Pages

Thursday, April 23, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 15



அனந்தநாராயணராவ் ஆசிரம டாக்டராக இருந்தார். பகவானுக்கு ஒருமுறை இடுப்பு முதல் முழங்கால் வரை வலி கடுமையாக இருந்தது.
அனந்தநாராயணராவ் தைலம் கொண்டு வந்தார். தேய்த்து விடுவதற்காக பகவானை நேராக படுக்கச்சொன்னார். பகவான் வழக்கமாக சாய்ந்த நிலையிலேதான் இருப்பார்.
பகவான் சிரித்துக்கொண்டே டாக்டர், நான் திருவண்ணாமலை வந்ததுலேந்து நேரா நீட்டி படுத்ததே இல்லை. நீங்க கண்ணை மூடி எட்டு மணி நேரம் தூங்கறதுல என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமா சாய்ஞ்சபடி கொஞ்ச நேரம் கண்ணை மூடித்திறந்தா எனக்கு கிடைச்சுடும்.” என்றார்.

அனந்தநாராயணராவ் ஒருமுறை தைலம் கொண்டுபோய்கொடுக்க பழையஹாலுக்குச் சென்றார். பகவான் சாய்ந்தபடி குறட்டை விட்டுக்கொண்டு இருந்தார். தைலத்தை வைத்துவிட்டுப் போவதா அல்லது காத்திருக்கலாமா என்று குழம்பியபடி நின்றார். பகவான் கண்களைத்திறந்து "ஏன் தைலத்தை கையிலேயே வெச்சுண்டு நிக்கறேள்? இங்கே வைக்கறதுதானே?” என்றார். “நீங்க தூங்கிண்டு இருந்தேளே! “ என்றார் டாக்டர். “நான் தூங்கினதா எதை வெச்சு சொன்னேள்?” என்று கேட்டார் பகவான். டாக்டர் பதில் சொல்லாமல் அமர்ந்தார்.

பகவான் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு குறட்டை விட ஆரம்பித்தார்.
ஆசிரமத்துக்கு புதிதாக வந்தவர் ஒருவர் நமஸ்கரிக்க பகவான் கண்களை திறந்து அவரைப்பார்த்தார் பகவான். பின் கண்களை மூடிக்கொண்டார். ஆசிரமவாசி ஒரு வர் வந்து நமஸ்கரிக்க பகவான் கண்களைத் திறக்கவில்லை. குறட்டை தொடர்ந்தது.
பின்னாலேயே புதிதாக ஒருவர் வந்து நமஸ்கரிக்க கண்கள் திறந்தன.
டாக்டரைப்பார்த்து சிரித்தார் பகவான்!
  
1948 ஆம் ஆண்டு ஒருநாள் பகவான் ஹாலில் அமர்ந்து இருந்தார். பக்தர் கூட்டம் நிரம்பி இருந்தது. மதிய உணவுக்கான மணி ஒலிக்க அனைவரும் எழுந்து சாப்பாட்டுகூடத்துக்கு சென்றார்கள். பகவானுக்காக காத்திருந்தார்கள். பகவானின் கால்கள் பாதிப்பு அடைந்து இருந்தன. கால்களை நீவிவிட்டுக்கொண்டு சற்று நேரம் கழித்து கிளம்பினார். டைனிங் ஹாலுக்குள் நுழையும் போது வாசலில் கிராமத்து ஆசாமி ஒருவர் ஒரு கலயத்துடன் நின்று கொண்டிருந்தார்.
பகவான் நின்றார். ஆச்சரியத்துடன் சின்னப்பையா!’ என்றார். “நம்ம சின்னப்பையந்தானே?”
ஆமாம் சாமி நானேதான்! ”
எப்படி இருக்கே? நல்லா இருக்கியா>? என்ன பாக்க வந்தியா? பெரிய ஆளாயிட்டயே? பானையில என்ன கூழா?”
ஆமாஞ்சாமி! கொஞ்சம் கூழ் கொண்டு வந்தேன்
கொண்டு வா! சாப்பிடறேன்!” என்று சொல்லி கைத்தடியை வைத்துவிட்டு கூழ் ஊற்ற வாகாக வாயருகில் கை வைத்து நின்றார். சின்னப்பையன் கூழ் வார்த்தார். பகவான் உறிஞ்சி உறிஞ்சி அமிர்தம் போல அதை குடித்தார்.
சின்னப்பையன் ஆனந்தமடைந்தார்,
பகவான் நிதானமாக குடித்தார்.
டைனிங் ஹாலில் பலர் பசியுடன் உட்கார்ந்து இருந்தனர். அவர்களில் சிலர் எரிச்சலடைந்தார்கள். பகவான் வராமல் யாரும் சாப்பிடுவது இல்லை. நேரமோ ஆகிக்கொண்டு இருந்தது! தரிசிக்க வந்த ஒருவர் தாமதத்தின் காரணத்தை அறிய வெளியே வந்தார். பகவானைப் பார்த்து எல்லாரும் காத்துக்கொண்டு இருக்கா என்றார்.
பகவான் இங்கே உங்களுக்காக மட்டும்தான் நான் இருக்கறதா நினைக்கறேளா? ஏன்? உங்களுக்கு மட்டுமே நான் சொந்தமா? மலையிலே இருந்தப்ப நீங்க எல்லாம் எங்கே போனேள்? இந்த சின்னபையன் மாதிரி சிலர்தான் அவாளோட கூழை கொடுத்து பாத்துண்டா. அப்போ எல்லாரும் எங்கே போனேள்?” என்று கடிந்து கொண்டு தன் நண்பரையும் உணவுக்கு அழைத்துக்கொண்டு உள்ளே போனார்.

   

No comments: