டையும் காணாமல் போயிற்று.
மூன்று மணிக்கு சாஸ்திரிகள் வந்தார். அவரிடம் பகவான் இந்த காகிதத்தை காட்டினார். அவரும் தீட்சை பற்றி எதுவும் பேசாமல் விடைபெற்றார்.
பின்னால் பகவான் இந்த இரு ஸ்லோகங்களையும் மொழி பெயர்த்தார்.

http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8198.5;wap2
அருணாசல பஞ்சகத்தில் :

உருத்தெரி யெல்லை யுற்றுகண் ணுற்றாற்
கருத்தினாற் தூரக் கருதினா லும்மே
வருத்த முறாது வராதவெ தாந்த
வருத்தவிஞ் ஞான மார்க்குமுண் டாமே.

அருணாசலத்தின் உருவம் தெரியக்கூடிய எல்லையில் வந்தடைந்திருந்து தரிசித்தாலும், அல்லது அருணாசலத்தைக் காண முடியாத தூரத்திலிருப்போர் மனத்தினால் அருணாசலத்தை நினைத்தாலுங்கூட, மிக வருந்திப் பாடுபட்டாலன்றி அடைய முடியாத வேதாந்தத்தின் உண்மைப் பொருளாகிய ஆன்மஞானம் எத்தகையவர்க்கும் எளிதில் உண்டாகும்.

யோசனை மூன்றா மித்தல வாசர்க்
காசறு தீக்கை யாதியின் றியுமென்
பாசமில் சாயுச் சியம்பயக் கும்மே
யீசனா மென்ற னாணையி னானே.

மூன்று யோசனை அளவுள்ளதாகிய (கிட்டத்தட்ட 50 கி.மீ.) இத்தலத்தில் வசிப்பவர்களுக்கு, குற்றம் அகற்றும் குருவினுடைய தீக்ஷை முதலியன எதுவும் இல்லாமலேயே, பற்றற்றதான, என்னோடு இரண்டறக் கலக்கும் சாயுச்சிய முக்தியை சர்வேசுவரனாகிய நான் என்னுடைய ஆக்ஞையினாலேயே கொடுக்கின்றேன்.


No comments: