பகவான் குறும்புகளும் செய்திருக்கிறார்.
முருகனார் திருமணம் செய்து கொண்டாலும்
அவரது மனைவியை பிரிந்து ஆசிரமத்துக்கு வந்து துறவியாகவே இருந்துவிட்டார். ஒரு நாள் ஆசிரமத்துக்கு மீனாட்சி வந்து
இருந்த போது பகவான் “மீனாக்ஷி! இன்னும்
கொஞ்ச நேரத்துலே முருகனார் பலாக்கொத்திலேந்து இங்கே வருவார். அவர் வந்து உக்காந்த உடனே... நீ இந்த பதிகத்தை பாடணும். கடைசி அடியிலே ரமண மாயவனே ந்னு இருக்கு
இல்லையா? அதை முருக
மாயவனே ந்னு மாத்தி பாடணும்” என்று சொல்லிக்கொடுத்தார்.
அது ஸ்ரீரமண சந்நிதி முறை என்று
பிற்காலத்தில் பெயர் பெற்ற நூலின் வடிவம். நாயக நாயகி பாவத்தில் அமைந்து இருக்கும். நாயகன் முன் தன்னோடு கூடி அன்பு காட்டி பின்
தன்னைப்பிரிந்து விட்டதையும் நாயகனோ இதை எல்லாம் கண்டும் காணாதவன் போல
இருப்பதையும் கண்டு நாயகி மனம் வெதும்புவதையும் சொல்லி இருக்கும்.
கள்ளம் கபடறியா மீனாக்ஷியும் “சரி பகவானே!” என்றாள்.
சற்று நேரத்தில் முருகனார் வந்து
அமர்ந்தார். பகவான்
மீனாக்ஷியைப் பார்த்து ஜாடை காட்டினார். அவளும் பாட ஆரம்பித்தாள்:
காதலால் என்னைக் கலந்த நீ பின்னர்க்
கணக்கிலாப் பற்பல காலம்
ஏதிலார் போல இப்புறம் திரும்பாது
இருந்தனை அவற்றை யான் இப்போது
ஓதினால் எல்லாம் உருகனாஎன்ன
உரை செய்வாய் உன்நிலை என்போல்
மாதரார் தம்மான் மாதித்திடப் படுமோ
மறையுறை முருக மாயவனே!
பகவானோ முருகனாரை பார்த்து குறும்பாக
சிரிப்பதும் மீனாக்ஷியை பார்த்து ஆமோதிப்பதாயும் இருந்தார்.
மையலால் என்னை மணந்த நீ பின்னர்
மதிப்பில்லாப் பற்பல காலம்
உய்யலாம் படியான் உவந்து நீ வாராது
ஒழிந்தனை அவற்றை யான் உன்னி
மெய்யதா உரைத்தால் பொய்யதாங் கனவா
விளம்புதி உன்நிலை என் போல்
தையலார் தம்மால் தலைப்படத் தகுமோ
சதுரனே முருக மாயவனே!
என்று இரண்டாம் பாடலை பாடும்போது
முருகனாருக்கு பகவானது நாடகம் புரிந்துவிட்டது. ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்று ஹாலை விட்டு
வெளியேற இரண்டடி எடுத்து வைத்தார். அதற்குள்
மூன்றாம் பாடலும் பாடி முடிக்கப்பட்டது.
“ஓய்! எங்கே எழுந்து ஓடறீர்? ‘முருக மாயவனே’ ந்னு பாடினதும் ஓடறீரோ? அப்ப ‘ரமண மாயவனே’ ந்னு யாரும்
பாடினா நானும் எழுந்து ஓட வேண்டியதுதானா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
முருகனார் பதில் சொல்லாமல் வெளியே
ஓடிவிட்டார்!