Pages

Friday, April 24, 2015

அடியார்கள் - யாழ்ப்பாணி, ரங்கையர்


ஸ்கந்தாஸ்ரம நாட்களில் ஒருவர் ஆஸ்ரமத்தை சுத்தம் செய்யும் பணியில் இருப்பார். அவர் பெயரே யாருக்கும் தெரியாது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்ததால் அவரை யாழ்ப்பாணி என்றே அழைத்தனர்.
ஒரு நாள் பகவான் தன்னை தரிசிக்க வந்த ஒரு ஸ்வாமியிடம் எதேச்சையாக ஒரு நோட்டிலே சில பாடல்களை எழுதி வைத்திருந்தேன். அதை உத்தர காசியில் இருந்து வந்த ஒரு சுவாமி பார்க்க வாங்கினார். திருப்பித்தராமலே போயிட்டார். கொண்டு போய் பல மாசங்கள் ஆச்சு. அது இருந்தா தேவலை போலிருக்குஎன்றார்.
திடீரென்று யாழ்பாணியை சில நாட்கள் காணவில்லை. ஏன் எங்கே போனார் என்று யாருக்கு, தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் திரும்பினார். பகவான் முன் அந்த நோட்டுப்புத்தகத்தை வைத்து வணங்கினார்! பகவான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றார்.
பகவான் பேசியதை அங்கே சுத்தம் செய்து கொண்டு இருந்த யாழ்பாணி கேட்டுக்கொண்டு இருந்தார். உடனே கிளம்பி ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் உத்தர காசிக்கு பயணித்து அந்த சுவாமியை தேடிப்பிடித்து சந்தித்து நோட்டுப்புத்தகத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டு உடனே திரும்பியிருக்கிறார்!

விளாச்சேரி ரங்கையர் ஒரு முறை பகவானை தரிசிக்க வந்தார். அப்போது வந்த கிராமத்து ஆசாமிகள் இருவர் பகவானிடம் வந்து விபூதி கொடுங்க சாமிஎன்றனர். பகவான் விபூதி இருக்கும் இடத்தைக் காட்டி அங்கே இருக்கு எடுத்துக்கோஎன்றார். அவர்கள் உங்க கையாலே கொடுங்க சாமி என்றனர். பகவான் உங்க கைக்கும் என் கைக்கும் வித்தியாசம் இல்லைஎன்றார்.
வந்தவர்கள் ஏமாற்றத்துடன் விபூதியை எடுத்துக்கொள்ளாமலே திரும்பினர்.
ரங்கையர் அவர்களை பின்தொடர்ந்து சென்று என்ன விஷயம் என்று கேட்டார். ஒருவர் சாமி, எனக்கு குஷ்ட ரோகம் இருந்தது. சும்மா மலைக்கு வந்தேன் அப்ப சாமி கூப்டு விபூதி கொடுத்து உடம்பெல்லாம் பூசிக்க சொல்லுச்சு! நானும் பூசிக்கிட்டேனா? அடுத்த நாளே குஷ்டம் இருந்த இடம் தெரியலே! இவருக்கும் குஷ்டம். அதான் கூட்டி வந்தேன். ஆனா சாமி விபூதி தரலே!” என்றார்.

ரங்கையருக்கு க்‌ஷீண தசை ஏற்பட்டது. கடன் நிறைய கூடியது. வேலை தேடி சென்னை போகும் வழியில் பகவானை தரிசிக்க வந்தார். பகவான் ரங்கா, நீ ஆம்பிளை. எங்கே வேணுமானாலும் போகலாம். எப்படி வேணுமானாலும் இருக்கலாம். ஆனா பெண்கள் குழந்தைகள் அப்படி இல்லை. ஊர்ல அவர்களுக்கு தேவையான ஏற்பாடு பண்ணிட்டுத்தானே வந்தே?” என்று கேட்டார்.
ஆமாம், பணம் கொடுத்துட்டுத்தான் வந்தேன் என்றார் ரங்கையர்.
அந்த பதிலில் பகவானுக்கு திருப்தி ஏற்படவில்லை. “என்னமோ சொல்றே, சரி என்றார். சில நாட்களில் ரங்கையரின் அண்ணா வந்தார். அவரிடம் குடும்ப சூழ்நிலையை பகவான் விசாரித்து அறிந்தார்.
சென்னை சென்ற ரங்கையர் வேலை எதுவும் கிடைக்காமல் திருவண்ணாமலை திரும்பினார். “ரங்கா, நீ பணம் கொடுத்துட்டு வந்ததா சொன்னே, ஆனால் ஊர்ல எல்லாரும் ரொம்ப சிரமப்படறாளாமே?” என்று கேட்டார் பகவான். ரங்கையரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அன்று அவரால் தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு இருந்தார்.
என்ன ரங்கா தூக்கம் வரலியோ?” என்று குரல் கேட்டது. கண் திறந்தால் பகவான் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்.
காசு பணம்ன்னு கவலைப்படறியா? அதெல்லாம் ஒரு கனவு மாதிரி. கனவில உன்னை அடிக்கறா, நீயும் கஷ்டப்படறே, எப்படி தப்பிக்கலாம்ன்னு கவலைப்படறே! தூக்கம் கலைஞ்சால் நீயே இதை நினைச்சு சிரிப்பே!
சரி, ஒரு பத்தாயிரம் இருந்தா போறுமா?” என்றபடி மௌனமானார் பகவான்.
ரங்கையர் கவலை நீங்கியது.
விரைவிலேயே அவருக்கு ஒரு மோட்டார் கம்பனியில் உத்தியோகம் கிடைத்தது. நிறைய பஸ்களை விற்றதில் அவருக்கு கமிஷன் தொகை கணக்கிடப்பட்டு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது!
 

No comments: