பகவானுடைய பள்ளியில் அவருக்கு சீனியர் மணி. முரட்டு ஆசாமி. பலசாலி. எந்த கோவிலுக்கும் போக மாட்டார். யாரையும் வணங்க மாட்டார். எல்லாரும் அவரை ’போக்கிரி மணி’ என்றே அழைத்தனர்.
இவர் பகவான் திருவண்ணாமலைக்கு வந்த சில
வருடங்களில் தன் தாயாருக்கு துணையாக திருப்பதிக்கு சென்றார். திரும்பும் வழியில் பகவானை
பார்த்துவிட்டுப்போக தாயார் ஆவல் தெரிவித்தார். மணி
மறுத்தார். ‘நான் அந்த போலி சாமியாரை எல்லாம் பாக்க வர
மாட்டேன். அவா அம்மா, அண்ணா, சித்தப்பா மாதிரி இல்லை நான். காதை பிடித்து திருகி
இழுத்துக்கொண்டு வந்துவிடுவேன்’ என்றார். “என்னமோ செய்!” என்றார் தாயார்.
இருவரும் விரூபாக்ஷ குகைக்குப்போனார்கள். தாயாருக்கு என்ன நடக்குமோ என்று
உள்ளூர பயம்! நமஸ்கரித்து விட்டு அமர்ந்தார். மணி பகவானை எடை போடுவது போல பார்த்தார். பகவானும்
மணியை பார்த்தார். இருவரும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
மணியின் கண்களில் அவரையும் மீறி கண்ணீர் வழியலாயிற்று. அது வரை எங்கும் யாரும் நமஸ்காரம் செய்யாத மணி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
பகவானுக்கு அடிமை போல ஆகிவிட்டார்!
விளாச்சேரியில் வீட்டில் இருந்த அனைவரும் சிருங்கேரி
ஸ்வாமிகளிடம் மந்திர உபதேசம் பெற்றுக்கொண்டனர். மணி மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை. பகவான் இருக்கும்போது வேறு யாரிடமும் உபதேசம் பெறத்தேவையில்லை என்றூ
சொல்லி உடனே கிளம்பி திருவண்ணாமலை வந்தார்.
பகவானிடம் மந்திரோபதேசம் செய்யுமாறு வேண்டினார். பகவான் வழக்கம் போல “நீ யாருன்னு பாரு” என்றார்! போக்கிரி
மணி ஆயிற்றே! விடுவதாக இல்லை,. பகவான் வழக்கமாக
வெளியே கிளம்பும் நேரம் வழியை மறித்துக்கொண்டு “உபதேசம் செய்தால்தான் வழி விடுவேன்!” என்றார்!
பகவான் அவரை லேசாக தொட்டு வழிவிடச்சொல்வது போல
சைகை செய்தார். “பேசாம
சிவசிவான்னு இருக்காம ஏன் இப்படி பண்ணறே?” என்றபடி வெளியே வந்தார்.
மணி பகவான் கால்களில் ‘சிவ சிவ’ என்றபடியே
விழுந்து உருண்டார். “எனக்கு உபதேசம் கிடைச்சுடுத்து; கிடைச்சுடுத்து! “ என்று கூவினார். அப்போதிலிருந்து சிவ நாமம் அவருடைய உள்ளில் கலந்தது.
சில வருடங்கள் சென்றன. மணி தன் இறுதி நாட்கள்
நெருங்கிவிட்டதை உணர்ந்தார். உடனடியாக திருவண்ணாமலை வந்தார்.
சில நாட்கள் ஆசிரமத்தில் தங்கினார். தினமும்
பகவான் இருக்கும் ஹாலை அங்கப்ரதக்ஷிணம் செய்வார். பகவான்
தடுத்தும் கேட்கவில்லை. “நீங்க எனக்கு செஞ்சதுக்கு இதுக்கு
மேலே செய்ய ஒண்ணும் தெரியலை பகவானே!” என்று அழுதார்.
ஊர் திரும்பியவர் தன் இறுதி நெருங்குவதை
மனைவியிடம் சொன்னார். “பயப்படாதே! நான் பகவான்கிட்டேதான் போறேன். உன்னை தனியா விட்டுப்போறதா வருத்தப்படாதே. நான் போய்
நாப்பது நாள்ளே உன்னையும் கூட்டிண்டு போறேன். இது பகவான் உத்திரவு”
என்றார்.
அதே போல் சில நாட்களில் சிவத்தில் கலந்தார். நாப்பதாவது நாள் அவரது
மனைவியும் கலந்தார்!
No comments:
Post a Comment