Pages

Thursday, April 2, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 8




ராமநாத ப்ரம்மச்சாரி ஒரு நாள் காலை சாப்பிடாமல் இருந்ததை பகவான் கவனித்தார்.
ராமநாதா, ஏன் சாப்பிடலை?” என்று கேட்டார்.
ராமநாதன் இன்னைக்கு ச்ராத்தம். அதனால சாப்பிடலை!” என்றார்.
இங்கே வந்துட்டே இல்லையா? இனி உனக்கு இதெல்லாம் தேவையில்லை. போய் சாப்பிடு. இன்னும் ரெண்டு இட்டலி கூட சாப்பிடு!” என்றார் பகவான்.
இதை கவனித்துக்கொண்டு இருந்தார் சேலம் டி.எஸ். ராஜ கோபாலய்யர். அன்றையில் இருந்து அவரும் வருஷாப்திகளை செய்வதை விட்டுவிட்டார்.
பகவானை சந்திக்க வந்த அவரது உறவினர்கள் இது குறித்து புகார் செய்தனர்.
ராஜகோபாலையர் அடுத்த முறை தரிசனத்துக்கு வந்த போது பகவான் இது குறித்து கேட்டார்.
ஆமாம் பகவானே! அன்னைக்கு ராமநாத ப்ரம்மச்சாரிக்கு சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தேன். அன்னையில் இருந்து நானும் இதை எல்லாம் விட்டுட்டேன்.” என்றார் ராஜகோபாலையர்.
அவன் எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டான். நீ என்னத்தை விட்டே? அவன் கதை வேறே!” என்றார் பகவான்.

***
கோடைக்காலத்தில் மாலை கிணற்றுக்கு அருகில் பகவானுக்கு சேர் போடுவார்கள். இரவு உணவு முடிந்த பிறகு பகவான் அங்கே மலையைப்பார்த்தபடி அமர்வார். மற்றவர்களும் உடன் அமர்ந்து கொள்ளுவார்கள். வழக்கமாக அமைதி நிலவும்.
ஒரு நாள் இந்த வேளையில் ஒருவர் துக்கத்துடன் வந்து அழலானார்.! “பகவானே, நான் மாபெரும் பாவி. என்னை இப்படி பாவத்திலேயே உழல வெச்சுட்டீங்களே? எனக்கு விடி மோட்சமே கிடையாதா?” என்று புலம்பினார்.
பகவான் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நீ ஏன் இங்கே வந்து அழறே? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றார்.
இதைக்கேட்டு நெஞ்சு வெடித்தது போல அவர் அழலானார். “பகவானே, நீயும் கைவிட்டா நான் எங்கே போவேன்? எனக்கு ஒரே கதி நீதான் ந்னு நம்பி வந்தேனே? இனி எங்கே போவேன்? என்ன செய்வேன்? இனி எனக்கு யார் இருக்கா?” என்று கல்லும் கரையும் படி அழுதார். ஆனால் பகவான் கொஞ்சம் கூட சலனப்படவில்லை.
நான் என்ன உன் குருவா? உன்னை கரையேத்தற பொறுப்பு எனக்கு இருக்கா என்ன? நான் உன் குருன்னு எப்போவாவது சொல்லி இருக்கேனா? ” என்றார்.
பகவானே! நீங்க காப்பாத்தலைன்னா யாராலேயும் என்னை காப்பாத்த முடியாது! நீங்க மட்டுமே நான் பண்ணின பாவத்திலேந்து என்னை காப்பாத்த முடியும். நீங்கதான் என் குரு! நீங்கதான் என் குரு!” என்று திரும்பத்திரும்ப சொல்லியபடி ஆதரவற்று அழுதார்.
அவர் அழுதது அங்கிருந்த எல்லாரையும் திகைத்து வாயடைத்துபோகச் செய்திருந்தது. ஆனால் பகவான் கொஞ்சம் கூட அசரவில்லை.
நாந்தான் உன் குருன்னா, தட்சிணை எங்கே? குருவுக்கு தட்சிணை தரணுமோனோ?” என்றார்.
"நீங்க எதையும் ஏத்துக்க மாட்டீங்களே? நான் எதை தர முடியும்?”
"நான் எங்கேயாவது நீ தரதை வேண்டாம்ன்னு சொன்னேனா?”
பகவானே நீங்க எதை கேட்டாலும் தரேன்.”
அப்புறமா மாட்டேன்னு சொல்லக்கூடாது!”
சொல்ல மாட்டேன்!”
நீ செய்த புண்ணியத்தை எல்லாம் எனக்குக்கொடு!”
பகவானே! நான் ஒரு புண்ணியமும் செய்யலையே!”
இதோ பார்! இப்பத்தானே மாட்டேன்னு சொல்ல மாட்டேனேன்னு சொன்னே?”
சரி, தரேன். எப்படி தரது?”
நா சொல்லறா மாதிரி சொல்லு! நான் இதுவரை செஞ்ச புண்ணியமெல்லாம் குருவுக்கு தட்சிணையா தந்தேன். இனி எனக்கு எந்த புண்ணியமும் இல்லே! இதை மனசார சொல்லு!”
அவரும் அப்படியே சொன்னார்.
அடுத்து பகவான் கேட்டது எல்லோரையும் திடுக்கிட வைத்தது!
சரி, இப்ப நீ செய்த பாபத்தை எல்லாம் எனக்குக்கொடு!”
வந்தவர் நடுநடுங்கிவிட்டார்... ”பகவானே நீங்க என்ன கேட்கறீங்கன்னு உங்களுக்குத் தெரியாது! என்னைப்போல பாபி கிடையாது. என் பாபத்தை எல்லாம் நீங்க ஏத்துண்டா உடம்பு புழுத்துப் போயிடும். நீங்க கேக்கறதை நான் கொடுக்க முடியாது!”
அதெல்லாம் நான் பாத்துக்கறேன். அதைப்பத்தி கவலைப்படாம சொன்னதை செய்!”
முடியவே முடியாது பகவானே!”
குரு தட்சிணையா ரெண்டுத்தையும் தரதுன்னா தா. இல்லைன்னா ரெண்டுத்தையும் நீயே வெச்சுக்கோ! நான் உன் குரு இல்லை!”
பகவான் உறுதியாக இப்படிச் சொல்ல அவர் வேறு வழி இன்றி உடன்பட்டார்.
நான் இதுவரை செஞ்ச பாபத்தை எல்லாம் குருவுக்கு தட்சிணையா தந்தேன். இனி எனக்கு எந்த பாபமும் இல்லே!” என்று மனசார சொன்னார்.
பகவான் முகத்தில் பேரமைதி தவழ்ந்தது.வந்தவர் நமஸ்கரித்து விடை பெற்றார். அதுவே யாரும் அவரை கடைசியாகப் பார்த்தது!

 

No comments: